கொழும்பை வந்தடைந்த ஐசிசி சம்பியன் கிண்ணம்

538
ICC Champions trophy

இவ்வருடம் இடம்பெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) சம்பியன் தொடருக்கான வெற்றிக் கிண்ணம், தொடரில் பங்குபற்றும் அனைத்து நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றது. அந்த வகையில் அக்கிண்ணம் நேற்றைய தினம் கொழும்பை வந்தடைந்தது.

இது இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு வெற்றிக் கிண்ணத்தை பார்வையிடவும், தங்களது அணிக்கு ஆசிகளை வழங்கவும், வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும் தனித்துவமான ஒரு வாய்ப்பை வழங்குகின்றது.

இலங்கைக்கு வந்திருக்கும் இந்தக் கிண்ணம், ரசிகர்களின் பார்வைக்காக வியாழக்கிழமை (இன்று) கொழும்பு நகரை சுற்றி எடுத்துச் செல்லப்படவுள்ளது.  அத்துடன், இலங்கை கிரிக்கெட் சபை வளாகத்தில் நடைபெறவுள்ள விஷேட நிகழ்வில்,  கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா, கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா, இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெத்திவ்ஸ் ஆகியோர் மூலம் கிண்ணம் திரைநிக்கம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்படவுள்ளது

அதே நாளில், மொறட்டுவையில் இருந்து மகரகம, நுகேகொடை, நகர மண்டபம் மற்றும் காலி முகத்திடல் வழியாக கொண்டு வரப்படும் இந்த சம்பியன் கிண்ணம் இறுதியாக சுதந்திர சதுக்கத்தில் நடைபெற உள்ள இறுதி நிகழ்வில் வைக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான ஐசிசி சம்பியன் கிண்ண ஒருநாள் போட்டித் தொடர் ஏதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெறவுள்ளது.

குறித்த  தொடரில் ஐசிசி தரவரிசைப்படி முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் சர்வதேச அணிகள் உள்வாங்கப்பட்டுள்ளன. முதல் சுற்றுப் போட்டிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டி இடம்பெற்று, பின்னர் குழு மட்டத்தில் முதலிடத்தைப் பிடிக்கும் இரண்டு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்படும்.

குழு A – அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பங்களாதேஷ், இங்கிலாந்து

குழு B – இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென்னாபிரிக்கா