சிவானந்தாவை வீழ்த்தி மாகாண தொடரில் லக்கி அணி முதல் வெற்றி

75

கிழக்கு மாகாண டிவிஷன் – II உள்ளூர் கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெறும், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) நிறைவுக்கு வந்த போட்டியொன்றில் மட்டக்களப்பு லக்கி விளையாட்டுக் கழகம், சிவானந்தா அணியினை 6 ஓட்டங்களால் தோற்கடித்து தொடரில் முதல் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது. 

சிறந்த பந்துவீச்சினால் வெற்றி பெற்ற ஏறாவூர் யங் ஹீரோஸ்

கிழக்கு மாகாண டிவிஷன் – II அணிகள் இடையே நடைபெறும்…….

மட்டக்களப்பு சிவானந்தா கிரிக்கெட் கழகத்தின் சொந்த மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய லக்கி விளையாட்டுக் கழக அணியினர், 44 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 182 ஓட்டங்களைப் பெற்றனர். 

லக்கி விளையாட்டுக் கழகத்தின் துடுப்பாட்டம் சார்பில் மேனகாந்தன் 43 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்களை பதிவு செய்ய, ஜானுஷன் 38 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம், சிவானந்தா அணியின் பந்துவீச்சு சார்பில் துஷியேந்திரன் 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க ப்ராணவன், சாத்வீகன் மற்றும் விதுஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

தொடர்ந்து, போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 183 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய சிவானந்தா அணியினர், 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 176 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவினர். 

சிவானந்தா அணியின் துடுப்பாட்டம் சார்பாக விதுஷன் அரைச்சதம் தாண்டி 63 ஓட்டங்கள் பெற்றிருந்த போதும் அவரது துடுப்பாட்டம் வீணாகியிருந்தது. 

மறுமுனையில், லக்கி அணியின் பந்துவீச்சு சார்பாக மேனகாந்தன் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், முரளி கிரிஷ்னண் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர். 

போட்டியின் சுருக்கம்

லக்கி விளையாட்டுக் கழகம் – 182 (44) – மேனகாந்தன் 43, ஜனுஷன் 38, துஷியேந்திரன் 43/3, ப்ராணவன் 1/2, சாத்வீகன் 35/2, விதுஷன் 39/2 

சிவானந்தா கிரிக்கெட் கழகம் – 176 (44.4) – விதுஷன் 63, மேனகாந்தன் 33/4, முரளி கிரிஷ்னண் 38/3, நிஷாந்தன் 30/2

முடிவு – லக்கி விளையாட்டுக் கழகம் 6 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<