ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் செனிரு, பாரமி சிறந்த வீரர்களாக முடிசூடல்

212

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் 88 ஆவது தடவையாகவும் நடைபெற்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் இன்று நிறைவுக்கு வந்தது.

இதில் வருடத்தின் அதி சிறந்த சிரேஷ்ட மெய்வல்லுனராக கொழும்பு றோயல் கல்லூரியின் உயரம் பாய்தல் வீரர் செனிரு அமரசிங்கவும், பெண்களுக்கான அதி சிறந்த மெய்வல்லுனராக குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியைச் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லாவும் தெரிவாகினர்.

சேர். ஜோன் டாபர்ட் போட்டித் தொடரின் இரண்டாவது நாளில் சாதனை மழை

ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 3 ஆவது இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள செனிரு அமரசிங்க, 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 2.10 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

அதேபோன்று, இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியைச் சேர்ந்த பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் மற்றும் 3000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தார்.

இதேநேரம், வருடத்தின் அதிசிறந்த ஆண்கள் பாடசாலைக்கான சம்பியன் பட்டத்தை 206 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி அணியும், அதி சிறந்த பெண்கள் பாடசாலைக்கான விருதை 240 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட வலள ஏ ரத்னாயக்க கல்லூரி அணியும் பெற்றுக் கொண்டன.

சிலோன் பிஸ்கெட் நிறுவனத்தின் ரிட்ஸ்பறி சொக்கலட்ஸ் தொடர்ச்சியாக 8 ஆவது தடவையாகவும் அனுசரணை வழங்கிய இம்முறை போட்டிகளுக்காக நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 1500 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர்.

16, 18 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இம்முறை சேர். ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 23 போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இதில் ஆண்கள் பிரிவில் 12 போட்டிச் சாதனைகளும். பெண்கள் பிரிவில் 11 போட்டிச் சாதனைகளும் நிகழ்த்தப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் பிரகாசித்த ஹார்ட்லி, மகாஜனா வீரர்கள்

இது இவ்வாறிருக்க, போட்டிகளின் முதல் நாளில் மூன்று போட்டி சாதனைகளும், இரண்டாவது நாளான நேற்றைய தினம் 12 போட்டி சாதனைகளும் முறியடிக்கப்பட்டன. இந்த நிலையில், போட்டித் தொடரின் இறுதி நாளான இன்றைய தினம் (21), எட்டு போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

  • போகொடவின் சிறந்த காலப்பதிவு

இன்று மாலை நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட குருநாகல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல கல்லூரியைச் சேர்ந்த டிலான் போகொட குமாரசிங்க, புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். அதற்காக அவர் 48.23 செக்கன்களை எடுத்துக் கொண்டார். இது அவரது அதி சிறந்த தனிப்பட்ட நேரப் பெறுமதியாகும்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜோன் டார்பட் மெய்வல்லுனர் தொடரில் குருநாகல் மலியதேவ கல்லூரி மாணவன் பசிந்து கொடிகாரவினால் (48.50 செக்.) நிலைநாட்டப்பட்ட சாதனையை அவர் முறியடித்தார்.

ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள 3 ஆவது இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள டிலான் போகொட, கடந்த ஜுலை மாதம் தாய்லாந்தின் பெங்கோக் நகரில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் விழாவுக்கான ஆசிய தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றியிருந்தார்.

இதில் தங்கப் பதக்கம் வென்ற போகொட, 48.58 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதியை பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், இம்முறை ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டிகளில் சிறந்த மத்திய தூர ஓட்ட வீரருக்கான விருதையும் டிலான் போகொட பெற்றுக்கொண்டார்.

  • ஷெலிண்டாவுக்கு ஹெட்ரிக் பதக்கம்

இம்முறை இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பாக போட்டியிடவுள்ள கேட்வே சர்வதேச பாடசாலை மாணவி ஷெலிண்டா ஜென்சென், இன்று மாலை நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 12.41 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

கடந்த வருடம் நடைபெற்ற ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் அவரால் நிலைநாட்டப்பட்ட சாதனையை (12.43 செக்.) 0.02 செக்கன்களில் முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனரில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் 32 வருடங்களாக முறியடிக்காமல் இருந்த கனிஷ்ட சாதனையை ஷெலின்டா ஜென்சன் (24.98 செக்.) முறியடித்திருந்தார்.

முதலாவது ஆசிய சவால் கிண்ணத்தை தம்வசமாக்கியது ஈராக்

அதன்பிறகு, கடந்த ஜுலை மாதம் தாய்லாந்தின் பெங்கோக் நகரில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் விழாவுக்கான ஆசிய தகுதிகாண் போட்டிகளிலும் அவர் பங்குபற்றியிருந்தார்.

குறித்த போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றில் 24.99 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்காக தகுதிபெற்றார்.

இதேநேரம், நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் (25.52 செக்.) மற்றும் 4ஓ100 மீற்றர் ஓட்டப் போட்களில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை அவர் பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

  • ஹிரூஷவுக்கு 4 ஆவது பதக்கம்

16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி மாணவனான ஹிரூஷ ஹஷேன் தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியை நிறைவுசெய்ய 11.51 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் பாய்தலில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற அவர், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டி மற்றும் ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று இம்முறை சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டிகளில் நான்கு பதக்கங்களை வென்ற முதல் வீரராகவும் இடம்பிடித்தார்.

இந்த நிலையில், இம்முறை ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டிகளில் சிறந்த நீளம் பாய்தல் வீரருக்கான விருதையும் அவர் தட்டிச் சென்றார்.

  • தகராறில் முடிந்த அஞ்சலோட்டம்

இன்று மாலை நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 4 x 400 அஞ்சலோட்டத்தில் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரி அணி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. குறித்த போட்டியை நிறைவுசெய்ய 3 நிமிடங்கள் 18.96 செக்கன்களை அந்த அணி எடுத்துக்கொண்டது.

முன்னதாக 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் வலள ஏ ரத்னாயக்க கல்லூரியினால் (3 நிமி. 21.3 செக்.) நிலைநாட்டப்பட்ட சாதனையை சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு பெனடிக்ட் கல்லூரி மாணவர்கள் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கத் தயாராகும் டில்ஷான்

இதேவேளை, குறித்த போட்டியில் பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி அணி (3 நிமி. 19.24 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி (3 நிமி. 20.69 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. இவ்விரண்டு கல்லூரி அணிகளும் முந்தைய சாதனையை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இது இவ்வாறிருக்க, குறித்த போட்டியின் நிறைவில் பெனடிக்ட் கல்லூரி மாணவர்களுக்கும், புனித பேதுரு கல்லூரி மாணவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக இந்த கைகலப்பு நீடித்தது. அத்துடன், குறித்த வீரர்களின் பெற்றோர்கள், சக மாணவர்கள் என பெரும்பாலானோர் மைதானத்திற்குள் நுழைந்து ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். இறுதியில் சுகததாஸ விளையாட்டரங்கின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்களின் தலையீட்டினால் கைகலப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<