T20 உலகக் கிண்ணம் தொடர்பில் ஐசிசி புதிய அறிவிப்பு!

92
T20 Cricket

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவிருந்த ஐசிசி T20 உலகக் கிண்ணம் ஒத்திவைக்கப்படவுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என ஐசிசி இன்று (27) அறிக்கை வெளியிட்டுள்ளது. 

>>ஹோமாகமவில் கிரிக்கெட் மைதானம் நிர்மாணிக்கப்படும் – ஷம்மி சில்வா<<

கொவிட்-19 வைரஸ் காரணமாக ஐசிசி, T20 உலகக் கிண்ணத்தை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்துடன், உலகக் கிண்ணம் ஒத்திவைக்கப்பட்டு குறித்த காலப்பகுதியில் இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் நடத்துவதற்கான ஒப்புதலை ஐசிசி வழங்கியிருந்தது எனவும் கருத்துகள் வெளியிடப்பட்டு வந்தன.  

எனினும், இதுதொடர்பில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த செய்திகள் தவறானது என சுட்டிக்காட்டியுள்ளது. ஐசிசியின் புதிய தலைவரை தெரிவுசெய்வது குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றிருந்தமை தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்த போதே ஐசிசி இந்த விடயத்தினையும் வெளிப்படுத்தியுள்ளது.  

ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “T20 உலகக் கிண்ணம் ஒத்திவைக்கப்படுவதாக வெளியாகி வரும் செய்திகள் தவறானது. தொடருக்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேநேரம், வேகமாக பரவிவரும் கொவிட்-19 வைரஸினால், பொதுமக்களுக்கு சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், தற்காலிக திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றன“ என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேநேரம், T20 உலகக் கிண்ணம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் ஐசிசியினால் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, புதிய ஐசிசி தலைவர், தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், புதிய தலைவர் தொடர்பிலான கலந்துரையாடல்கள் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள சந்திப்பில் மேற்கொள்ளப்படும் எனவும், தற்போதுள்ள தலைவர், தனது பணியை நீடிக்கக்கோரி எந்தவொரு கருத்தினையும் முன்வைக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<