மொயீன் அலியின் அபார பந்துவீச்சுடன் சென்னைக்கு முதல் வெற்றி

IPL 2023

103
IPL 2023

சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 6ஆவது லீக் போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவுசெய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை சென்னை சுபர் கிங்ஸ் அணிக்கு வழங்கியது.

>>IPL தொடரிலிருந்து வெளியேறிய கேன் வில்லியம்சன்

முதல் போட்டியில் அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த ருதுராஜ் கைக்வாட், அணியுடைய சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முதல் விக்கெட்டுக்காக ருதுராஜ் கைக்வாட் மற்றும் டெவோன் கொன்வே ஆகியோர் சத இணைப்பாட்டத்தை பதிவுசெய்ய, 110 ஓட்டங்களை சென்னை சுபர் கிங்ஸ் அணி பெற்றுக்கொண்டது. இதில் ருதுராஜ் கைக்வாட் 31 பந்துகளில் 57 ஓட்டங்களையும், டெவோன் கொன்வே 29 பந்துகளில் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தனர்.

இவர்களின் மிகச்சிறந்த ஆரம்பத்துடன் சிவம் டுபே 16 பந்துகளில் 27 ஓட்டங்களையும், அம்பத்தி ராயுடு 14 பந்துகளிலும் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இறுதியாக 3 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடங்கலாக மகேந்திரசிங் டோனி 12 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, சென்னை சுபர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் மார்க் வூட் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

மகேந்திரசிங் டோனி இந்தப் போட்டியில் 12 ஓட்டங்களை பெற்றதுடன், IPL தொடரில் 5000 ஓட்டங்களை கடந்த 6ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார். இவர் 208 இன்னிங்ஸ்களில் 5004 ஓட்டங்களை குவித்துள்ளார்.

சென்னை சுபர் கிங்ஸ் அணி நிர்ணயித்திருந்த கடினமான வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிக்கு கெயல் மேயர்ஸ் அற்புதமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். அபாரமாக ஆடிய இவர் வெறும் 22 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்ததுடன், முதல் 6 ஓவர்களில் லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி 80 ஓட்டங்களை குவித்தது.

மேயரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து தீபக் ஹூடா மற்றும் கே.எல். ராஹூல் அடுத்தடுத்து ஆட்டமிழக்க சுபர் ஜயண்ட்ஸ் அணி தடுமாற தொடங்கியது. அதுமாத்திரமின்றி குர்னால் பாண்டியா மற்றும் மார்கஸ் ஸ்டொயினிஸ் ஏமாற்றமளித்து வெளியேற, நிக்கோலஸ் பூரன் மாத்திரம் 18 பந்துகளில் 32 ஓட்டங்களை பெற்று சென்னை அணிக்கு சற்று சவாலை கொடுத்திருந்தார்.

இறுதியாக ஆயுஸ் பதோனி மற்றும் கிரிஷ்ணப்பா கௌதம் ஆகியோர் வெற்றியிலக்கை அடைய போராடியிருந்த போதும், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து சுபர் ஜயண்ட்ஸ் அணியால் 205 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்ததுடன் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் மொயீன் அலி அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும், துஷார் தேசபாண்டே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தங்களுடைய சொந்த மைதானத்தில் விளையாடிய சென்னை சுபர் கிங்ஸ் அணி, இம்முறை IPL தொடரில் முதல் வெற்றியினை பதிவுசெய்து புள்ளிப் பட்டியலில் 6ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<