லிவர்பூல், PSG அணிகளுக்கு எதிர்பாராத தோல்வி

89

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் சுற்றின் (Round of 16) முதல் கட்டப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (19) ஆரம்பமாகின. முதல் நாளின் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அதன் விபரம் வருமாறு,

லிவர்பூல் எதிர் அட்லடிகோ மெட்ரிட்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் நடப்புச் சம்பியனான லிவர்பூல் ஸ்பெயினின் அட்லெடிகோ மெட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்று பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதில் நெருக்கடியை சந்தித்துள்ளது. 

கடந்த முறை இறுதிப் போட்டியில் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் அணியை 2-0 என தோற்கடித்து கிண்ணத்தை வென்ற அட்லெடிகோவின் வன்டா மெட்ரோபொலிடானோ அரங்கு இந்த முறை லிவர்பூல் அணிக்கு சாதகமாக இருக்கவில்லை.   

சொந்த ரசிகர்கள் முன் உற்சாகத்தோடு போட்டியை ஆரம்பித்த அட்லடிகோ, ஆரம்பத்திலேயே  ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தது. போட்டியின் நான்காவது நிமிடத்தில் ஸ்பெயின் மத்தியகள வீரர் சாவுல் நிகுஸ் நெருக்கமான தூரத்தில் இருந்து பந்தை வலைக்குள் செலுத்தினார்.

எனினும் அட்லடிகோ தனது வழக்கமான ஆக்கிரமிப்பு ஆட்டத்தை இந்தப் போட்டியில் வெளிப்படுத்தவில்லை. பின்களத்தில் மொஹமட் சலாஹ், ரொபார்டோ பிர்மினோ மற்றும் சாடியோ மானே ஆகிய எதிரணி கோல் இயந்திரங்கள் உள்ளே வராமல் பொறுமையாக காத்திருந்தனர்.  

முதல் பாதியில் சைம் விரலிஜ்கோவுடன் மோதலில் ஈடுபட்ட மானே அதிர்ஷ்டவசமாக மஞ்சள் அட்டையுடன் தப்பினார். சலாஹ்வுக்கு பதில் கோல் திருப்ப வாய்ப்புக் கிடைத்தபோது அவர் தலையால் முட்டிய பந்து வெளியே பறந்தது. பிற்பகுதியில் எதிரணி பெனால்டி பெட்டிக்குள் வைத்து ஹென்டர்சனுக்கு கோல் பெறும் வாய்ப்பு ஒன்று நூலிழையில் தவறியது.  

இந்நிலையில் சாடியோ மானே மற்றும் சலாஹ் ஆகியோருக்கு பதில் முறையே டிவொக் ஒர்கி மற்றும் அலெக்ஸ் ஒக்லாடே-சம்பர்லெயின் ஆகியோரை பயிற்சியாளர் ஜுர்கன் க்ளொப்ஸ் அனுப்பியபோதும் அதுவும் வெற்றி அளிக்கவில்லை.   

ப்ரீமியர் லீக் தொடரில் 26 போட்டிகளில் 25 இல் வென்று கிண்ணத்தை நெருங்கி இருக்கும் லிவர்பூல் சம்பியன்ஸ் லீக்கில் அந்த திறனை வெளிப்படுத்த தவறி வருகிறது. இந்தப் பருவத்தில் அனைத்துப் போட்டித் தொடர்களிலும் லிவர்பூல் தோற்ற மூன்று போட்டிகளில் இரண்டு சம்பியன்ஸ் லீக் ஆட்டங்களாகும். 

சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றின் இரண்டாவது கட்டத்தில் வரும் மார்ச் 11 ஆம் திகதி லிவர்பூல் தனது சொந்த மைதானமான அன்பீல்டில் அட்லடிகோ மெட்ரிட் அணியை எதிர்கொள்ளவுள்ளது. காலிறுதிக்கு முன்னேற அதில் கோல் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது அவசியமாகும்.

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் எதிர் பெருசியா டோர்ட்முண்ட்

எர்லிங் ஹாலன்டின் இரட்டைக் கோல் மூலம் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு எதிரான போட்டியில் பொருசியா டோர்ட்முண்ட் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.  

வடமேற்கு ஜெர்மனியில் டோர்ட்முண்டின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பெறாதபோதும் நோர்வே நாட்டின் 19 வயது ஹாலன்ட் மீண்டும் ஒருமுறை தனது ஆபார ஆட்டத்தை வெளிப்படத்தினார். 

69ஆவது நிமிடத்தில் கோல் பகுதிக்குள் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்கு இடையே பந்து தனது பக்கமாக வந்ததைப் பயன்படுத்தி டோர்ட்முண்ட் சார்பில் ஹாலன்ட் முதல் கோலை திருப்பினார். 

மறுபுறம் நான்கு போட்டிகளின் பின் மீண்டும் அணிக்குத் திரும்பிய நெய்மர் 75 ஆவது நிமிடத்தில் ம்பப்பே உதவே PSG சார்பில் பதில் கோல் திருப்பினார். 

ஒரு நிமிடம் கழித்து மீண்டும் செயற்பட்ட ஹாலன்ட் ஆபார கோல் ஒன்றை பெற்றார். கியோ ரெய்னெ வழங்கிய பந்தை நெய்மரை முறியடித்து பெனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து கோல் புகுத்தினார். 

இந்த கோல்கள் மூலம் ம்பப்பேவுக்கு அடுத்து சம்பியன்ஸ் லீக்கில் 10 கோல்களை எட்டிய இரண்டாவது இளம் வீரராக ஹாலன்ட் இடம்பிடித்ததோடு இந்தப் பருவத்தில் அவர் மொத்தம் 29 போட்டிகளில் பங்கேற்று 39 கோல்களை பெற்றுள்ளமை குறிப்பிட்டத்தக்கது. 

சம்பியன்ஸ் லீக்கின் 16 அணிகள் சுற்றில் வைத்து கடந்த மூன்று பருவங்களிலும் வெளியேறிய PSG தனது சொந்த மைதானத்தில் வரும் மார்ச் 11 ஆம் திகதி இரண்டாம் கட்டப் போட்டியில் பெருசியா டோர்ட்முண்ட் அணியை எதிர்கொள்ளவுள்ளது. காலிறுதிக்கு முன்னேற அந்த அணிக்கு கடைசி சந்தர்ப்பமாக அது இருக்கும்.