20க்கு இருபது உலகக் கிண்ண  கிரிக்கட் போட்டித் தொடரின் 19ஆவது போட்டி மஹேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி மற்றும் ஷஹிட் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியை கொல்கத்தாவில் அமைந்துள்ள  ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர் கொண்டது.

பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில்  பங்களாதேஷ் அணியை வென்று இருந்தது. கொல்கத்தா மைதானத்தில் தான் இந்த வெற்றியை பெற்றது. உலகக் கிண்ண வரலாற்றிலே பாகிஸ்தான் அணி இந்திய அணியோடு வெற்றி பெற்றதே இல்லை இதனால் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் முழு நம்பிக்கையுடன் களம் இறங்கியது.  மறு புறத்தில் இந்தியா கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இந்த போட்டியில் விளையாடியது.

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் முஹமது ஷமி  இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் கடந்த நியுசிலாந்து அணியுடனான போட்டியில் விளையாடிய அதே அணியே இன்றும் களம் இறங்கியது. பாகிஸ்தான் அணியைப் பொறுத்த வரையில் கடந்த போட்டியில் விளையாடிய இமாத் வசீமிற்கு இன்றைய போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டு முகமத் சமியிற்கு விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் படி பாகிஸ்தான் அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது.

போட்டி மழை காரணாமக ஒரு மணி நேரம் தாமதமாக 8.30 மணிக்குத் தொடங்கியது. இதனால் போட்டி   2 ஓவர்கள் குறைக்கப்பட்டு 18 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.

தீர்மானமிக்க இந்த போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் டோனி முதலில் எதிரணியான பாகஸ்தான் அணியை துடுப்பாட பணித்தார்.

டோனியின் அழைப்புக்கு அமைய பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக  களமிறங்கிய

CRICKET-WT20-2016-IND-PAK

அஹமத்  ஷெசாத் மற்றும் சர்ஜீல் கான் ஆகிய இருவரும் ஆரம்பம் முதல் ஓட்டங்களைப் பெற சிரமப்பட்டனர்.

துடுபாட்டத்துக்கு  சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியது.  குறிப்பாக அஸ்வின் மற்றும் ஜடேஜாவின்  பந்து எங்கு செல்கிறது என்றே பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்களுக்கு தெரியவில்லை.

பாகிஸ்தான் அணி 5 ஓவர் முடிவில் விக்கட் இழப்பின்றி 25 ஓட்டங்களை மட்டுமே எடுத்து இருந்தது. 24 பந்துகளை சந்தித்து 17 ஓட்டங்களைப் பெற்றிருந்த  சர்ஜீல் கான் சுரேஷ் ரெய்னா வீசிய பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். கடந்த பங்களாதேஷ் உடனான போட்டியில் அரைச்சதம் பெற்ற அஹமத்  ஷெசாத்  25 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஜஸ்பிரிட் பும்ரா வீசிய பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அதிரடியாக விளையாடி ஓட்டங்களைக் குவிக்கும் எண்ணத்தோடு  துடுப்பாட வந்திருந்த பாகிஸ்தான் அணித் தலைவர் ஷஹிட் அப்ரிடி,  14 பந்துகளில் 8 ஓட்டங்களை மட்டுமே எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் பந்துக்கு ஆட்டம் இழந்தார். 60 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து இருந்த நிலையில் ஜோடி சேர்ந்த சொஹைப்  மலிக் மற்றும் உமர் அக்மல் ஆகியோர்  அதிரடியாக ஆட, பாகிஸ்தான் அணியின் ஓட்டங்கள்  வேகமாக உயர்ந்தது. சிறப்பாக ஆடிய உமர் அக்மல் 16 பந்துகளில் 22 ஓட்டங்களைப் பெற்று  ஆட்டம் இழந்தார். அவரோடு சேர்ந்து அதிரடியாகத்  துடுப்பாடிய சொஹைப் மலிக் 26 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி  நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றது.  இந்திய அணியின் தரப்பில் அஷிஷ் நெஹ்ரா, ஜஸ்ப்ரிட்  பும்ரா, ஹர்திக் பாண்டியா, சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து பாகிஸ்தான் அணியின் பலமான  பந்து வீச்சை சமாளித்து 119 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முதல் 5 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து தடுமாறியது. ஓட்டங்களைப் பெறுவார் என்று மிகவும் எதிர்ப்பாக்கப்பட்ட ரோஹித் சர்மா 10 ஓட்டங்களோடு முஹமத் அமிர் வீசிய பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஓட்டங்களைப் பெறத் தவறி வரும் ஷீகர் தவான் இந்த போட்டியில் 15 பந்துகளில் 6 ஓட்டங்களைப் பெற்று  ஏமாற்றம் அளித்தார். அவர் ஆட்டம் இழந்து அடுத்த பந்திலேயே சுரேஷ் ரெய்னாவும்  ஓட்டம்

CRICKET-WT20-2016-IND-PAK

எதுவும் பெறாமல் ஆட்டம்  இழக்க இந்திய அணி நெருக்கடியில் விழுந்தது.  அதன் பின் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராத் கொஹ்லி மற்றும், யுவராஜ் சிங்கும்  இந்திய அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். இருவரும் இலகுவான பந்துகளில் பவுண்டரிகளையும் ,மற்ற

பந்துகளில்ஒன்று இரண்டு ஓட்டங்களை அடித்து அணியின் ஓட்டத்தை உயர்த்தினார்கள். இருவரும் இணைந்து 4ஆவது விக்கட்டுக்காக 61 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்ற நிலையில் இந்திய அணி 84 ஓட்டங்களைப் பெற்று  இருந்த போது யுவராஜ் சிங் 24 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார்.

ஒரு பக்கம் விக்கட்டுகள் விழுந்தாலும் விராத் கொஹ்லி  ஒருமுனையில் தூண் போல் நின்று போராடினார். தலைவர் மஹேந்திர சிங் டோனியும்  சூழ்நிலையை உணர்ந்து ஒன்று இரண்டு  ஓட்டங்களைப் பரிமாற இந்திய அணி மெது மெதுவாக  வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியது. அற்புதமா விளையாடிய  விராத் கொஹ்லி 35 பந்துகளில் அரைச் சதம் அடித்தார்.

இறுதியில்  மஹேந்திர சிங் டோனி ஒரு சிக்ஸ், அதனை தொடர்ந்து ஒரு ஓட்டம் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். பொறுப்பாக விளையாடிய விராத் கொஹ்லி 37 பந்துகளில்  7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 55 ஓட்டங்களை எடுத்து இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக

CRICKET-WT20-2016-IND-PAK

விளங்கினார். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில்  முஹமத் சமி அதிகப்பட்சமாக 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த விராத் கொஹ்லி தெரிவு செய்யப்பட்டார். இன்றைய போட்டியின் பின் புள்ளிகள் அட்டவணையில் குழு இரண்டின் தரவரிசையில்  தொடர்ந்து பாகிஸ்தான் அணி 2ஆவது இடத்தில் உள்ளது.  2 வெற்றிகளோடு நியுசிலாந்து அணி முதல் இடத்திலும்  இந்திய அணி 3ஆவது இடத்திலும் காணப்படுகிறது.

டி20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் இன்று நடைபெறும்  2 போட்டிகளில் 3 மணிக்கு ஆரம்பமாகும் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் தமது முதலாவது வெற்றிக்காக விளையாடுகின்றன. 7.30 மணிக்கு ஆரம்பமாகும் 2ஆவது போட்டியில் இலங்கை மற்றும் மேற்கு இந்திய தீவுகள் பலப்பரீட்சை நடாத்துகின்றன.