சவால்களுடன் T20 உலகக் கிண்ணத்தை இலக்கு வைக்கும் நியூசிலாந்து

ICC Men’s T20 World Cup 2021

168
 

உலகளாவிய ரீதியில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும், விரும்பப்படும் மற்றும் வெறுக்கப்படாத கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக நியூசிலாந்து அணி பார்க்கப்படுகின்றது.

ஒவ்வொரு உலகத் தொடர்களிலும், பலமான அணியாக தொடரை எதிர்கொள்ள ஆரம்பித்தாலும், துரதிஷ்டவசமாக நியூசிலாந்து அணியின் உலகக்கிண்ண கனவு இதுவரையிலும் நிறைவேறவில்லை

இலகு வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தினை ஆரம்பித்த இலங்கை

இறுதியாக 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறியும், கிண்ணத்தின் அருகில் சென்ற நியூசிலாந்து அணியால் துரதிஷ்டவசமாக சம்பியனாக முடியவில்லை.

Gettyimages

எவ்வாறயினும், அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸனின் தலைமையில், தங்களுடைய முதல் T20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்பில் நியூசிலாந்து அணி இம்முறை களமிறங்கியுள்ளது.

நியூசிலாந்து அணி நேரடியாக சுப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், B குழுவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ளது. குறித்த இந்த குழுவில் முதல் சுற்றின் B குழுவில் முதலிடத்தை பெறும் அணி மற்றும் A குழுவில் இரண்டாவது இடத்தை பெறும் அணிகள் விளையாடும்.

T20 உலகக் கிண்ணங்களில் நியூசிலாந்து அணியின் பிரகாசிப்பு

நியூசிலாந்து அணியின் T20 உலகக் கிண்ண பயணத்தில் சுற்றுப் போட்டிகளில் நியூசிலாந்து அணி சிறப்பான பிரகாசிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், இதுவரை இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை பெற்றுக்கொள்ளவில்லை.

இதற்கு முதல் இரண்டு தடவைகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றும் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு நியூசிலாந்து அணிக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக இறுதியாக 2016ம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கிண்ண அரையிறுதிக்கு தகுதிபெற்று, இங்கிலாந்து அணியுடன் தோல்வியடைந்ததுடன், 2007ம் ஆண்டு பாகிஸ்தான் அணியிடம் அரையிறுதியில் தோல்வியடைந்திருந்தது.

அதேநேரம், நியூசிலாந்து அணி இதுவரை, 30 T20 உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 15 வெற்றிகளையும், 13 தோல்விகளையும் சந்தித்துள்ளதுடன், இரண்டு போட்டிகள் சமனிலையில் முடிவடைந்துள்ளன.

நியூசிலாந்து அணியின் கடந்தகால பிரகாசிப்புகள்

நியூசிலாந்து அணியின் கடந்தகால பிரகாசிப்புகளை பார்க்கும் போது, அணியின் பலம் உயர்நிலையில் உள்ளது. குறிப்பாக, இறுதியாக நடைபெற்றுமுடிந்த 5 T20I தொடர்களில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் மாத்திரம் 3-2 என தோல்வியடைந்துள்ளது.

அதற்கு முதல் நடைபெற்ற தொடர்களில், நடப்பு சம்பியன் மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் போன்ற பலம் வாய்ந்த அணிகளை தங்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. ஆனால், பங்களாதேஷ் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி பெற்ற தோல்வி, அவர்களை சிந்திக்க வைத்துள்ளது.

குறிப்பாக கேன் வில்லியம்ஸன் தலைமையிலான நியூசிலாந்து அணி தங்களுடைய சொந்த மண்ணில் வெற்றிகளை குவித்தாலும், துணைக்கண்டங்களில் சோபிக்க தவறியிருக்கிறது.

இதில், இறுதியாக விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் மோசமான துடுப்பாட்ட வெளிப்படுத்தல்களை காட்டியிருந்ததுடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய தொடரையும் 3-0 என இழந்திருந்தது. இதில், இலங்கை அணிக்கு எதிரான தொடரை மாத்திரமே 2-1 என துணைக்கண்டத்தில் வெற்றியீட்டியிருந்தது. எனவே, நியூசிலாந்து அணி குறித்த இந்த விடயத்தில் தங்களுடைய கவனத்தை அதிகமாக செலுத்த வேண்டிய தேவை உள்ளது.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள்

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை, அதிகம் எதிர்பார்கப்படும் வீரராக டெவோன் கொன்வே மாறியுள்ளார். கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்காக T20 போட்டியில் அறிமுகமாகியிருந்தாலும், சிறந்த முறையில் ஓட்டங்களை குவித்து வருகின்றார்.

டெவோன் கொன்வே இதுவரையில், 11 இன்னிங்ஸ்கள் மாத்திரம் விளையாடியிருந்தாலும், 59.12 என்ற ஓட்ட சராசரியில், 473 ஓட்டங்களை குவித்துள்ளார். எனவே, இவருடைய தற்போதைய ஓட்டக்குவிப்பை பார்க்கும் போது, இந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு துடுப்பாட்டத்தில் அதிகம்

பங்களிப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன், அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸன் மற்றும் மார்டின் கப்டில் போன்ற அனுபவ வீரர்களும் அணிக்கு மிகப்பெரிய பலம்.

பந்துவீச்சில் லொக்கி பேர்கஸன், டிம் சௌதி மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகிய முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வேகப்பந்துவீச்சில் எந்தளவு தாக்கத்தை கொடுக்கக்கூடியவர்கள் என்பதை அவர்களுடைய கடந்தக கால பிரகாசிப்புகளில் பார்க்கமுடியும்.

எனினும், ஐக்கிய அரபு இராச்சிய ஆடுகளங்களை பொருத்தவரை, சுழல் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு அதிகமாக தேவை. அனுபவ சுழல் பந்துவீச்சாளர் இஸ் சோதி அணிக்கு மிக முக்கிய துறுப்புச்சீட்டாக இருப்பார். இவர், 21 போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.இவருடன், மற்றுமாரு சுழல் பந்துவீச்சாளரான அஜாஸ் பட்டேல் நியூசிலாந்து அணிக்கு இந்த ஆண்டில் சிறப்பாக பந்துவீசி வருகின்றார். இவர், இந்த ஆண்டு T20I போட்டிகளில் அறிமுகமாகியதுடன், 5 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே, இவர்கள் இருவரின் பந்துவீச்சு நியூசிலாந்து அணிக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து குழாம்

கேன் வில்லியம்ஸன் (தலைவர்), டொட் எஸ்ட்ல், ட்ரெண்ட் போல்ட், மார்க் செப்மன், டெவோன் கொன்வே, லொக்கி பேர்கஸன், மார்டின் கப்டில், கெயல் ஜெமிஸன், டார்லி மிச்சல், ஜிம்மி நீஷம், கிளேன் பிலிப்ஸ், மிச்சல் சென்ட்னர், டிம் செய்பர்ட், இஸ் சோதி, டிம் சௌதி

இறுதியாக…

நியூசிலாந்து அணி கடந்த 2019ம் ஆண்டு, ஒருநாள் உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்ததுடன், கடந்த காலங்களில் அனைத்துவகை போட்டிகளிலும் தங்களை பலமான அணியாக நிரூபித்து வருகின்றது. அணியின் வீரர்களும் சிறந்த பிரகாசிப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எனவே, துணைக்கண்டங்களில் வெளிப்படுத்தும் தங்களுடைய பலவீனங்களை நியூசிலாந்து அணி சரிசெய்து வருகின்றது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் நியூசிலாந்து அணி வீரர்கள் திறமைகளை

வெளிப்படுத்தியிருந்தனர். எனவே, தங்களுடைய துணைக்கண்ட பலவீனங்களை நிவர்த்திசெய்துக்கொண்டு, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில், கன்னி சம்பியனாக முடிசூடுவதற்கு நியூசிலாந்து அணி தயாராகிவருகின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<