டயலொக் ரக்பி லீக் தொடரின் இரண்டாம் சுற்றிற்கான போட்டியொன்றில் ஹெவலொக் விளையாட்டுக் கழகம் மற்றும் இலங்கை விமானப்படை அணிகள் மோதிக் கொண்டன. ஹெவலொக் மைதானத்தில் இடம்பெற்ற விறுவிறுப்பான இப்போட்டியில் ஹெவலொக் அணி 37-29 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

விமானப்படை போட்டியை ஆரம்பித்து வைத்ததுடன், தொடர்ந்து திறமையை வெளிக்காட்டிவரும் அஷோக் விஜயகுமார் போட்டியின் ஆரம்பம் முதலே விமானப்படை அணி சார்பில் சிறப்பாக விளையாடியிருந்தார். அவரது லாவகமான உதை ஒன்றினை துரத்திப் பிடித்த கௌஷால் மனுப்ரிய போட்டியின் முதல் ட்ரையினை வைத்தார். கொன்வெர்சன் உதையினை கயந்த இத்தமல்கொட குறிதவறாது உதைத்தார். (ஹெவலொக் கழகம் 00 – விமானப்படை அணி 07)

தொடர்ந்தும் விமானப்படை வீரர்கள் தமது சிறப்பான விளையாட்டுப் பாணியின் மூலம் ஹெவலொக் வீரர்களுக்கு அழுத்தத்தை வழங்கினர். எவ்வாறாயினும் கெவின் டிக்சனிடமிருந்து பந்தை பெற்றுக் கொண்ட முன்னணி வீரர் சுதர்ஷன முதுதந்திரி ஹெவலொக் அணி சார்பில் முதல் ட்ரையினை வைத்தார். துலாஜ் பெரேரா கொன்வெர்சன் உதையை வெற்றிகரமாக உதைத்து புள்ளிகளை சமனாக்கினார். (ஹெவலொக் கழகம் 07 – விமானப்படை அணி 07)

தனது அற்புதமான ஆட்டத்தை தொடர்ந்த அஷோக் விஜயகுமார் விவேகமான நகர்வுகள் மூலம் விமானப்படை அணி எதிரணியின் பாதிக்குள் முன்னேறுவதற்கு வழியமைத்தார். அதன் பயனாக கிடைத்த பெனால்டி வாய்ப்பொன்றை பந்தை துரிதமாக உதைத்து,, விமானப்படை அணி சார்பாக புஷ்பகுமார சமரஹேவ ட்ரை ஒன்றை பெற்றுக் கொண்டார். (ஹெவலொக் கழகம்  07 – விமானப்படை அணி 14)

சில நிமிடங்களின் பின்னர் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கம்பத்தை நோக்கி உதைக்க முடிவு செய்த ஹெவலொக் கழகம், துலாஜ் பெரேரா மூலம் மூன்று புள்ளிகளை பெற்றுக் கொண்டது. (ஹெவலொக் கழகம் 10 – விமானப்படை அணி 14)

முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் ஹெவலொக் வீரர்கள் தமது வழமையான ஆட்டத்திற்கு திரும்பியிருந்தனர். அபாரமான நகர்வுகள் மற்றும் பந்துக் கைமாற்றல்களின் பின்னர் ஹெவலொக் அணியின் ஜேசன் மெல்டர் ட்ரை வைத்தார். இலகுவான உதையினை துலாஜ் பெரேரா வெற்றிகரமாக உதைத்தார். (ஹெவலொக் கழகம் 17 – விமானப்படை அணி 14)

முதல் பாதி நிறைவு பெறும் தருவாயில் விமானப்படை அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்தது. அதனை கம்பத்தை நோக்கி உதைக்க முடிவெடுத்த அவ்வணி, கயந்த இத்தமல்கொடவின் உதையின் மூலம் புள்ளிகளை சமனாக்கியது. (ஹெவலொக் கழகம் 17 – விமானப்படை அணி 17)

முதல் பாதி: ஹெவலொக் விளையாட்டு கழகம் 17 – விமானப்படை விளையாட்டு கழகம் 17

இரண்டாம் பாதியின் முதல் புள்ளிகளை ஹெவலொக் அணியின் துலாஜ் பெரேரா பெனால்டி உதை ஒன்றின் மூலம் பெற்றுக் கொடுத்தார். (ஹெவலொக் கழகம் 20 – விமானப்படை அணி 17)

முன்னேற்றகரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெவலொக் அணியின் முன்கள வீரர்கள், விமானப்படை அணியின் தடுப்பை மீறி ட்ரை கோட்டை நோக்கி முன்னேறினர். சில நிமிடங்களின் பின்னர் சுதர்ஷன முதுதந்திரி தனது இரண்டாவது ட்ரையினை வைக்க, ஹெவலொக் அணி புள்ளி வித்தியாசத்தினை மேலும் அதிகரித்து கொண்டது. துலாஜ் பெரேராவின் உதை மீண்டும் கம்பங்களை ஊடறுத்துச் சென்றது. (ஹெவலொக் கழகம் 27 – விமானப்படை அணி 17)

ஹெவலொக் அணிக்கு மற்றுமொரு பெனால்டி வாய்ப்பு கிடைத்ததுடன், இம்முறையும் துலாஜ் பெரேரா தனது உதையின் மூலம் மூன்று புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார். (ஹெவலொக் கழகம் 30 – விமானப்படை அணி 17)

இதனை தொடர்ந்து அடைமழை பெய்யத் தொடங்கியதால், இரண்டு அணிகளுமே பந்தை கைமாற்றுதலில் பல தவறுகளை விட்டன. எனினும் ராகுல் டி சில்வாவிடம் இருந்து பந்தை பெற்றுக் கொண்ட பிரசாத் மதுஷங்க கம்பங்களுக்கடியில் ட்ரை வைத்தார். சுலபமான உதையினை துலாஜ் பெரேரா துல்லியமாக உதைத்து, இப்போட்டியில் தனக்கு கிடைத்த அனைத்து உதைகளையும் வெற்றிகரமாக உதைத்திருந்தார். (ஹெவலொக் கழகம் 37 – விமானப்படை அணி 17)

ஹெவலொக் அணி வெற்றியை உறுதி செய்து கொண்ட போதிலும், இறுதி நிமிடங்களில் ஆக்ரோஷமாக விளையாடிய விமானப்படை வீரர்கள் அடுத்தடுத்து இரண்டு ட்ரைகள் வைத்தனர். ஒரு கொன்வெர்சன் உதையை கயந்த இத்தமல்கொட குறிதவறாது உதைத்த போதிலும், மற்றைய உதையினை தவறவிட்டார். (ஹெவலொக் கழகம் 37 – விமானப்படை அணி 29)

முழு நேரம்: ஹெவலொக் விளையாட்டு கழகம் 37 – விமானப்படை விளையாட்டு கழகம் 29

இதன்படி இறுதி 5 நிமிடங்களில் போட்டி விறுவிறுப்பாக இடம்பெற்ற போதிலும், ஹெவலொக் அணி வெற்றியை பெற்றுக் கொண்டது. அவ்வணியின் துலாஜ் பெரேரா சுற்றுப்போட்டியில் அதிக புள்ளிகளை பெற்றுக் கொண்டோரின் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். நேற்றைய தினம் கண்டி கழகம் மற்றும் கடற்படை கழக அணிகளும் வெற்றிகளை பெற்றுக் கொண்ட காரணத்தினால், லீக் சம்பியன் பட்டத்திற்கான மும்முனை போட்டி மேலும் சுவாரஷ்யம் அடைந்துள்ளது.

புள்ளிகளைப் பெற்றோர்

ஹெவலொக் விளையாட்டுக் கழகம் – 37

ட்ரை – சுதர்ஷன முதுதந்திரி 2, பிரசாத் மதுஷங்க 1, ஜேசன் மெல்டர் 1

கொன்வர்சன் – துலாஜ் பெரேரா 4

பெனால்டி – துலாஜ் பெரேரா 3

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 29

ட்ரை – கௌஷால் மனுப்ரிய 2, புஷ்பகுமார சமரஹேவ 1, திலின பண்டார 1

கொன்வர்சன் – கயந்த இத்தமல்கொட 3

பெனால்டி – கயந்த இத்தமல்கொட 1