எட்டாவது முறை FA கிண்ணத்தை கைப்பற்றியது செல்சி அணி

170
Image Courtesy - Getty Image

உலகில் மிகவும் பழைமை வாய்ந்த கால்பந்தாட்ட தொடரான இங்கிலாந்து கால்பந்தாட்ட கழகங்களுக்கு இடையிலான 137 ஆவது FA கிண்ண இறுதிப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடட் மற்றும் செல்சி ஆகிய அணிகள் நேற்று இங்கிலாந்தின் வெம்பிளி மைதானத்தில் மோதியிருந்தன.

வீடியோ நடுவர் முறைமை (Video Assistant Referee) அறிமுகப்படுத்தி விளையாடிய முதலாவது இறுதிப் போட்டியாக இருந்த இந்த மோதலில் செல்சி அணி 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது. இது அவ்வணியின் 8 ஆவது FA கிண்ண வெற்றியாகும். 

2018 உலகக் கிண்ணம்: இங்கிலாந்து அணியின் முன்னோட்டம்

உலகின் சிறந்த கால்பந்து லீக் என்ற பெருமையை பெற்றிருந்தபோதும் 1966 உலக சம்பியனான இங்கிலாந்து கால்பந்து அணியால் 1990 இல் இருந்து அரையிறுதியை………..

இரு அணிகளும் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் FA கிண்ண இறுதிப் போட்டியில் சந்தித்து இரு அணிகளும் தலா ஒவ்வொரு முறை வென்றிருந்தனர். 

1994 ஆம் ஆண்டு மென்செஸ்டர் யுனைடட் அணி 4 – 0 என்ற கோல்கள் அடிப்படையிலும் 2007 ஆம் ஆண்டு 1 – 0 என்ற மேலதிக நேர கோலின் மூலம் செல்சி அணியும் வெற்றி பெற்றிருந்தன. 

செல்சி, ப்ரீமியர் லீக் கழகம் என்பதனால் மூன்றாம் சுற்றிலிருந்து தனது FA கிண்ண பயணத்தை தொடங்கியது. நோர்விச் அணியை பெனால்டி உதைகள் மூலம் 5 – 3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் செல்சி அணி வெற்றி பெற்று அடுத்தடுத்த சுற்றுக்களில் முறையே நிவ்கஸ்டல் யுனைடட் மற்றும் ஹல் சிட்டி ஆகிய அணிகளை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியில் லைஸ்டர் சிட்டி அணியை 2 – 1 கோல்கள் அடிப்படையிலும் அரையிறுதி போட்டியில் சௌதம்டன் அணியை 2 – 0 கோல்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு செல்சி தெரிவானது. 

மென்செஸ்டர் யுனைடட் அணியும் அவ்வாறே மூன்றாம் சுற்றிலிருந்து தனது FA கிண்ண பயணத்தை தொடங்கியது. மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் சுற்றுக்களில் முறையே டேர்பி கௌன்டி, யொவிலி டவுன் மற்றும் ஹட்டஸ்பீஃல்ட் டவுன் ஆகிய அணிகளை இலகுவாக வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. காலிறுதியில் பிறைடன் ஹோவ் அல்பியன் அணியை 2 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. டொடென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ் அணியை அரையிறுதியில் சந்தித்த மென்செஸ்டர் அணி கடுமையான போட்டிக்கு மத்தியில் 2 – 1 கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 

உலகக் கிண்ணத்தின் வரலாற்றுக் கதை

பிஃபா என்ற வார்த்தையைத் தெரியாத விளையாட்டு ஆர்வளர்கள் இன்று இருக்கின்றனர் என்றார் அது வியப்படைய வேண்டிய ஒரு விடயமாக இருக்கும்……

நேற்றைய இறுதிப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி காலம் சென்ற செல்சி மற்றும் மென்செஸ்டர் யுனைடட் அணிகளின் முன்னாள் வீரரான ரேய் வில்கின்ஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பபட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

நேற்றைய இறுதிப் போட்டியில் இரு அணிகளும் தமது வெற்றிக்காக மும்முரமாக விளையாடின. போட்டியின் 21 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் அணியின் பெனால்டி எல்லைக்குள் செல்சி அணியின் ஹஸார்ட் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டதைத்தொடர்நது செல்சி அணிக்கு பெனால்டி உதை வழங்கப்பட்டது. இதனை ஹஸார்ட் இலகுவாக கோலாக மாற்றினார். இதுவே கடைசியில் போட்டியின் வெற்றிக்கான கோலாக மாறியது. 

போட்டியில் பல சந்தர்ப்பங்களில் மென்செஸ்டர் யுனைடட் அணியினால் கோல்கள் பெற முனைந்த போதும் அவை அனைத்தும் செல்சி கோல் காப்பாளரால் சிறந்த முறையில் தடுத்து நிறுத்தப்பட்டன. மேலும் மென்செஸ்டர் அணியின் அலக்சிஸ் சன்சேஸ் இனால் பெறப்பட்ட கோல் ஒன்று வீடியோ நடுவரின் உதவியுடன் ஒஃப் சைட் கோலாக அறிவிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது. போட்டியின் இறுதி நேரத்தில் பொக்பா தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்திற்கு வெளியால் சென்றதனால் அவர்களின் கடைசி முயற்சியும் தோல்வியில் முடிய, போட்டி முடிவில் செல்சி அணி 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியனாக முடிசூடியது. 

முழு நேரம்: செல்சி 1 – 0 மென்செஸ்டர் யுனைடட்

கோல் பெற்றவர்

செல்சி – ஹஸார்ட் 21’  

>>மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க<<