சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதன் மூலம், மூன்றாவது இடத்திலிருந்த தென்னாபிரிக்க அணி நான்காவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
>> இந்திய தொடருக்கான 20 பேர்கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 182 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுக்கொண்டது. அதுமாத்திரமின்றி 2005-2006 பருவகாலத்துக்கு பின்னர் சொந்த மண்ணில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக முதன்முறையாக (17 வருடங்களுக்கு பின்னர்) டெஸ்ட் தொடர் ஒன்றை வெற்றிக்கொண்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய அணி 78.47 என்ற வெற்றி சதவீததத்துடன் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இரண்டாவது இடத்தை பங்களாதேஷ் அணிக்கு எதிரான வெற்றியுடன் இந்திய அணி 58.93 என்ற வெற்றி சதவீதத்தில் தக்கவைத்துள்ளது.
இந்தநிலையில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்வியின் பின்னர் 54.55 என்ற வெற்றி சதவீதத்தில் இருந்த தென்னாபிரிக்க அணி, இரண்டாவது தோல்வியின் பின்னர் மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி, 50 சதவீத வெற்றி சராசரியுடன் நான்காவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
எனவே 53.33 என்ற வெற்றி சதவீதத்தில் இருந்த இலங்கை அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இலங்கை அணிக்கு ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் மேலும் இரண்டு போட்டிகள் உள்ளன. நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டிகளில் வெற்றிபெற்றால் இலங்கை அணியால் இறுதிப்போட்டிக்கு முன்னேறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
அதேநேரம் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணியானது, அடுத்துவரும் இறுதி தொடரில் அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<