பளுதூக்கலில் முதல் பதக்கம் ; பெட்மிண்டன் காலிறுதியில் இலங்கை!

Commonwealth Games 2022

112

இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் ஆரம்பித்துள்ள 2022 பொதுநலவாய விளையாட்டு  விழாவின் இரண்டாவது நாள் நிறைவில் இலங்கை தங்களுடைய முதல் பதக்கத்தை வென்றுள்ளது.

இலங்கை இரண்டாவது தினம் (30) ஸ்குவாஷ், பெட்மிண்டன், பளு தூக்கல், எழுவர் ரக்பி மற்றும் கிரிக்கெட் போன்ற போட்டிகளில் பங்கேற்றிருந்ததுடன், பளு தூக்கலில் டிலங்க குமார வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.

இதனைத்தவிர்த்து ஏனைய போட்டிகளில் பின்னடைவை சந்தித்திருந்த இலங்கை, இரண்டாம் நாளில் (30) இறுதியாக நடைபெற்ற பெட்மிண்டன் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

பெட்மிண்டன், ஸ்குவாஷ் போட்டிகளில் வெற்றிகளை ஈட்டிய இலங்கை!

இரண்டாவது நாளில் இலங்கை வீரர்கள் பங்கேற்ற போட்டிகளின் முடிவுகள்

ஸ்குவாஷ்

இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஸ்குவாஷ் 32 வீரர்களுக்கான இரண்டாவது சுற்றில் இலங்கை சார்பில் போட்டியிட்ட ரவிந்து லக்சிறி மற்றும் ஷமில் வகீல் ஆகியோர் தோல்விகளை சந்தித்தனர்.

ஸ்கொட்லாந்து வீரர் கிரெக் லொபனை எதிர்கொண்ட ரவிந்து லக்சிறி 0-3 என தோல்வியடைந்த நிலையில், ஷமில் வகீல் 0-3 என இந்திய வீரர் சௌரவ் கோஷலிடம் தோல்வியடைந்தார்.

மகளிர் போட்டிகளை பொருத்தவரை இரண்டாவது சுற்றில் இங்கிலாந்து வீராங்கனை ஜோர்ஜியா கென்னடியை எதிர்த்தாடிய யெஹானி குருப்பு 3-0 என தோல்வியை சந்தித்தார். இதேவேளை, மற்றுமொரு வீராங்கனையான சந்திமா சினாலி இரண்டாவது சுற்றில் கனடா வீராங்கனையான நிக்கோல் புன்யனிடம் 3-0 என தோல்வியை சந்தித்தார்.

பெட்மிண்டன்

இலங்கை பெட்மிண்டன் அணியானது நேற்றைய முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை 3-2 என வீழ்த்தி வெற்றியை பதிவுசெய்திருந்த நிலையில், இன்றைய தினம் 2 போட்டிகளில் பங்கேற்றிருந்தது.

இதில் முதல் போட்டியில் பலமிக்க இந்திய அணியை எதிர்கொண்ட இலங்கை அணி எந்த வெற்றிகளும் இன்றி 5-0 என தோல்வியை சந்தித்தது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை இலங்கை அணி எதிர்கொண்டது. இந்தப்போட்டியில், 4-0 என வெற்றியை பதிவுசெய்திருந்த இலங்கை அணி காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்தப்போட்டியில் நிலூக கருணாரத்னவின் ஒற்றையர் பிரிவு, சச்சின் டயஸ் மற்றும் திலினி ஹெந்தேவாவின் கலப்பு இரட்டையர் பிரிவு, சச்சின் டயஸ் மற்றும் நிலூக கருணாரத்னவின் ஆடவர் இரட்டையர் பிரிவு மற்றும் திலினி ஹெந்தேவா மற்றும் விதுர சுஹஸ்னி ஆகியோரின் மகளிர் இரட்டையர் பிரிவுகளில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தது.

இதேவேளை வெற்றியினை பதிவுசெய்து, குழு Aயில் இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்ட இலங்கை அணியானது, இன்றைய தினம் காலிறுதிப் போட்டியில் மலேசிய அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photos – Commonwealth Games 2022 – Day 02

பளு தூக்கல்

பேர்மிங்ஹம் பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை தங்களுடைய முதல் பதக்கத்தை இன்றைய தினம் வெற்றிக்கொண்டது. ஆண்களுக்கான 55 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட டிலங்க குமார 235 கிலோகிராம் எடையை தூக்கி வெண்கலப்பதக்கத்தை வென்றார். இவர் ஸ்னெட்ச் முறையில் 105 கிலோகிராம் எடையையும், கிளீன் அண்ட் ஜெக் முறையில் 120 கிலோகிராம் எடையையும் தூக்கி இந்த பதக்கத்தை வென்றிருந்தார்.

இதேவேளை, ஆண்களுக்கான 61 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட திலங்க பலங்கசிங்க தன்னுடைய முதல் முயற்சியில் 100 கிலோகிராம் எடையை தூக்கியிருந்ததுடன், இரண்டாவது முயற்சியில் 105 கிலோகிராம் எடையை தூக்க முற்பட்டபோது, உபாதைக்கு முகங்கொடுத்தார். இதனால், அவர் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.

அதேநேரம், பெண்களுக்கான 49 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட ஸ்ரீமாலி திவிசேகர மொத்தமாக 152 கிலோகிராம் எடையை தூக்கி 8வது இடத்தை பிடித்துக்கொண்டார். இவர் ஸ்னெட்ச் முறையில் 65 கிலோகிராம் எடையையும், கிளீன் அண்ட் ஜெக் முறையில் 87 கிலோகிராம் எடையையும் தூக்கியிருந்தார்.

எழுவர் ரக்பி 

இலங்கை ஆடவர் அணியானது இன்றைய தினத்தில் தங்களுடைய குழுநிலையின் கடைசி போட்டியில் சமோவா அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் எவ்வித புள்ளிகளையும் பெறாத இலங்கை அணி 0-44 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது.

இதனைத்தொடர்ந்து 9 முதல் 16ஆம் இடம் வரையிலான அணிகளை வரிசைப்படுத்தும் காலிறுதிப் போட்டியில் உகண்டா அணியை இலங்கை எதிர்கொண்டது. இந்தப்போட்டியில் முதல் பாதியில் சிறந்த ஆட்டத்தை இலங்கை அணி வெளிப்படுத்திய போதும், இறுதியில் 38-19 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவியது.

Photos – Commonwealth  Games 2022 – Day 01

இதேவேளை, இலங்கை மகளிர் ரக்பி அணியானது தங்களுடைய மூன்றாவது குழுநிலை போட்டியில் கனடா அணியை எதிர்கொண்டதுடன், அதில் 74-0 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது. அதேநேரம், 5-8 அணிகளை வரிசைப்படுத்தும் மற்றுமொரு போட்டியில் ஸ்கொட்லாந்து அணியிடம் 58-0 என தோல்வியடைந்தது.

கிரிக்கெட்

பொதுநலவாய விளையாட்டு விழாவின் கிரிக்கெட்டில் தங்களுடைய முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட இலங்கை மகளிர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இதேவேளை, தங்களுடைய அடுத்தப் போட்டியில், நியூசிலாந்து அணியை எதிர்வரும் 2ம் திகதி இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.

பதக்கப் பட்டியல் விபரம் (இரண்டாவது நாள்)

பொதுநலவாய விளையாட்டு விழாவின் இரண்டாவது  நாள் போட்டிகள் நிறைவில், 13 தங்கப் பதக்கங்கள் உட்பட 32 பதக்கங்களை வென்றுள்ள அவுஸ்திரேலியா பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தப் பட்டியலின் இரண்டாவது இடத்தை 7 தங்கப்பதக்கங்கள் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ள நியூசிலாந்தும், 5 தங்கப் பதக்கங்கள்  உட்பட 21 பதக்கங்களை வென்றுள்ள இங்கிலாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துக்கொண்டுள்ளன.

நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
அவுஸ்திரேலியா 13 8 11 32
நியூசிலாந்து 7 4 2 13
இங்கிலாந்து 5 12 4 21

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<