இலங்கை அணியின் தோல்விக்கான காரணத்தை கூறும் சாமிக்க!

India tour of Sri Lanka 2021

1742
 

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியின் தோல்விக்கு அணியின் துடுப்பாட்டமும், களத்தடுப்பில் விடப்பட்ட தவறுகளுமே காரணம் என இலங்கை அணியின் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன தெரிவித்தார்.

முதல் ஒருநாள் போட்டிக்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, சாமிக்க கருணாரத்ன இதனை தெரிவித்தார். 

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 262 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்ததுடன், சில பிடியெடுப்பு வாய்ப்புகளையும் தவறவிட்டிருந்தது.

இலகு வெற்றியினைப் பதிவு செய்த இந்தியா

நாம் ஓரிரு வாய்ப்புகளை தவறிவிட்டிருந்தோம். குறித்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியிருந்தால் முன்னோக்கி செல்ல முடிந்திருக்கும். இந்திய அணி துடுப்பெடுத்தாடும் போது, அனுபவ ரீதியாக துடுப்பெடுத்தாடினர். அவர்கள் இரண்டாம் மட்ட அணியென கூறினாலும், ஐந்து வீரர்கள் மாத்திரமே இல்லை. அவர்கள் விளையாடும் போது, மிகச்சிறந்த முறையில் ஆடினர் என்றார்.

அத்துடன், இலங்கை அணியின் ஒவ்வொரு துடுப்பாட்ட வீரரும், சிறந்த ஆரம்பத்தை பெற்றிருந்தும் விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்திருந்தமை தொடர்பிலும் சாமிக்க கருணாரத்ன சுட்டிக்காட்டினார்.

எமது அனைத்து வீரர்களும் சிறந்த ஆரம்பத்தை பெற்றனர். எனினும், அதனை கணித்து ஓட்டங்களை குவிக்க முடியாதது துரதிஷ்டமாகும். விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டமையின் காரணமாகவே எமது ஓட்ட எண்ணிக்கை குறைந்தது. எனினும், வீரர்கள் சரியாக துடுப்பெடுத்தாடியிருந்தால் 300 இற்கும் அதிகமான ஓட்ட எண்ணிக்கையை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கும்

இதேவேளை, இலங்கை அணி துடுப்பெடுத்தாடும் போது, ஆடுகளம் சற்று கடினமாக இருந்ததாகவும், அடுத்த போட்டியில் தவறுகளை திருத்திக்கொண்டு விளையாட முடியும் எனவும் சாமிக்க கருணாரத்ன சுட்டிக்காட்டினார்.

நாம் துடுப்பெடுத்தாடும் போது, ஆடுகளம் சற்று கடினமாக இருந்தது. ஆனால், இந்திய அணி துடுப்பெடுத்தாடும் போது துடுப்பாட்டத்துக்கு சாதகமாகியது. நாம், துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்துக்கும் திட்டமிடுவோம். சிலநேரங்களில் குறித்த திட்டங்களில் தவறுகளை விடலாம். 

அணிக்காக நாம் கடுமையாக பயிற்சிகளில் ஈடுபடுகிறோம். எனவே, அடுத்துவரும் போட்டிகளில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை பெறும் போது, இந்திய அணிக்கு கடுமையான சவாலை கொடுக்க முடியும் என நினைக்கிறேன். எனவே, இந்த தவறுகளை திருத்திக்கொண்டு விளையாட எதிர்பார்க்கிறோம் என்றார்.

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளைய தினம் (20) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…