அழுத்தமின்றி ஸ்கொட்லாந்தை எதிர்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி

233

உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரில் இலங்கை அணி விளையாடவிருக்கும் இறுதி குழுநிலைப் போட்டி நாளை (26) ஸ்கொட்லாந்து அணியுடன் ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் ஆரம்பமாகுகின்றது.

உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் குழு B இல் நிரல்படுத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தாம் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் ஏற்கனவே வெற்றியினைப் பதிவு செய்து, ”சுபர் 6“ சுற்றுக்கு தெரிவாகியிருப்பது இலங்கைக்கு அழுத்தங்களை குறைத்திருக்கும் நிலையில், இலங்கை அணிக்கு விடயங்களை பரீட்சித்து பார்ப்பதற்கான மற்றுமொரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

>> உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் சுபர் 6 சுற்றில் இலங்கை

மறுமுனையில் இலங்கையுடன் குழு B இல் இருந்து ”சுபர் 6” சுற்றுக்கு தெரிவான ஏனைய அணியாக ஸ்கொட்லாந்து காணப்படுகின்றது. ஸ்கொட்லாந்து அணியும் தாம் விளையாடிய எந்த போட்டிகளிலும் தோல்வியடையாமல் ”சுபர் 6” சுற்றுக்கு தெரிவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் இதுவரை தோல்விகளை சந்திக்காத அணிகள் இடையிலான மோதலாக இலங்கை – ஸ்கொட்லாந்து மோதல் அமைகின்றது.

கடந்தகாலப் போட்டிகள்

இதற்கு முன்னர் இலங்கை – ஸ்கொட்லாந்து அணிகள் 3 ஒருநாள் போட்டிகளிலேயே விளையாடியிருந்ததோடு இந்த மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்கின்றது. இரு அணிகளும் இதுவரை இதுதரப்பு ஒன்றில் விளையாடாத போதும் இந்த தரவுகள் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளின் போது இலங்கை அணியின் ஆதிக்கம் வெளிப்பட்டிருந்ததனை காட்டுகின்றது.

இலங்கை அணி

இந்த தகுதிகாண் சுற்றுத் தொடரில் இரண்டு வீரர்களின் ஆட்டமே இலங்கை அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது எனக் குறிப்பிட்டால் அது மிகையாகாது. அதில் முதல் வீரர் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவரான திமுத் கருணாரட்ன ஆவார். நீண்ட இடைவேளை ஒன்றின் பின்னர் ஒருநாள் அணியில் மீண்ட இவர் ஒருநாள் போட்டிகளிலும் ஆரம்பவீரராக தற்போது தனது இடத்தினை உறுதிப்படுத்துவதற்கான பணிகளை ஆரம்பித்திருக்கின்றார்.

இலங்கை ஒருநாள் அணிக்கு மீண்ட பின்னர் இதுவரை ஆறு போட்டிகளில் ஆடியிருக்கும் திமுத் கருணாரட்ன அதில் 04 அரைச்சதங்களையும், ஒரு சதத்தினையும் விளாசியிருக்கின்றார். இதில் அவர் ஐந்து தடவைகள் தொடர்ச்சியாக 50 இற்கு ஓட்டங்களுக்கு மேல் இலங்கை ஒருநாள் அணிக்காகப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது குமார் சங்கக்கார, TM டில்சான்  போன்ற முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் இதற்கு முன்னர் இலங்கை அணிக்காக பெற்ற அடைவுமட்டங்களில் ஒன்றாக இருக்கின்றது.

>> ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்த மேற்கிந்திய தீவுகளுக்கு அபராதம்

அதேநேரம் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தினை வனிந்து ஹஸரங்க எடுத்துக் கொள்கின்றார். சுழல்பந்துவீச்சாளராக முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி உலக சாதனை செய்திருக்கும் அவர் ஜிம்பாப்வேயின் ஆடுகளங்கள் சுழலுக்கு அதிக சார்பாக இருப்பதன் காரணமாக மீண்டும் புதிய சாதனை ஒன்றினை மேற்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

மறுமுனையில் வேகப்பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீர அணிக்கு மீள்வது இன்னும் சந்தேகமாகவிருக்கும் நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி தமது குழாத்திற்குள் மேலதிக வீரர்களாக உள்வாங்கியிருக்கும் டில்சான் மதுசங்கவினை அணிக்குள் எடுப்பதற்கான சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

அதேநேரம் ஸ்கொட்லாந்து அணியுடனான போட்டி இலங்கைக்கு அழுத்தங்கள் குறைவான மோதல் என்பதனால் ஓரிரு மாற்றங்களை மேற்கொள்வதனையும் எதிர்பார்க்கலாம். அவ்வாறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படாத சந்தர்ப்பத்தில் முதல் மூன்று போட்டிகளிலும் விளையாடிய அதே அணி மாற்றங்களின்றி களமிறங்க முடியும்.

எதிர்பார்க்கை குழாம்

பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), தனன்ஞய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, லஹிரு குமார

ஸ்கொட்லாந்து அணி

ICC உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் ஆடும் அணிகளில் பெரிய எதிர்பார்ப்புக்களுடன் இல்லாத அணியாக இருந்த போதும் ஸ்கொட்லாந்து இதுவரை மூன்று தொடர் வெற்றிகளுடன் சிறந்த பெறுபேற்றினையே காட்டியிருக்கின்றது.

இதேநேரம் ஸ்கொட்லாந்து அணியின் அண்மைக்கால பதிவுகள் அவ்வணி இங்கிலாந்து போன்ற பெரும் கிரிக்கெட் அணிகளுக்கு அவ்வணி அதிர்ச்சியூட்டிய சம்பவங்களையும் நினைவூட்டுகின்றது. இந்த விடயங்கள் டெஸ்ட் அந்தஸ்து இல்லாத போதும் அவ்வணியினை விடயங்களில் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதனை தெளிவுபடுத்துகின்றன.

ஸ்கொட்லாந்து அணியின் வீரர் குழாத்தினை நோக்கும் போது அதன் தலைவரான ரிச்சி பெர்ரிங்டன் அணியின் நம்பிக்கைகுரிய துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக மாறியிருக்கின்றார். இந்த தொடரில் 197 ஓட்டங்கள் பெற்றிருக்கும் ஸ்கொட்லாந்து தலைவர் பெர்ரிங்டனுடன், ஓமான் மோதலின் போது அசத்தல் சதம் (136) விளாசிய பிரன்டண் மெக்குல்லன், மெதிவ் குரோஸ் ஆகியோரும் ஸ்கொட்லாந்து அணியின் மேலதிக துடுப்பாட்ட நம்பிக்கைகளாக இருக்கின்றனர்.

அணியின் பந்துவீச்சினை நோக்கும் போது வேகப்பந்துவீச்சாளரான சபீயான் ஷரிப், கிறிஸ் சோலே மற்றும் எட்ரியான் நெயில் ஆகியோர் காணப்பட அணிக்கு பிரதான சுழல்பந்துவீச்சாளராக வலதுகை சுழல்வீரரான கிறிஸ் கீரிவ்ஸ் நம்பிக்கை வழங்குகின்றார். கீரிவ்ஸ் கடைசியாக ஓமான் அணியுடன் நடைபெற்ற போட்டியில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கை குழாம்

கிறிஸ்டோபர் மெக்பிரைட், மெதிவ் குரோஸ், பிரண்டன் மெக்குல்லன், ரிச்சி பெர்ரிங்டன் (தலைவர்), தோமஸ் மெகின்டாஸ், மைக்கல் லீஸ்க், மார்க் வியாட், சபியான் ஷரீப், கிறிஸ் சோலே, அட்ரியான் நெயில்

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<