ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து அவுஸ்திரேலிய இளம் வீரர் புதிய சாதனை

219
Image Courtesy - Cricket.com.au

அவுஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற 19 வயதுக்கு உட்பட்ட தேசிய சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் சிட்டினியைச் சேர்ந்த 18 வயதுடைய இளம் வீரரான ஒலிவர் டேவிஸ் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் மிகச் சில வீரர்களே ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்துள்ளனர். அந்த வரிசையில் இந்த இளம் வீரரும் இணைந்து கொண்டுள்ளார். இவர் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்ததோடு, அந்த போட்டியில் இரட்டைச் சதமும் பெற்று அசத்தினார்.

வெளிநாட்டு வீரர்களுக்கு ஏமாற்றத்தை வழங்கவுள்ள ஐ.பி.எல் ஏலம்

இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள அடிலெய்ட் நகரில் உள்ள க்ளெண்டோர் மைதானத்தில் நோர்தர்ன் வொரியர்ஸ் டொர்ரிடரி அணிக்கும், நியூ சவுத் வேல்ஸ் மெட்ரோ அணிக்கும் இடையே 19 வயதுக்கு உட்பட்ட தேசிய சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி நேற்று (04) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடிய அந்த அணியின் தலைவர் ஒலிவர் மிகச் சிறப்பாக துடுப்பாடி 74 பந்துகளில் சதம் கடந்தார். அதனைத் தொடர்ந்து தனது அதிரடியை வெளிக்காட்டிய ஒலிவர், ஜேக் ஜேம்ஸ் வீசிய 40 ஆவது ஓவரில் தொடர்ந்து ஆறு சிக்ஸர்கள் அடித்தார். இந்த 6 சிக்ஸர்களையும் ஸ்வீப் திசையில் அசராமல் அடித்திருந்தார். இதன் மூலம் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த முதல் அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.

அது மாத்திரமின்றி, முதல் சதம் அடித்ததில் இருந்து 39 பந்துகளில் இரட்டைச் சதத்தையும் கடந்தார். இதன்படி, அவுஸ்திரேலிய 19 வயதுக்கு உட்பட்ட தேசிய சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டித் தொடரில் இரட்டைச் சதம் கடந்த முதல் வீரராகவும் இடம்பிடித்தார். இதற்கு முன் 2001-2002 காலப்பகுதியில் ஜேசன் க்ரெட்சா இவ்வாறு உள்ளூர் போட்டிகளில் இரட்டைச் சதம் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இந்த தொடர் ஒருநாள் தொடராக மாற்றப்பட்ட பிறகு முதன் முதலாக இரட்டைச் சதம் அடித்த வீரராகவும் ஒலிவர் டேவிஸ் வரலாற்றில் இடம்பிடித்தார். இவருடன் ஜோடி சேர்ந்த சேம் பேனிங் 109 பந்துகளில் 99 ஓட்டங்களை எடுத்தார்.  இருவரும் சேர்ந்து 2 ஆவது விக்கெட்டுக்காக 278 ஓட்டங்களை குவித்தனர்.

இந்தப் போட்டியில் 17 சிக்ஸர்கள் அடித்த இந்த இளம் வீரர் 115 பந்துகளில் 207 ஓட்டங்களைக் குவித்தார். 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளில் ரோஹித் சர்மா, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் ஆகியோர் ஒரே போட்டியில் 16 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். எனினும், அவுஸ்திரேலியாவின் 19 வயதுக்கு உட்பட்ட உள்ளூர் போட்டியில் இந்த இளம் வீரர் அதை விட அதிக சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார். அதே போன்று, 50 ஓவர்கள் கொண்ட போட்டியில் ஹேஷல் கிப்ஸ், யுவராஜ் சிங், சர் கார்பீல்ட் சோபர்ஸ் ஆகியோர் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இது இவ்வாறிருக்க, ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்தது பற்றி கேட்ட போது, ”முதல் இரண்டு பந்துகளை சிக்ஸர் அடித்தவுடன் அனைத்தையும் சிக்ஸர் அடிக்க முடிவு செய்தேன். அது கடைசியில் நிறைவேறியது” என ஒலிவர் தெரிவித்தார்.

தீவிரவாத குற்றச்சாட்டில் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் கைது

நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடி வருகின்ற ஒலிவர் டேவிஸ், இப்பருவகாலத்தில் மாத்திரம் 4 அரைச் சதங்களை குவித்துள்ளார். அத்துடன், அவுஸ்திரேலிய 16 வயதின் கீழ் மற்றும் 19 வயதின் கீழ் அணிகளுக்காக விளையாடியுள்ள அவர், இறுதியாக 19 வயதுக்கு உட்பட்ட பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாடியிருந்தார்.

இதேவேளை, பந்துவீச்சிலும் பிரகாசிக்கும் திறமை கொண்ட ஒலிவர் டேவிஸ், இந்த போட்டியில் தன் ஓப்-ஸ்பின் (off spin) பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். எனினும், குறித்த போட்டியில் இறுதியில் ஒலிவரின் இரட்டைச் சதத்தின் உதவியுடன் நியூ சவுத் வேல்ஸ் மெட்ரோ அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 406 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

எனினும் எதிரணியின் பந்துவீச்சுக்கு தடுமாறிய நோர்தர்ன் வொரியர்ஸ் டொர்ரிடரி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்ளை இழந்து 238 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இதன்படி ஒலிவர் டேவிஸ் தலைமையிலான நியூ சவுத் வேல்ஸ் அணி 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<