ஸ்டுவர்ட் லோ பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக அதிகவாய்ப்பு

625
Stuart Law

அவுஸ்திரேலியா கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் லோ பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக செயற்பட அதிகவாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் முடிவுற்ற 6ஆவது டி20 உலகக் கிண்ணக் கிரிக்கட் தொடரில் பாகிஸ்தான் அணி மிக மோசமாக விளையாடித் தொடரில் இருந்து வெளியேறியது. இந்த மோசமான தொடரைத் தொடர்ந்து தலைவராக செயற்பட்ட ஷெஹிட் அப்ரிடியும், பயிற்சியாளராக செயற்பட்ட வக்கார் யூனிசும் தங்கள் பதவியை இராஜினாமா செய்தார்கள்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கியது. முக்கியமாக பாகிஸ்தான் கிரிக்கட் சபை ஒரு வெளிநாட்டவரை பயிற்சியாளராக நியமிக்க அதிக ஆர்வம் காட்டி வந்தது. அதற்கிணங்க பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்தவர்களில் அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான 47 வயது நிரம்பிய ஸ்டுவர்ட் லோ பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் ஷஹாரியர் கான் தெரிவித்துள்ளார். இரண்டாவது தேர்வாக தென்ஆபிரிக்காவைச் சேர்ந்த எண்டி மோல்ஸ் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.  

அவுஸ்திரேலியா அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 54 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டுவர்ட் லோ இலங்கை, பங்களதேஷ் ஆகிய ஆசிய அணிகளுக்கும் கிரிக்கட் கவுண்டி அணிகளுக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது ஒரு முக்கிய அம்சமாகும்.