வெற்றிவாகை சூடிய ரெட்சன் விளையாட்டுக் கழகம்

210
 

FA கிண்ண கால்பந்து சுற்றுத் தொடரின் கம்பளை கால்பந்து லீக்கிற்கான இறுதிப் போட்டியில் கெலிஓயா விளையாட்டுக் கழகத்தை எதிர் கொண்ட ரெட்சன் விளையாட்டுக் கழகம், 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது.

FA கிண்ண மாவனல்லை லீக் சம்பியனாக முடிசூடிய யுனைடட் அணி

நடப்பு FA கிண்ண கால்பந்து சுற்றுத் தொடரின் மாவனல்லை…

மழையுடன் போட்டியை ஆரம்பித்த ரெட்சன் அணி எதிரணியின் கோலை நோக்கி போட்டியின் நான்காவது நிமிடத்தில் மேற்கொண்ட முதலாவது முயற்சியிலே தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றது. இதன்போது கிடைக்கப்பெற்ற கோணர் வாய்ப்பை பயன்படுத்தி, தனஞ்சய உள்ளனுப்பிய பந்தை கெலிஓயா அணியின் பின்கள வீரர்கள் தடுத்தாடிய போது, ரெட்சன் அணியின் வீரரான குருகுலசுரியவினால் முதல் கோல் பெறப்பட்டது.

போட்டியின் 7ஆவது நிமிடத்தில் மழை காரணமாக போட்டி சற்று இடைநிறுத்தப்பட்ட போதும், சிறிது நேரத்தின் பின்னர் நடுவர் போட்டியை ஆரம்பித்தார். போட்டியின் 16ஆவது நிமிடத்தில் கெலிஓயா அணிக்கு எதிரணியின் பெனால்டி எல்லையின் வலது மூலைக்கு அருகில் கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக் வாய்ப்பை பெற்ற முஜாஹீத் சிறந்த முறையில் பந்தை கோலை நோக்கி செலுத்தினார். எனினும் பந்தானது கோல் கம்பங்களில் பட்டு எல்லைக் கோட்டை தாண்டிச் சென்றது.

லிதுவேனியாவுடனான மோதலை சமநிலையில் முடித்த இலங்கை

கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இன்று (08)…

மேலும் ரெட்சன் அணியின் முன்கள வீரரான மதீரத்னிற்கு போட்டியின் 22ஆவது நிமிடத்தில் தனது அணியை மற்றுமொரு கோல் மூலம் முன்னிலைப்படுத்துவதற்கு கிடைக்கப்பெற்ற இரு வாய்ப்புக்களையும் சிறந்த முறையில் பயன்படுத்துவதில் தோல்வியுற்றார்.

போட்டியின் 30ஆவது நிமிடத்தின் பின்னர் கெலிஓயா அணியின் மத்தியகளத்திற்கும் முன்களத்திற்கும் இடையில் நிலவிய சிறந்த பந்து பரிமாற்றத்தின் பின்னர் தொடராக கிடைக்கப்பெற்ற இருவாய்ப்புக்களையும் ரெட்சன் அணியின் கோல் காப்பாளர் சிறப்பாக தடுத்தாடினார்.

முதல் பாதியின் இறுதி வாய்ப்பாக போட்டியின் 45ஆவது நிமிடத்தில் மத்திய கள வீரரான உக்குவத்த மூலம் எதிரணியன் கோலை நோக்கி உதையப்பட்ட பந்தானது கோல் கம்பங்களில் பட்டு வெளியேறியது. அத்துடன் முதல் பாதி நிறைவுற்றது.

முதல் பாதி: ரெட்சன் விளையாட்டுக் கழகம் 1 – 0 கெலிஓயா விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியின் போது இரு அணிகளுக்கும் முதல் 10 நிமிடங்களில் பல ப்ரீ கிக் வாய்ப்புக்கள் பெனால்டி எல்லைக்கு அருகில் கிடைக்கப்பெற்றன. எனினும் இரு அணிகளும் அவற்றை முறையாக பயன்படுத்த தவறின.

போட்டியின் 72ஆவது நிமிடத்தில் ரெட்சன் அணியின் முன்கள வீரரான மதீரத்ன தனது சிறப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். தனக்கு மத்திய களத்தில் கிடைக்கப் பெற்ற பந்தை எதிரணியின் பின்கள வீரர்களையும் தாண்டி சிறந்த முறையில் பெனால்டி எல்லை வரை வேகமாக கொண்டு சென்றார். எனினும் கெலிஒயா அணியின் கோல் காப்பாளர் சிறப்பாக செயற்பட்டு பந்தை தடுத்தாடினார்.

இரண்டு நிமிடங்களின் பின்னர் கெலிஒயா அணியின் ரிபாஸ் மற்றும் பாஸித் ஆகிய வீரர்களுக்கிடையில் நிலவிய சிறந்த பந்து பரிமாற்றத்தின் பின்னர் பாஸித் உள்ளனுப்பிய பந்தை ஹஸீப் தனது தலையால் முட்டி கோலாக்க முயன்ற போதும் அது பலனளிக்கவில்லை. உடனே இடது மூலையில் இருந்த கிரிஸ்டல்பலஸிருந்து இணைந்து கொண்ட ரவ்ஸான் பந்தை முதல் முறையே கோலை நோக்கி உதைந்தார். எனினும் பந்தானது கோல் கம்பங்களிற்கு மேலால் சென்றது.

குரோஷியாவை வீழ்த்தி இரண்டாவது தடவையாக உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ்

குரோஷிய அணியுடனான விறுவிறுப்பான இறுதிப்….

போட்டியின் 81ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லையின் வலது மூலையில் கிடைக்கப் பெற்ற ப்ரீ கிக் வாய்ப்பை பெற்ற உக்குவத்த, பந்தை வலது மூலையினுடாக தரை வழியாக உள்ளனுப்பினார். இந்த கோலின் மூலம் ரெட்சன் அணி தனது வெற்றியை மேலும் உறுதி செய்தது.

போட்டியின் இறுதித் தருவாயில் கெலிஓயா அணிக்கு போட்டியில் வெற்றி பெற மேலும் சில வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்றன. எனினும் அவற்றை கெலிஓயா அணி வீரர்கள் முறையாக பயன்படுத்த தவறியதால், அவ்வாய்ப்புக்கள் பலனற்றுப் போயின. அத்துடன் சில நிமிடங்களில் நடுவர் போட்டியை நிறைவு செய்தார்.

முழு நேரம்: ரெட்சன் விளையாட்டுக் கழகம் 2 – 0 கெலிஓயா விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்
ரெட்சன் விளையாட்டுக் கழகம் – குருகுலசுரிய 4′ , உக்குவத்த 81′

மஞ்சள் அட்டைகள்
ரெட்சன் விளையாட்டுக் கழகம் – தனஞ்சய, நவரத்ன
கெலிஒயா விளையாட்டுக் கழகம் – ரிபாஸ், கியாஸ், முர்ஸித்

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<