ஹேர்பேர்ட் கிண்ணத்தில் முன்னேறும் விமானப்படை; முத்துவல் கழகத்திற்கு முதல் வெற்றி

226

விறுவிறுப்பான முறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஹேர்பேர்ட் கிண்ணத்திற்கான இரண்டாம் நாளில் நடைபெற்ற முதல் மூன்று ஆட்டங்களில் விமானப்படை, முத்துவல் விளையாட்டுக் கழகம் மற்றும் இலங்கை இராணுவப்படை ஆகியவை வெற்றிகளை சுவீகரித்துள்ளன.

இலங்கை பொலிஸ் எதிர் இலங்கை விமானப்படை

Air Force vs Policeபலம் வாய்ந்த இவ்விரு அணிகள் மோதிக்கொண்ட குழு A இற்கான இப் போட்டியில் புள்ளிகள் பெறுவதை முதலில் பொலிஸ் அணி ஆரம்பித்தது.

முதற் கட்டத்தில் கூடை வளையத்திற்குள் பந்துகளைப் போடும் முயற்சிகளை பொலிஸ் அணியினர் பல தடவைகள் மேற்கொண்டிருப்பினும் அவை கைகூடியிருக்கவில்லை. இதன் காரணமாக விமானப்படை அணியினர் ஒரு முன்னேற்றகரமான ஆட்டத்தினை வெளிக்காட்டி முதற் கால்பகுதியை 21:17 என்ற புள்ளிகள் அடிப்படையில் தமதாக்கிக் கொண்டனர்.

இரண்டாம் கால் பகுதியின் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டத் தொடங்கிய பொலிஸ் அணியினர் புள்ளிகளை அதிவிரைவாக சேர்க்கத் தொடங்கினர். இக்கால்பகுதியில் மொத்தமாக 17 புள்ளிகளை குவித்த அவர்கள் முதல் அரைப்பாதியினை விமானப்படை அணியுடன்  34:34 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலை செய்தனர்.

முதல் அரைப்பாதியில் இரு அணிகளும் பெற்றிருந்த புள்ளிகள் சமமாக  காணப்பட்டிருந்த காரணத்தினால் போட்டியின் மூன்றாம் கால் பகுதி சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தது. இக்கால்பகுதியில் அதிக புள்ளிகள் பெறும் நோக்கில் அரைவட்டத்திற்கு அப்பால் நின்று இலக்குகளை நோக்கி (Shoot) போட்ட பொலிஸ் அணியினர் 50:48 என்ற புள்ளிகள் அடிப்படையில் மூன்றாம் கால்பகுதியில் முன்னிலையையும் பெற்றுக் கொண்டனர்

நான்காம் கால்பகுதி மிகவும் விறுவிறுப்பானதாக மாறியிருந்தது. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை சேர்த்த காரணத்தினால் போட்டியின் வெற்றியாளர் யார் எனத் தீர்மானிப்பது கடினமாக காணப்பட்டிருந்தது. இறுதி நிமிடம் வரை இந்நிலைமை தொடர்ந்து நீடித்திருந்தது. போட்டியின் இறுதி நொடிகளில் சிறப்பான முறையில் செயற்பட்டு பொலிஸ் அணியை புள்ளிகளில் முந்திய விமானப்படை அணியானது 67:65 என்ற புள்ளிகள் கணக்கில் ஆட்டத்தினை கொள்ளையடித்துக் கொண்டதுடன், ஹேர்பேர்ட் கிண்ணத்தில் தமது வெற்றியோட்டத்தினையும் தொடர்கின்றது.

முத்துவல் விளையாட்டுக் கழகம் எதிர் மட்டக்களப்பு (நீல அணியினர்)

Batticaloa B v Mutuwalகுழு B இற்கான இந்தப் போட்டியினை மைதான சொந்தக்காரர்களான மட்டக்களப்பு நீல அணியினர் புள்ளிகளை முதலில் சேர்த்து ஆரம்பித்திருந்தனர்.

எனினும், தொடர்ந்து போட்டியின் ஆதிக்கத்தினைப் பெற்றுக்கொண்ட முத்துவல் விளையாட்டுக் கழக அணி வீரர்கள் பரிமாற்றத்துடன் முதல் கால்பகுதியில், 20:10 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை அடைந்து கொண்டனர்.

போட்டியின் முதல் அரைப்பாதி நேரத்திற்கு முன்பான ஆட்டத்தில் புள்ளிகள் சேர்ப்பதில் தடுமாற்றத்தினை மட்டக்களப்பு அணியினர் வெளிக்காட்டியிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. எதிரணி வீரர்கள் விட்ட பிழைகள் காரணமாக கிடைக்கப்பெற்ற ப்ரீ த்ரோக்கள் (Free Throws) மூலம் அதிகளவில் புள்ளிகள் பெற்றுக்கொண்ட முத்துவல் விளையாட்டுக் கழகம் இப்பாதியில் மொத்தமாக 20 புள்ளிகளை சேர்த்து 40:21 என முதல் அரைப்பாதியினை முன்னிலையுடன் முடித்துக்கொண்டது.

போட்டியின் மூன்றாம் கால் பகுதியினை அதி உற்சாகமாக ஆரம்பித்திருந்த மட்டக்களப்பு அணியினர் இக்கால்பகுதியில் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். மட்டக்களப்பு நீல அணிக்காக விளையாடியிருந்த அன்டோ அரைவட்டத்திற்கு அப்பால் நின்று அபாரமான முறையில் ஆடி புள்ளிகளை சேர்த்திருந்தார்.

மூன்றாவது கால் பகுதியில் 19 புள்ளிகளை சேர்த்திருந்த மட்டக்களப்பு நீல அணியினர் எதிரணியின் புள்ளிகளை நெருங்கியிருப்பினும் முத்துவல் கழகம் 41:50 எனும் முன்னிலையில் மூன்றாம் கால் பகுதியினை முடித்துக்கொண்டது.

நான்காம் கால் பகுதியில் தொடர்ந்தும் அதே சிறப்பான ஆட்டத்தினை மட்டக்களப்பு நீல அணியினர் நீடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படிருந்தும் அவர்களால், 11 புள்ளிகளை மாத்திரமே பெற முடிந்திருந்தது. இதனால், நான்காம் கால்பகுதியில் 17 புள்ளிகளை சேர்த்திருந்த முத்துவல் விளையாட்டுக்கழகத்தினர் 68:51 என்ற புள்ளிகள் அடிப்படையில் போட்டியின் வெற்றியாளர்களாக மாறி ஹேப்பேர்ட் கிண்ணத்தில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்து கொண்டனர்.

யாழ்ப்பாண கூடைப்பந்தாட்டக் கழகம் எதிர் இலங்கை இராணுவப்படை

மியானி மைதானத்தில் தொடங்கியிருந்த குழு A இற்கான மற்றுமொரு போட்டியில் பலமிக்க இராணுவப்படை அணியினரை யாழ்ப்பாண அணியினர் சாதுர்யமான முறையில் கையாண்டிருந்தனர். இரு அணிகளினாலும் போட்டி தொடங்கியதிலிருந்து சம அளவில் புள்ளிகள் சேர்க்கப்பட்டிருந்தது.

இதனால், ஒரு புள்ளியால் மாத்திரமே இராணுவப்படை அணி யாழ்ப்பாணத்தினை முந்தியிருக்க முதற் கால் பகுதியானது 18:17 என நிறைவடைந்தது.

முதலாம் அரைப்பகுதி முடிவடைய முன்னதாக, இராணுவ அணியினர் முதற்பாதியில் காட்டிய அதே சிறப்பாட்டத்தை தொடர்திருந்த அதேவேளையில், முதற்பாதி போன்று இம்முறை யாழ்ப்பாண அணியினரால் செயற்பட முடிந்திருக்கவில்லை.

இதனால், இராணுவ அணி 9 புள்ளிகளால் யாழ்ப்பாண அணியை விட முன்னிலை பெற 35:26 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் அரைப்பாதி நிறைவுற்றிருந்தது.

தொடர்ந்து வந்த மூன்றாம் கால்பகுதியில் யாழ்ப்பாண அணியினர் வழமையான ஆட்டத்திற்கு திரும்பியிருப்பினும் இராணுவ அணியின் வீரர் திலுன் சம்பத் விரைவாக செயற்பட்டிருந்த காரணத்தினால் மூன்றாம் கால் பகுதியில் இராணுவ அணி 51:39 என தமது முன்னிலையை தொடர்ந்தது.

நான்காம் கால்பகுதியில் சிம்ரோனின் அபாரம் காரணமாக 15 புள்ளிகள் வரையில் யாழ்ப்பாண அணியினரால் பெறக்கூடியதாக காணப்பட்டிருப்பினும் முன்னைய கால்பகுதிகளில் திறம்பட செயற்பட்டிருந்த இராணுவ அணிக்கு வெற்றிபெற இக்கால்பகுதியில் பெற்ற 10 புள்ளிகளே போதுமானதாக இருந்தது.

இதன் காரணமாக முடிவில்,  61:54 என்ற புள்ளிகள் கணக்கில் யாழ்ப்பாண அணியினரை இராணுவப்படை அணியினர் வீழ்த்தியிருந்தனர்.