கிழக்கு மாகாண ஒருநாள் தொடரின் சம்பியனாக திகாமடுல்ல விளையாட்டுக் கழகம்

226

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) அனுமதியோடு, கிழக்கு மாகாண கிரிக்கெட் சபை டிவிஷன் – II கழக அணிகள் இடையே ஒழுங்கு செய்த ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியில் ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தினை 3 விக்கெட்டுக்களால் தோற்கடித்து திகாமடுல்ல விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த ஆறு முன்னணி கிரிக்கெட் கழகங்கள் இரண்டு குழுக்களாக பங்கெடுத்த இந்த ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டிக்கு தத்தமது குழுக்களில் முன்னிலை பெற்றுக்கொண்ட ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழக அணியும், அம்பாறை திகாமடுல்ல விளையாட்டுக் கழக அணியும் தெரிவாகின. இதனை அடுத்து தொடரின் இறுதிப் போட்டி இன்று (15) அம்பாறை HM. வீரசிங்க மைதானத்தில் ஆரம்பமானது.

அம்பாறை சந்ததிஸ்ஸ விளையாட்டுக் கழகத்தினை தோற்கடித்த யங் ஹீரோஸ்

இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதியுடன், கிழக்கு மாகாண கிரிக்கெட் சங்கம் டிவிஷன் – II கழகங்கள் இடையே ஒழுங்கு செய்த ஒரு நாள்….

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழக அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காக தெரிவு செய்து கொண்டனர்.

இதன்படி முதலில் துடுப்பாடத் தொடங்கிய ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழக அணி ஆரம்பம் முதலே தடுமாறி விக்கெட்டுக்களை பறிகொடுக்கத் தொடங்கியது.

பின்னர் தொடர்ச்சியான விக்கெட்டுக்களினால் தமது சரிவில் இருந்து மீள முடியாத ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம்  31.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 81 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழக அணியின் துடுப்பாட்டம் சார்பாக நஜாத் 36 ஓட்டங்கள் பெற்று அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ய, ஏனைய ஒருவரேனும் கூட இருபது ஓட்டங்களையேனும் தாண்டியிருக்கவில்லை.

இதேநேரம் அபார பந்துவீச்சினை வெளிப்படுத்திய திகாமடுல்ல விளையாட்டு கழக அணியின் பந்துவீச்சில் இஸ்மத் வெறும் 9 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்ற, எரந்த 4 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

Photo Album :  EPCA – Digamadulla SC vs Eravur YHSC – Final (Division II) 

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக திகாமடுல்ல விளையாட்டுக் கழக அணிக்கு 50 ஓவர்களில் மிகவும் சவால் குறைந்த 82 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய திகாமடுல்ல விளையாட்டு கழக அணியினர் ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டு கழக வீரர் பாசிலின் பந்துவீச்சு காரணமாக ஒரு தடுமாற்றத்தை காட்டியிருந்தனர்.

எனினும், தொடர்ந்து பொறுமையாக ஆடிய திகாமடுல்ல விளையாட்டு கழக அணி 21.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 82 ஓட்டங்களுடன் போட்டியில் வெற்றி பெற்றது.

கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான, 15 பேர் அடங்கிய இந்திய வீரர்கள் குழாம், இன்று (15) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்ட…

திகாமடுல்ல அணியின் வெற்றியினை நிப்ராஸ் 27 ஓட்டங்களைப் பெற்றும், சாலிக 23 ஓட்டங்களைப் பெற்றும் உறுதி செய்தனர். மறுமுனையில் ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழக அணியின் பந்துவீச்சு சார்பில் பாசில் 4 விக்கெட்டுக்களை சாய்த்தும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் சுருக்கம்

ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் – 81 (31.3) – நஜாத் 36, இஸ்மத் 5/09, எரந்த 4/19

திகாமடுல்ல விளையாட்டுக் கழகம் – 82/7 (21.4) – நிப்ராஸ் 27, பாசில் 4/37

முடிவு – திகாமடுல்ல விளையாட்டுக் கழகம் 3 விக்கெட்டுக்களால் வெற்றி

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<