கடைசி நேர கோலால் தோல்வியை தவிர்த்த ரியல் மெட்ரிட்

64
Cristiano Ronaldo

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா, இத்தாலி சிரீ A மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

ரியல் மெட்ரிட் எதிர் வலென்சியா

போட்டி முடியும் தறுவாயில் கரிம் பென்சமாவின் அபார கோல் மூலம் வலென்சியா அணிக்கு எதிரான போட்டியை ரியல் மெட்ரிட் 1-1 என சமநிலை செய்தது. எனினும் அந்த அணி லா லிகா புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற அது போதுமாக இருக்கவில்லை.

முதல்பாதி ஆட்டம் கோலின்றி இழுபறி நீடித்தபோதும் 78 ஆவது நிமிடத்தில் கார்லஸ் சோலர் பெற்ற கோல் மூலம் வலென்சியா அணி முன்னிலை பெற்றது

இந்நிலையில் போட்டி முடியும் நேரத்தில் கிடைத்த கோனர் கிக்கை ரியல் மெட்ரிட் கோல்காப்பாளர் திபவுட் கோர்டொயிஸ் தலையால் முட்டி வலையை நோக்கி செலுத்தியபோது எதிரணி கோல்காப்பாளர் தட்டிவிட்ட பந்து பென்சமாவிட வர அதனை அவர் கோலாக மாற்றினார்

கோல் வித்தியாசத்தில் பார்சிலோனாவை விடவும் ரியல் மெட்ரிட் பின்தங்கி இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான எல் கிளாசிகோ போட்டி கேம்ப் நூவில் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.  

ஜுவன்டஸ் எதிர் யுடினசே

கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்ற இரட்டை கோல் மூலம் யுடினசே அணிக்கு எதிரான போட்டியை 3-1 வென்ற கோல் வித்தியாசத்தில் வென்ற ஜுவன்டஸ் சீரி A லீக்கில் முதலிடத்திற்கு தற்காலிகமாக முன்னேற்றம் கண்டது

போட்டியின் 9ஆவது நிமிடத்திலேயே பெனால்டி எல்லையின் விளம்பில் இருந்து கோல் ஒன்றை பெற்ற ரொனால்டோ 37 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை புகுத்தினார். அவர் தொடர்ச்சியாக நான்காவது போட்டியில் பெறும் கோல்களாகவும் இது இருந்தது

இந்நிலையில் கொன்சலஸ் ஹிகுவைன் ஜுவன்டசுக்காக மூன்றாவது கோலையும் பெற அந்த அணி முதல் பாதியிலேயே 3-0 என முன்னிலை வகித்தது

எனினும் பிளோரன்டீனா அணிக்கு எதிரான போட்டியை 1-1 என சமன் செய்ததன் மூலம் இன்டர் மிலான் அணி ஜுவன்டஸை பின்தள்ளி முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது

மன்செஸ்டர் சிட்டி எதிர் ஆர்சனல்

எமிரேட் அரங்கில் நடைபெற்ற போட்டியில் மன்செஸ்டர் சிட்டி 3-0 என வெற்றிபெற்றதன் மூலம் ஆர்சனல் அணி மேலும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது

கெவின் டிப்ருயின் 3 மற்றும் 40 ஆவது நிமிடங்களில் அபார கோல்களை பெற்றதோடு, ரஹிம் ஸ்டர்லிங் 15 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் மன்செஸ்டர் சிட்டி முதல் பாதியிலேயே 3-0 என முன்னிலை பெற்றது.   

மன்செஸ்டர் சிட்டியிடம் லீக் போட்டிகளில் ஆர்சனல் தொடர்ச்சியாக சந்திக்கும் ஐந்தாவது தோல்வியாக இது இருந்தது.

வெல்வர்ஹம்டன் வொன்டரஸ் எதிர் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர்

ஜான் வெர்டோகனின் கடைசி நேர கோல் மூலம் வொன்டரஸ் அணிக்கு எதிரான போட்டியை டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் 2-1 என வெற்றியீட்டியது

சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்ற டொட்டன்ஹாம் அணிக்காக 8 ஆவது நிமிடத்தில் லுகாஸ் மௌரோ தனித்து பந்தை கடத்திச் சென்று கோல் பெற்றார்

எனினும் அடம் டோரே 67ஆவது நிமிடத்தில் வொன்டரஸ் சார்பில் பதில் கோல் திருப்ப, போட்டி முடியும் நேரத்தில் வெர்டோகன் தலையால் முட்டி வெற்றி கோலை பெற்றார்.

டொட்டன்ஹாம் முகாமையாளராக ஜோஸ் மொரின்ஹோ கடந்த மாதம் பொறுப்பேற்ற பின் அந்த அணி ஆடிய ஐந்து போட்டிகளில் பெற்ற நான்காவது லீக் வெற்றி இதுவாகும்

மன்செஸ்டர் யுனைடட் எதிர் எவர்டன்

இளம் மேசன் கிரீன்வுட் பெற்ற கடைசி நேர கோல் மூலம் எவர்டன் அணிக்கு எதிரான போட்டியை மன்செஸ்டர் யுனைடட் 1-1 என சமநிலை செய்தது

இந்த முடிவின் மூலம் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் யுனைடட் 6ஆவது இடத்தில் இருப்பதோடு எவர்டன் 16 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது. எனினும் இந்தப் போட்டியில் விக்டர் லென்டலொப் 36 ஆவது நிமிடத்தில் பெற்ற ஓன் கோலினாலேயே எவர்டன் ஆரம்பத்தில் முன்னிலை பெற்றமை குறிப்பிடத்தக்கது

பரிஸ் செயின்ட் ஜெர்மைன் எதிர் செயின்ட் எடின்னே

10 வீரர்களுடன் ஆடிய செயின்ட் எடின்னே அணியை துவம்சம் செய்த பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 4-0 என வெற்றி பெற்றதன் மூலம் லீக் 1 தொடரில் ஏழ புள்ளிகள் இடைவெளியுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது

லின்ட்ரோ பெரடஸ் ஆரம்பத்திலேயே பெற்ற கோல் மூலம் PSG முன்னிலை பெற்ற நிலையில் 25 ஆவது நிமிடத்தில் செயின்ட் எடின்னே வீரர் ஜீன் எயுடஸ் சிவப்பு அட்டை பெற்றார்.

இந்நிலையில் கைலியன் ம்பப்பேவின் இரட்டை கோல் மற்றும் மௌரோ இகார்டியின் கோல்கள் மூலம் PSG இலகு வெற்றியை பெற்றது. எனினும் மெஸ்ஸி பெனால்டி வாய்ப்பு ஒன்றை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.