இலங்கையின் முதலாவது செயற்கை புற்தரை கால்பந்து மைதானம் திறந்துவைப்பு

521

கோட்டே – பெத்தகானவில் உள்ள இலங்கை கால்பந்து பயிற்சி மையத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது செயற்கை புற்தரை கால்பந்து மைதானத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கடந்த சனிக்கிழமை(10) உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.  

இலங்கை கால்பந்து அணியை மீட்டெடுக்கும் சவாலை ஏற்றுள்ள பக்கீர் அலி

சர்வதேச கால்பந்து சம்மேளத்தின் (FIFA)….

சர்வதேச கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கு உகந்த வகையில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் நிதி உதவியினால் (சுமார் ஏழரைக் கோடி ரூபா செலவில்) இந்த செயற்கை புற்தரை கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 40 கால்பந்து வீரர்களுக்கும், 15 அதிகாரிகளுக்கும் தங்கியிருந்து பயிற்சிகளைப் பெறுவதற்கான அனைத்து வசதிகளையும் கொண்ட விடுதி, உடற் பயிற்சி கூடம் மற்றும் கேட்போர்கூடமொன்றும் இந்த வலாகத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.    

முன்னதாக இந்த மைதானத்தில் டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் ஒருசில போட்டிகள் நடத்தப்பட்ட போதிலும், நிர்மானப் பணிகள் முழுமையாக நிறைவு பெறாத காரணத்தால் வீரர்களின் பாவனைக்காக இந்த மைதானம் கையளிக்கப்படவில்லை.  

இந்நிலையில் குறித்த தினத்தில் மைதானத்தை திறந்துவைத்த பிறகு கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர், ஒரு காலத்தில் இலங்கையில் கால்பந்து விளையாட்டு அனைவர் மத்தியிலும் மிகவும் பிரபல்யமிக்கதாக காணப்பட்டது. எனினும், அதன் பிரபல்யம் கடந்த காலங்களில் குறைவடையத் தொடங்கியது அனைவரும் அறிந்த உண்மை. எனவே கிரிக்கெட், ரக்பி போன்ற விளையாட்டுக்களைப் போல கால்பந்து விளையாட்டையும் மீண்டும் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. இதன் முதற்கட்டமாக இலங்கை கால்பந்து வரலாற்றில் இத்தகைய மைதானம் ஒன்று நிர்மானிக்கப்பட்டமையை இட்டு பெரு மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

Photos: Beddegana Artificial Football Turf Official Opening Ceremony

Photos of Beddegana Artificial Football Turf Official Opening.

கால்பந்தில் முன்னேற்றம் கண்டுள்ள பல நாடுகளில் உள்ள வீரர்கள் இவ்விளையாட்டை தொழில்சார் முறையிலேயே மேற்கொள்கின்றனர். எனினும், இலங்கை கால்பந்து வீரர்கள் கால்பந்து விளையாட்டை தொழில்சார் முறையில் மேற்கொள்வது மிகவும் குறைவு. இலங்கை கால்பந்தின் முன்னேற்றத்திற்கு இதுவும் ஒரு பெரும் தடையாக உள்ளது. இது குறித்தும் அமைச்சர் குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்தார்.

“எமது தொழில்முறை கால்பந்து வீரர்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதுகூட எமக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக எமது வீரர்கள் கால்பந்து விளையாட்டை தொழிலாகத் தெரிவுசெய்து அதற்காக முழு நேரத்தையும் செலவிட்டால் அவர்களுக்கு எந்தவொரு வருமானமும் கிடைக்கப் போவதில்லை. அதேபோல தொழிலொன்றில் ஈடுபட்டுக் கொண்டு இந்த விளையாட்டை முன்னெடுப்பதும் மிகவும் கடினமாக உள்ளது என்பதையும் நன்கு அறிவேன்.

எனவே, கால்பந்து சம்மேளனம் 9 மாகாணங்களுக்கு தனித்தனியாக அணிகளை உருவாக்கினால் அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நான் ஏற்பாடுகளை செய்துகொடுப்பேன். இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தின் விரைவில் கலந்தாலோசித்து முடிவொன்றை அறிவிப்பேன். அதேபோல ஒவ்வொரு மாகாணத்துக்கும் அல்லது மாவட்டத்துக்கும் தனித்தனி கால்பந்து பயிற்சியாளர்களை நியமித்து அவர்களுக்கும் கொடுப்பனவுகளை வழங்கி இந்த செயற்றிட்டத்தை முன்னெடுத்தால் நிச்சயம் எமது கால்பந்து விளையாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே இலங்கையின் கால்பந்து விளையாட்டின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராகவுள்ளோம்” எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அடுத்த வாரம் ஆரம்பமாகும் தேசிய கால்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு புதிய..

அத்துடன், புட்சால் கால்பந்து விளையாட்டை நாடு பூராகவும் அபிவிருத்தி செய்வதற்கு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கால்பந்து மைதானங்களை நிர்மானிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா கருத்து வெளியிடுகையில், சர்வதேச மட்டத்தில் கால்பந்து போட்டிகளில் விளையாடவுள்ள எமது வீரர்களுக்கு இந்த மைதானம் நிறைய நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கவுள்ளது. அதிலும் எதிர்வரும் 10 வருடங்களுக்கு இந்த மைதானத்தில் வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதேநேரம், குறித்த நிகழ்விற்குப் பிறகு நடைபெற்ற கண்காட்சி கால்பந்து போட்டியில் அமைச்சர் தயாசிறி தலைமையிலான விளையாட்டுத்துறை அமைச்சின் அணியும், கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகள் அணியும் பங்கேற்றிருந்தது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சின் அணி 6-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.