ஜிம்பாப்வே அணிக்காக களமிறங்கும் இங்கிலாந்து வீரர்

887

இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த கேரி பேலன்ஸ், தனது தாய்நாடான ஜிம்பாப்வே அணிக்காக விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார்

இதன்படி, அவர் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்காக எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 1989-இல் ஜிம்பாப்வேயில் பிறந்த கேரி பேலன்ஸ், அந்த நாட்டில் பல்வேறு வயதுப் பிரிவில் கிரிக்கெட் விளையாடி உள்ளார். விவசாயின் மகனான இவர், 2006ஆம் ஆண்டு ஐசிசியின் 19 வயதின் கீழ் உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருதை வென்றார். பின்னர் அதே ஆண்டு இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து உள்ளூர் கழகங்களுக்காக விளையாடி வந்தார்.

எனவே, அவர் வெளிப்படுத்திய திறமை காரணமாக இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். கடந்த 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

இதில் 2013 முதல் 2017 வரையில் ஆஷஸ் தொடர் உட்பட சில முக்கிய தொடர்களில் அவர் விளையாடி உள்ளார். ஆனாலும் அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள நான்கு டெஸ்ட் கிரிக்கெட் சதங்களில் இரண்டு இந்திய அணிக்கு எதிராக பெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு யோர்க்ஷெயார் கழகத்தைச் சேர்ந்த சக வீரரான அசீம் ரபீக்கை நிறவெறி ரீதியாக சாடியதாக அவர் மீது புகார் எழுந்தது. குறித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட அவர் மனநிலையைக் கருத்தில் கொண்டு ஓராண்டு காலம் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்தார். இதன் காரணமாக அவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

இதனிடையே, யோர்க்ஷெயார் அணியுடனான ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பாகவே கேரி பேலன்ஸ் விடுவிக்கப்பட்டார். இந்தப் பின்னணியில் தான் அவர் தற்போது ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியுடன் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் சிறந்த பயிற்சியாளர்கள் மற்றும் திறமையான வீரர்களுடன் பணியைத் ஆரம்பிக்க காத்திருக்க முடியாது. ஜிம்பாப்வேயை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எனக்கு விளையாட்டின் மீது புதிய ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நான் பல ஆண்டுகளாக ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் பலருடன் தொடர்பில் இருந்தேன், குறிப்பாக அவர்களின் சமீபத்திய முன்னேற்றத்தைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கேரி பேலன்ஸ் ஜிம்பாப்வே அணியுடன் இணைவது தொடர்பில் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் இயக்குனர் ஹாமில்டன் மசகட்சா கூறுகையில், மிகவும் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் தாயகம் திரும்பியதில் மகிழ்ச்சி அடைகிறோம். எமது உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு அவர் இன்னும் பலம் சேர்க்கவுள்ளார். மேலும் அவர் எங்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று மசகட்சா கூறினார்.

33 வயது இடது கை துடுப்பாட்ட வீரரான கேரி பேலன்ஸ், இங்கிலாந்து அணிக்காக 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,498 ஓட்டங்களைக் குவித்துள்ள அவர் அந்த அணிக்காக 16 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<