பாகிஸ்தான் கிரிக்கெட் வருடாந்த ஒப்பந்தத்தில் முன்னணி வீரர்கள் நீக்கம்

78
PCB

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தில் பல இளம் வீரர்கள் உட்பட மொத்தமாக 21 வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதில், 18 வயதான இளம் வீரர் நஷீம் ஷா இணைக்கப்பட்டுள்ளதுடன் முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராக அசார் அலியும், T20 தலைவராக பாபர் அசாமும் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், பாபர் அசாமிற்கு ஒருநாள் போட்டிகளுக்கான தலைமைத்துவமும் வழங்கப்பட்டுள்ளது.  

>>T20I போட்டிகளில் இலங்கை அணியால் சாதிக்க முடியுமா?<<

வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியலில் இளம் வேகப் பந்துவீச்சாளர் நஷீர் ஷாவுடன், வலதுகை துடுப்பாட்ட வீரர் இப்திகார் அஹமட்டும் புதிய வீரராக இணைக்கப்பட்டுள்ளார். இதில் நஷீர் ஷா, A பிரிவு ஒப்பந்தத்துக்கு முன்னேற்றத்தை பெற்றுள்ளதுடன், ஆபிட் அலி, மொஹட் ரிஸ்வான் மற்றும் ஷான் மசூட் ஆகியோருக்கு B பிரிவு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

“இப்போது வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தம் நேர்மறையான முறையில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களாக வீரர்கள் வெளிப்படுத்திய பிரகாசிப்புகளை அடிப்படையாக கொண்டும், அடுத்த 12 மாதங்களுக்கான எமது திட்டத்தையும் கவனத்தில் கொண்டும் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது” என பாகிஸ்தான் தேசிய அணியின் தேர்வாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். 

“அசார் அலி மற்றும் பாபர் அசாம் ஆகியோருக்கு கிடைத்துள்ள தலைமைத்துவத்துக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுடைய எதிர்கால செயற்பாடுகளுக்கு இந்த முடிவானது மிகவும் சரியான ஒரு முடிவாகும். அவர்கள் இப்போது எதிர்காலம் தொடர்பில் சிந்திப்பதுடன், நாம் நினைக்கும் அளவில் சிறந்தவொரு அணியை உருவாக்குவார்கள் என நம்புகிறேன்.

மொஹமட் அமீர், ஹசன் அலி மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோரை ஒப்பந்தத்தில் இணைக்கவில்லை என்பது ஒரு கடினமான முடிவு. எனினும், ஹசன் தொடர்ச்சியான உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். மொஹமட் அமீர் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் அவதானம் செலுத்தவுள்ளனர். இவர்கள் அணியின் ஒப்பந்தத்தில் இல்லாவிட்டாலும், அவர்கள் அனுபவம் வாய்ந்த வீரர்கள். குறித்த இருவரும், பாகிஸ்தான் அணிக்கும், இளம் வீரர்களுக்கும் முக்கியமான ஊன்றுகோலாக இருப்பார்கள்” என மிஸ்பா உல் ஹக் மேலும் குறிப்பிட்டார்.

முன்னாள் அணித் தலைவர்  சர்ப்ராஸ் அஹமட் கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தில் B பிரிவில் இணைக்கப்பட்டுள்ளார். அத்துடன், இவர் அணியின் எதிர்கால திட்டங்களில் கட்டாயமாக இணைக்கப்படுவார் எனவும், அவருடைய அனுபவம் மற்றும் அறிவு அணிக்கு தேவையெனவும் மிஸ்பா உல் தெரிவித்துள்ளார்.  

இதேவேளை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை புதிய ஒரு ஒப்பந்த பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பிரகாசித்து வரும் இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் சபையின் ஒப்பந்தம் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி, ஹய்டர் அலி, ஹரிஸ் ரஹூப் மற்றும் மொஹமட் ஹஸ்னைன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் வீரர்கள் ஒப்பந்தம் 2020-21

பிரிவு A – அசார் அலி, பாபர் அசாம், ஷயீன் ஷா அப்ரிடி  

பிரிவு B – அபிட் அலி, அஷாட் சபிக், ஹரிஸ் சொஹைல், மொஹமட் அப்பாஸ், மொஹமட் ரிஸ்வான், சர்பராஸ் அஹமட், சதாப் கான், ஷான் மசூட், யசீர் ஷா

C – பகர் ஷமான், இப்திகார் அஹமட், இமாட் வசீம், இமாம் உல் ஹக், நஷீம் ஷா, உஸ்மான் ஷின்வாரி

வளர்ந்து வீரர்கள் பிரிவு – ஹய்டர் அலி, ஹரிஸ் ரஹூப், மொஹமட் ஹஸ்னைன்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<