சபரகமுவவை பெனால்டியில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்ற தென் மாகாணம்

492

மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்து சுற்றுத் தொடரில் மிகவும் விறுவிறுப்பான இரண்டாம் கட்ட அரையிறுதியின் நிறைவில் சபரகமுவ அணியை பெனால்டியில் வெற்றிகொண்ட தென் மாகாண அணி, தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

கடந்த வாரம் காலியில் இடம்பெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் கட்ட அரையிறுதிப் போட்டியில் முஷ்பிக் பெற்ற கோலினால் சபரகமுவ அணி 1-0 என வெற்றி பெற்றிருந்தது.

எனவே, எதிரணியின் மைதானமான இரத்தினபுரி சீவெலி அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் தென் மாகாண அணிக்கு வெற்றி கட்டாயமாக இருந்தது.

எனினும், போட்டியின் ஆரம்பம் முதல் கோலுக்கான முயற்சிகளை சபகரகமுவ வீரர்கள் மேற்கொண்டாலும் அவற்றினால் அவர்களுக்கான கோல் கிடைக்கவில்லை.

குறிப்பாக, மத்திய களத்தில் இருந்து வழங்கப்பட்ட பந்தை அணியின் தலைவர் சிபான் முன்னே எடுத்துச் சென்ற போதும் அவர் பந்தை வெளியே அடித்து சிறந்த வாய்ப்பை வீணாக்கினார்.

எனினும், முதல் பாதியின் உபாதையீடு நேரத்தில் தென் மாகாணத்திற்கு கிடைத்த பிரீ கிக்கின்போது ஷதுரங்க மதுஷான் எதிரணியின் கோல் எல்லைக்கு செலுத்த, சக வீரரிடமிருந்து வந்த பந்தை துமிந்த கோலாக்கி தென் மாகாணத்தை முன்னிலைப்படுத்தினார்.

ஏற்கனவே முதல் பாதியில் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டிருந்த சபரகமுவ அணி வீரர் அவிஷ்க டேஷானுக்கு இரண்டாம் பாதி ஆரம்பமாகி சில நிமிடங்களில் அடுத்த மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. எனவே, அவர் சிவப்பு அட்டையுடன் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட, சபரகமுவ அணி 10 வீரர்களுடன் விளையாடியது.

அடுத்த சில நிமிடங்களில் எதிரணியின் கோல் திசையில் வைத்து தென் மாகாணத்திற்கு கிடைத்த பிரீ கிக்கை லக்ஷான் தனன்ஜய பெற்றார். அவர் உள்ளனுப்பிய பந்தை இளம் வீரர் மொஹமட் ரிஸ்லான் கோலுக்கு அருகில் இருந்து வேகமாக முன்வந்து ஹெடர் செய்ய, தென் மாகாணம் இரண்டு கோல்களால் முன்னிலை பெற்றது.

எனினும், போட்டி 90 நிமிடங்களை அண்மித்ததும் சபரகமுவ வீரர் எதிரணியின் கோல் எல்லையில் வைத்து கோலுக்கான முயற்சியை மேற்கொள்ளும்போது, தென் மாகாண பின்கள வீரரால் முறையற்ற விதத்தில் தாக்கப்பட்டமையினால் சபரகமுவ அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சபரகமுவ அணியின் பின்கள வீரர் ஹிஜாஸ் கோலாக்கினார்.

முதல் கட்ட அரையிறுதியைப் போன்றே, இந்தப் போட்டியிலும் தென் மாகாண வீரர் விகும் அவிஷ்க, சிபானை தடுத்தாடியமை சபரகமுவ அணிக்கு பாதகமாக அமைந்தது.

பின்னர் போட்டியின் உபாதையீடு நேரத்தில் சபகமுவ வீரர்கள் அடுத்தடுத்து கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும், ஆட்ட நிறைவில் 2-1 தென் மாகாணம் வெற்றி பெற்றது.

முழு நேரம்: சபரகமுவ 1 – 2 தெற்கு 

எனினும், இரண்டு கட்ட அரையிறுதிகளினதும் நிறைவில் முழு கோல்களின் எண்ணிக்கை தலா இரண்டாக இருந்தமையினால் ஆட்டம் சமநிலையடைய வெற்றியாளரைத் தெரிவு செய்ய பெனால்டி முறைமைக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது.

எனவே, பெனால்டி சூட் அவுட்டில், தென் மாகாண அணித் தலைவரும் கோல் காப்பாளருமான ராசிக் ரிஷாட் இரண்டு சிறந்த தடுப்புக்களை மேற்கொள்ள அவ்வணி பெனால்டி நிறைவில் 4-1 என வெற்றி பெற்று சுதந்திர கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

தொடரின் சம்பியனைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டியில் தென் மாகாண வீரர்கள் வட மாகாணத்தை எதிர்த்தாடவுள்ளனர்.

கோல் பெற்றவர்கள்

  • சபரகமுவ மாகாணம் – மொஹமட் ஹிஜாஸ் 90‘
  • தென் மாகாணம் – DK. துமிந்த 45+2’, மொஹமட் ரிஸ்லான் 54‘

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<