கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹர்பஜன் சிங்

108
Getty Image

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த ஹர்பஜன் சிங் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.

1998 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட ஹர்பஜன் சிங், சுமார் 23 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடினார்.

இதனிடையே, கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்த ஹர்பஜன் சிங், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார்.

இந்த நிலையில், அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஹர்பஜன் சிங் இன்று (24) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளளார்.

இது குறித்து ஹர்பஜன் சிங், தனது டுவிட்டரில் பதிவிட்ட வீடியோவில், ‘பல்வேறு வழிகளில் இருந்தும் ஏற்கனவே நான் ஓய்வு பெற்றுவிட்டேன். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இருந்ததால்தான் தாமதமாக அறிவிக்கிறேன்.

உங்கள் வாழ்க்கையில் கடினமான முடிவு எடுத்து, முன்னேறிச்செல்லும தருணம் வரும். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த முடிவை அறிவிக்க இருந்தேன். ஆனால் அதற்கான சரியான தருணத்துக்காக உங்களுக்காக காத்திருந்தேன். நான் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஹர்பஜன் சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘அனைத்து நல்ல விடயங்களும் இன்றுடன் முடிவுக்கு வந்தது. என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் வழங்கிய கிரிக்கெட்டிலிருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறேன், 23 ஆண்டு கால அழகான, நினைவில்

நிற்கும் பயணத்தில் அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.

41 வயதாகும் ஹர்பஜன் சிங் 1998 ஆம் அண்டு மார்ச் 25 ஆம் திகதி டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.

1998 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி 2015 ஆம் ஆண்டு வரை விளையாடினார். 2006 முதல் 2016 வரை T20 கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.

ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுகளையும், 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 28 T20 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

2007 (T20) மற்றும் 2011 இல் இந்தியாவின் வரலாற்று உலகக் கிண்ண வெற்றிகளில் ஹர்பஜன் சிங்கின் பங்களிப்பும் மகத்தானது.

இதனிடையே, ஹர்பஜன் சிங், மும்பை இந்தியன்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக IPL கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்.

இது இவ்வாறிருக்க, சக வீரர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என ஹர்பஜன் சிங்கிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<