இந்திய T20I அணிக்கு திரும்பும் ஹர்திக் மற்றும் சுப்மன் கில்

South Africa Tour of India 2025

128
hardhiq & subman

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள T20I தொடருக்கான இந்திய அணியில் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா பெயரிடப்பட்டுள்ளார்.

அதேபோல, காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடாத சுப்மன் கில் துணைத் தலைவராக T20I அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடுகின்றன.

முதலாவது T20I போட்டி கட்டாக்கில் டிசம்பர் 9ஆம் திகதி நடைபெற உள்ளது. 2ஆவது T20I போட்டி 11ஆம் திகதி நியூ சண்டிகாரிலும், 3ஆவது போட்டி 14ஆம் திகதி தரம்சாலாவிலும், 4ஆவது போட்டி 17ஆம் திகதி லக்னோவிலும், 5ஆவது போட்டி 19ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா T20I தொடருக்கான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடாத சுப்மன் கில் துணைத் தலைவராக T20I அணிக்கு திரும்பியுள்ளார். ஆனால் சுப்மன் கில் இன்னும் பிசிசிஐ மருத்துவ குழுவால் கிரிக்கெட் போட்டியில் விளையாட அனுமதி பெறவில்லை. இதனால் அனுமதி பெற்ற பின்பே அவர் அணிக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேபோன்று கடந்த ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை எதிரான சுப்பர் 4 சுற்றில் காயம் காரணமாக வெளியேறிய ஹர்திக் பாண்டியா தற்போது முழு உடல் தகுதியை எட்டி இருக்கிறார்.

அண்மையில் நடைபெற்ற சையது முஸ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கினார். இதனை அடுத்து ஹர்திக் பாண்டியா மீண்டும் இந்திய T20I அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். மறுபுறத்தில் ஒருநாள் அணியில் இடம்பெறாத அக்சர் படேலுக்கு T20I தொடரில் இடம் கிடைத்திருக்கிறது.

இதேபோன்று விக்கெட் காப்பாளர்களாக ஜி;தேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அபிஷேக் சர்மாவும், மத்திய வரிசையில் திலக் வர்மாவும் விளையாடவுள்ளனர். வேகப் பந்துவீச்சாளர்களாக பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலதிக சகலதுறை வீரராக சிவம் துபே அணியில் இணைந்திருக்கிறார். வொஷிங்டன் சுந்தருக்கும் அணியில் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரராக இடம் கிடைத்திருக்கிறது. இந்த T20I அணியில் ரிஷப் பாண்ட் மற்றும் ரிங்கு சிங் ஆகிய இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை.

இந்திய T20I அணி விபரம்: –

 

சூர்யகுமார் யாதவ் (தலைவர்), சுப்மன் கில் (துணை தலைவர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா, வொஷிங்டன் சுந்தர்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<