இளம் வீரர்கள் மூலம் நம்பிக்கை பெற்றுள்ள திமுத் கருணாரத்ன

Sri Lanka tour of South Africa 2020/21

209

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வியுற்ற போதும், இளம் வீரர்கள் நம்பிக்கை தரும் வகையில் விளையாடியதுடன், சில முன்னேற்றங்களையும் அணி கண்டறிந்துள்ளது என திமுத் கருணாரத்ன தெரிவித்தார்.

இலங்கை அணியானது, கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு பிறகு, தென்னாபிரிக்க அணிக்கு எதிராக முதல் சர்வதேச போட்டியில் விளையாடியதுடன், டெஸ்ட் தொடரை 2-0 என இழந்தது.

>>இலங்கையின் முன்னாள் பயிற்சியாளரை தமக்காக எடுக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

குறித்த இந்த தொடரில் அடைந்த தோல்விக்கு முக்கிய காரணம், வீரர்களின் உடற்தகுதி மற்றும் உபாதை என இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

“நாம் நீண்ட நாட்களுக்கு பின்னர், சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியதுடன். நேரடியாக தென்னாபிரிக்கா வருகைத்தந்து, வொண்டரஸ் மற்றும் சுப்பர் ஸ்போர்ட்ஸ் பார்க் போன்ற மைதானங்களில் விளையாடிகின்றோம். இது இலகுவான விடயமல்ல.

தொடரை பொருத்தவரை, உடற்தகுதியில்தான் நாம் மிகவும் பின்னடைவில் இருந்தோம். அதிகமான உபாதைகளுக்கு முகங்கொடுத்தோம்.  கொவிட்-19 தொற்று காரணமாக நீண்ட நாட்களுக்கு உடற்தகுதி பயிற்சிகளை மேற்கொள்ள முடியவில்லை. அத்துடன், நீண்ட நாட்களுக்கு பின்னர் விளையாடும் போதும், தயார்படுத்தல்களுக்கான காலம் மிகவும் குறைவாக இருந்தது.

முதல் போட்டியில் நாம் சிறந்த இடத்திலிருந்தோம். மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கைகையை தென்னாபிரிக்க ஆடுகளங்களில் குவிப்பது இலகுவான விடயமல்ல. ஆனால், உபாதைகள் காரணமாக, எமது பந்துவீச்சாளர்களை இழந்தோம். குழாத்தில் ஐந்த அல்லது ஆறு முன்னணி வீரர்கள் இழக்கப்படும் போது, ஏனைய வீரர்களின் எண்ணம் தளர்வடையும். குறிப்பாக இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடும் போது, வீரர்களின் இழப்பு மிகப்பெரிய பாதிப்பாக அமையும்”

இலங்கை வீரர்களின் உபாதைகள் ஒருபக்கம் இருந்தாலும், இளம் வீரர்களின் பங்களிப்பு மிகச்சிறப்பாக அமைந்ததுடன், கடந்தகாலத்தை விட, இந்த தொடரில் சற்று முன்னேறியுள்ளோம் என திமுத் கருணாரத்ன சுட்டிக்காட்டினார்.

“குறிப்பாக குசல் பெரேராவின் துடுப்பாட்டம். விஷ்வ பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ மற்றும் வனிந்து ஹசரங்க போன்ற வீரர்கள் சிறப்பாக செயற்பட்டனர். கடந்த காலத்தைவிட சிறந்த விடயங்களை செய்துள்ளோம். தென்னாபிரிக்காவில் அதிக ஓட்ட எண்ணிக்கை மற்றும் வொண்டரசில் அதிக ஓட்ட எண்ணிக்கை என்பவற்றை பெற்றிருக்கின்றோம்.

வனிந்து ஹசரங்கவால் இந்த ஆடுகளங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றுவது கடினம் என்றாலும், துடுப்பாட்டத்தில் பங்களிப்பை வழங்கி, சிறந்த சகலதுறை வீரர் என்பதை நிரூபித்துள்ளார். அதேநேரம், முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில், விஷ்வ பெர்னாண்டோ மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். இது மகிழ்ச்சியான விடயமாகும். காரணம், முன்னணி வீரர்கள் உபாதைக்கு உள்ளானால், இதுபோன்ற மாற்றுவீரர்கள் இருக்கிறார்கள் என மகிழமுடியும்.

>>கட்டுப்படுத்தப்பட்ட பயிற்சிகளில் ஈடுபடவுள்ள இங்கிலாந்து!

அதேநேரம், குசல் பெரேராவின் பயமின்றிய துடுப்பாட்டம் மற்றுமொரு சாதகமாகும். அவரின் ஓட்டவேகத்தால், என்னுடைய அழுத்தத்தை குறைக்க முடியும். இதுபோன்ற வீரர் ஒருவர் தேவை. எனவே, இவ்வாறான நம்பிக்கையான விடயங்கள் இந்த தொடரில் எமக்கு கிடைத்துள்ளனஎன்றார்.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்கள் நாட்டை வந்தடைந்து தனிமைப்படுத்தலில் உள்ள நிலையில், தொடர்ந்து, எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ள இங்கிலாந்து தொடருக்காக தயாராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<