ஐந்து IPL கிண்ணங்களை வென்ற பாண்டியாவின் அடுத்த இலக்கு

106
PTI

இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் இறுதிப் போட்டிகளில் ஐந்து தடவைகள் விளையாடியிருக்கும் சகலதுறைவீரரான ஹர்திக் பாண்டியா, ஐந்து தடவைகள் IPL கிண்ணத்தினை வென்ற வீரராக மாறியிருக்கின்றார்.

புதிய வரலாறு படைத்த IPL 2022 இறுதிப் போட்டி

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரராக காணப்பட்ட பாண்டியா IPL போட்டிகளில் புதிதாக இணைக்கப்பட்ட அணியான குஜாராத் டைடன்ஸ் அணியை வழிநடாத்தியதன் மூலம், இந்தப் பருவகாலத்தில் முதல் முறையாக ஒரு அணித்தலைவராக IPL சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டுக்கான IPL இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருக்கும் ஹர்திக் பாண்டியா, அதன் பிறகு வழங்கியிருந்த செவ்வி ஒன்றில் தனது குறுகிய கால, நீண்ட கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தார்.

“எது நடந்த போதும் இந்திய அணிக்காக உலகக் கிண்ணம் வெல்வதே உண்மையான இலக்காக உள்ளது. இதற்காக நான் என்னிடம் உள்ள அனைத்தையும் வழங்க உள்ளேன். எப்போதும் அணிக்கு முன்னுரிமை கொடுக்கும் வீரராக உள்ளேன். எனது இலக்கு எளிமையானது, எனது அணி பெரும்பாலான (நல்ல) விடயங்களை எடுப்பதனை உறுதி செய்து கொள்வது”

”எத்தனை போட்டிகள் ஆடிய போதும் இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடுவது என்பது எப்போதும் கனவு நனவாகுவது போன்ற ஒன்றாகும். எனக்கு நாட்டினை பிரதிநிதித்துவம் செய்வது என்பது எப்போதும் சந்தோசத்தினை ஏற்படுத்துகின்றது. நான் பெற்ற அன்பும், ஆதரவும் இந்திய அணியின் வழி மூலமானதாகும். குறுகிய காலமோ அல்லது, நீண்ட காலமோ, என்ன நடந்த போதும் எனக்கு உலகக் கிண்ணம் ஒன்றை வெல்ல வேண்டும்.” என ஹர்திக் பாண்டியா குறிப்பிட்டிருந்தார்.

இந்திய அணிக்காக உலகக் கிண்ணப் போட்டிகளில் முக்கிய பங்களிப்பினை வழங்கிய வீரராக ஹர்திக் பாண்டியா காணப்படுகின்றார். 2016ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் ஹர்திக் பாண்டியா பங்களாதேஷ் அணிக்கு எதிராக வீசியிருந்த இறுதி ஓவர், இந்திய அணிக்கு குறித்த உலகக் கிண்ணத்தின் அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்து கொடுத்திருந்தது. எனினும் இந்திய அணி குறித்த உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வியினைத் தழுவியது.

இதன் பின்னர் 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியிலும், இந்திய அணிக்காக ஹர்திக் பாண்டியா ரிசாப் பாண்ட் உடன் இணைந்து இணைப்பாட்டம் ஒன்றினை கட்டியெழுப்பி அணியின் வெற்றிக்காக போராடியமை குறிப்பிடத்தக்கது.

IPL தொடரில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை வீரர்கள்

இதேவேளை 2022ஆம் ஆண்டின் IPL போட்டிகளில் சகலதுறைவீரராக தனது திறமையினை நிரூபித்திருக்கும் ஹர்திக் பாண்டியா தென்னாபிரிக்க – இந்திய அணிகள் இடையிலான T20I தொடர் மூலம் மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பினை பெற்றிருக்கின்றார். அத்துடன் அவர் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 2022ஆம் ஆண்டின் T20I உலகக் கிண்ணத் தொடரிலும் இந்திய அணிக்காக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<