U19 உலகக் கிண்ணம்: முதல் பயிற்சிப் போட்டியில் இலங்கைக்கு இலகு வெற்றி

ICC U19 World Cup 2022

642
Sri Lanka U19

மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகவுள்ள ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னோடியாக அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது பயிற்சிப் போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணி 128 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்துள்துள்ளது.

16 நாடுகள் பங்கேற்கும் ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத் தொடர் இம்மாதம் 14ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகவுள்ள நிலையில், உலகக் கிண்ணத்துக்கு முன்னோடியாக நடைபெறுகின்ற பயிற்சிப் போட்டிகள் நேற்றுமுன்தினம் (09) முதல் ஆரம்பமாகியது.

இந்த நிலையில், கயானாவில் நேற்று (10) நடைபெற்ற பயிற்சிப் போட்டியொன்றில் இலங்கை – அயர்லாந்து 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து 19 வயதின்கீழ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை வயதின்கீழ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சமிந்து விக்ரமசிங்க 5 ஓட்டங்களை எடுத்து ரன்அவுட் ஆகி வெளியேறினார்.

தொடர்ந்து வந்த சனுக நிதர்ஷன லியனகே 19 ஓட்டங்களுடனும், பவன் பதிராஜ 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதில் நிதானமாக விளையாடி வந்த ஷெவோன் டேனியல் 75 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்கமால் வெளியேற, சதீஷ ராஜபக்ஷ 22 ஓட்டங்களை எடுத்தபோது உபாதைக்குள்ளாகி ஓய்வறை திரும்பினார்.

அடுத்து வந்த ரவீன் டி சில்வா, அணித்தலைவர் துனித் வெல்லாலகே ஆகிய வீரர்ககள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், சகலதுறை வீரர் ரனுத சோமரத்ன பெற்றுக்கொண்ட 33 ஓட்டங்களுடன் இலங்கை 19 வயதின்கீழ அணி 43 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 233 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது

அயர்லாந்து 19 வயதின்கீழ் அணியின் பந்துவீச்சில் நேதன் ஜக் மெக்வையர் 2 விக்கெட்டுகளையும், ரூபன் வில்சன் மற்றும் டேனியல் போர்கின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் வீழ்த்தினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 234 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து 19 வயதின்கீழ் அணி 31.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

அயர்லாந்து 19 வயதின்கீழ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக விக்கெட் காப்ப வீரரான ஜோஸுஆ கொக்ஸ் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைப் பெற்று தனது தரப்பில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறினார்.

மறுமுனையில் இலங்கை 19 வயதின்கீழ் அணியின் பந்துவீச்சு சார்பில் வனுஜ சஹன் 3 விக்கெட்டுகளையும், சமிந்து விக்ரமசிங்க, ரவீன் டி சில்வா மற்றும் மதீஷ பத்திரன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தி தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இளையோர் உலகக் கிண்ணத்தின் முதலாவது பயிற்சிப் போட்டியில் வெற்றியினை பதிவுசெய்திருக்கும் இலங்கை 19 வயதின்கீழ் அணி, தங்களுடைய இரண்டாவது பயிற்சிப் போட்டியில் உகண்டா 19 வயதின்கீழ் அணியை நாளை (12) சந்திக்கவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை 19 வயதின்கீழ் அணி – 233/7 (43) – ஷெவோன் டேனியல் 75*, ரனுத சோமரத்ன 33, பவன் பதிராஜ 25, சதீஷ ராஜபக்ஷ 22*, நேதன் ஜக் மெக்வையர் 2/40

அயர்லாந்து 19 வயதின் கீழ் அணி – 105/10 (31.4) – ஜோஸுஆ கொக்ஸ் 44, வனுஜ சஹன் 3/5, சமிந்து விக்ரமசிங்க 3/8, ரவீன் டி சில்வா 2/16, மதீஷ பத்திரன 2/16

முடிவு – இலங்கை 19 வயதின்கீழ் அணி 128 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<