வான்டேஜ் எப்.ஏ கிண்ண அரையிறுதி மோதல்கள் இவ்வார இறுதியில்

251

இலங்கையின் மிகப் பழமையான கால்பந்து தொடரான வான்டேஜ் எப்.ஏ. கிண்ண சுற்றுப் போட்டியின் இந்த வருடத்திற்கான அரையிறுதிப் போட்டிகள் இம்மாதம் 25ஆம் திகதி சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

இதில், குறித்த தினம் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் முதல் அரையிறுதியில் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம், பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொள்ளவிருப்பதோடு இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் கொழும்பு கால்பந்துக் கழகத்தை எதிர்கொள்ளவுள்ளது.

நடப்புச் சம்பியனான இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம்,  காலிறுதிச் சுற்றில் இலங்கை போக்குவரத்து சபை விளையாட்டுக் கழகத்தை 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் அணியாக இம்முறை தொடரில் அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.

காலிறுதி முடிவுகள்

மற்றொரு பலம்கொண்ட அணியான கொழும்பு கால்பந்து கழகம் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் நியு யங்ஸ் கால்பந்துக் கழக அணியை பெனால்டி ஷுட் அவுட்டில் 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றே அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இதனிடையே வலுவான ரினௌன் அணிக்கு எதிரான போட்டியை பெனால்டி ஷுட் அவுட் (3-1) முறையில் வென்றே பொலிஸ் விளையாட்டுக் கழகம் அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.

15 தடவைகள் எப்.ஏ. கிண்ண சம்பியன் பட்டத்தை வென்ற சௌண்டர்ஸ் கழகம் தனது காலிறுதிப் போட்டியில் சிறைச்சாலை விளையாட்டுக் கழகத்திடம் கடும் சவாலை சந்தித்தது. எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற இந்தப் போட்டியில் கசுன் ஜயசூரிய பெற்ற இரட்டை கோல் மூலமே சௌண்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒரு சில மாதங்கள் தாமதத்திற்கு பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 60 கால்பந்து லீக்குகளின் 715 கழகங்களுடன் இம்முறை எப்.ஏ. கிண்ணம் ஆரம்பமானதோடு கடந்த ஒக்டோபர் மாதம் 16 அணிகள் மோதும் காலிறுதிக்கு முன்னைய சுற்றுப் போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க