பங்களாதேஷில் இடம்பெற்று முடிந்திருக்கும் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கான இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி இலங்கையின் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியை 144 ஓட்டங்களால் அபாரமாக தோற்கடித்து, இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் சம்பியன்களாக ஆறாவது தடவையாகவும் நாமம் சூடியுள்ளது.
ஆசியாவில் உள்ள எட்டு நாடுகளின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கு இடையில், ஆசிய கிரிக்கெட் பேரவை (ACC) ஏழாவது முறையாக ஒழுங்கு செய்திருந்த இந்த இளையோர் ஆசியக் கிண்ணத் தொடர், கடந்த மாதம் ஆரம்பமாகியிருந்ததோடு தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளை இலங்கை மற்றும் இந்தியாவின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகள் முறையே தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.
>> துல்ஷான், நுவனிது ஆகியோர் அசத்த இளையோர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை
டாக்காவின் சேரி பங்களாதேஷ் மைதானத்தில் இன்று (7) ஆரம்பமான இறுதிப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இந்தியாவின் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணித் தலைவர் பிரப் சிம்ரன் சிங், முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்புக்காக தேர்ந்தெடுத்திருந்தார்.
இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய இளையோர் கிரிக்கெட் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான யஷாஷ்வி ஜஷ்வால் மற்றும் அனுஜ் ராவட் ஆகியோருடன் அட்டகாசமான ஆரம்பத்தை காட்டியது. இரண்டு வீரர்களும் அரைச்சதம் பெற்றதுடன், முதல் விக்கெட்டுக்காக 121 ஓட்டங்களையும் இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.
தொடர்ந்து இலங்கை வீரர்களுக்கு மிகவும் தேவையாக இருந்த முதல் விக்கெட்டை கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் சுழல் வீரரான துனித் வெல்லால்கே கைப்பற்றினார். இந்திய தரப்பின் முதல் விக்கெட்டாக அனுஜ் ராவட் 79 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.
பின்னர், ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான யஷாஷ்வி ஜெஸ்வாலின் விக்கெட்டும் இலங்கையின் இளம் வேகப்புயலான கலன பெரேராவின் வேகத்திற்கு இரையானது. LBW முறையில் ஆட்டமிழந்த ஜெஷ்வால் ஒரு சிக்ஸர் 8 பெளண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டங்களை பெற்று மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இதன் பின்னர், இந்திய இளையோர் அணிக்கு அதன் தலைவர் பிரப் சிம்ரன் சிங் மற்றும் அயுஸ் படோனி ஆகியோர் தமது அதிரடி மூலம் உதவ அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 304 ஓட்டங்கள் குவித்தது.
இந்திய இளையோர் அணியின் துடுப்பாட்டத்தில் தமது அதிரடி மூலம் பங்களிப்பு செய்த அதன் அணித்தலைவர் பிரப் சிம்ரன் சிங் 37 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்களினையும், அயுஸ் படோனி 28 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களினையும் பெற்று இறுதி வரை ஆட்டமிழக்காது இருந்தனர்.
இதேநேரம், இலங்கை தரப்பு பந்துவீச்சு சார்பாக கலன பெரேரா, துனித் வெல்லால்கே மற்றும் கல்ஹார சேனாரத்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
>> இம்மாதம் ஆரம்பமாகவுள்ள மன்னார் சுப்பர் லீக் டி20
இதனை அடுத்து இறுதிப் போட்டியின் சவாலான வெற்றி இலக்கான 305 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி 38.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் படுதோல்வியடைந்ததுடன், இளையோர் ஆசியக் கிண்ணத்தையும் இந்தியாவிடம் பறிகொடுத்தது. இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி இத்தோல்வியோடு இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி ஒன்றில் நான்காவது தடவையாக இந்திய இளையோர் கிரிக்கெட் அணியிடம் தோல்வியினை தழுவியிருந்தது.
இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்தில் நிஷான் மதுஷ்க 49 ஓட்டங்களையும், நவோத் பராணவிதான 48 ஓட்டங்களையும் பெற்று ஆறுதல் தந்த நிலையில் ஏனைய அனைவரும் மோசமாக செயற்பட்டிருந்தனர்.
இந்திய இளம் அணியின் பந்துவீச்சில் இடதுகை சுழல் வீரரான ஹர்ஷ் தியாகி 38 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும், சித்தார்த் தேசாய் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி அவர்களது வெற்றியை உறுதிப் படுத்தியிருந்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகன் விருது இந்தியாவின் இளம் வீரர் ஹர்ஷ் தியாகிக்கு வழங்கப்பட்டதோடு, தொடர் நாயகன் விருதினை இந்திய இளம் அணியின் ஏனைய வீரர் யஷாஷ்வி ஜெஸ்வால் பெற்றுக் கொண்டார்.
ஸ்கோர் விபரம்
முடிவு – இந்திய இளையோர் கிரிக்கெட் அணி 144 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<




















