நுவரெலியாவில் அதியுயர் விளையாட்டு பயிற்சிக்கூடம்  

176
Higher Altitute sports training Center in Nuwara Eliya

நுவரெலியாவில் நிர்மாணிக்கப்படவுள்ள அதியுயர் தொழில்நுட்பத்துடன் கூடிய விளையாட்டு பயிற்சிக்கூடக் கட்டடத்தொகுதியின் நிர்மாணப் பணிகளுக்கான இருதரப்பு ஒப்பந்தத்தில் விளையாட்டுத்துறை அமைச்சும், பிரான்ஸ் நாட்டின் Ellipse project SAS நிறுவனமும் கைச்சாத்திட்டுள்ளது.  

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் பிரதியமைச்சர் எச்.எம் ஹரீஸ் ஆகியோரின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இவ் வைபவத்தில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பேராசிரியர் டி.எம்.ஆர்.பி திஸாநாயக்க மற்றம் எலிப்ஸ் நிறுவனத்தின் தலைவர் பிகாடி ஒலிவர் ஆகியோர் குறித்த வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

உலக மெய்வல்லுனர் தொடருக்கு இலங்கையிலிருந்து 4 பேர் பங்கேற்பு

லண்டனில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்…

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய நுவரெலியாவின் குதிரைப்பந்தயத்திடல் மைதானத்திற்கு அருகாமையில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சுக்கு சொந்தமான 34.5 ஹெக்டயர் பரப்பளவிலேயே இந்த அதியுயர் தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சிக்கூடம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஏற்கனவே அனுமதி கிடைத்திருந்த நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் குறித்த மைதானத்தை நிர்மானிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

சுமார் 13 மில்லியன் ரூபா செலவில் இப்புதிய திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த பணத்தை 13 வருடங்களுக்குள் மீள கொடுப்பனவு செய்யும் முறையில் கடனாக வழங்கவதற்கும் குறித்த நிறுவனம் முன்வந்துள்ளது. இந்தப் பயிற்சிக்கூடத்தில் சர்வதேச தரத்திலான ஓடுபாதைகள் உட்பட அனைத்து வகையான பயிற்சிகளுக்குமான வசதிகள் செய்யப்படவுள்ளன.

குறிப்பாக, 2 உள்ளக விளையாட்டரங்குகள், உடற்பயிற்சி மத்திய நிலையம், அதியுயர் வசதிகளுடனான உள்ளக நீச்சல் தடாகம், மீண்டும் களற்றி பொருத்தக்கூடிய விளையாட்டரங்கு வசதி, விரிவுரை அறை, களஞ்சிய வசதி, வைத்திய மத்திய நிலையங்கள், 200 வீரர்களுக்கு ஒரே தடவையில் தங்கியிருப்பதற்கான தங்குமிட வசதி மற்றும் தொடர் மாடி வீடுகளும் இதில் அமையவுள்ளன.

இந்நிலையில், குறித்த அதியுயர் விளையாட்டு பயிற்சிக் கூடத்தில் மெய்வல்லுனர், கரப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், கிரிக்கெட், கால்பந்து, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஹொக்கி, வலைப்பந்தாட்டம், றக்பி, நீச்சல், டென்னிஸ், பெட்மிண்டன் உள்ளிட்ட 14 விளையாட்டுகளுக்கான வசதிகள் உள்ளடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசியாவில் உள்ள 4ஆவது அதியுயர் தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சிக்கூடமாக அமையவுள்ள இந்த பயிற்சிக்கூடம் குறித்து அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்து தெரிவிக்கையில், ”இலங்கை வீரர்கள் இங்கு வந்து தமது பயிற்சிகளை முன்னெடுக்கலாம். அத்தோடு, இலங்கை வீரர்கள் தரம் மிக்க பயிற்சிக்கூடங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்லத் தேவையில்லை. இதன்மூலம் இலங்கையின் விளையாட்டுத்துறையும் மேம்படும். அத்துடன், இலங்கையில் உருவாகவுள்ள விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு இப்பயிற்சிக்கூடம் மிகப்பெரிய பங்களிப்பினை வழங்கும்” எனவும் அவர் தெரிவித்தார்.