சதத்துடன் நேர்த்தியான துடுப்பாட்டத்துக்கு திரும்பினார் திமுத் கருணாரத்ன

326
Dimuth Karunarathne

திமுத் கருணாரத்ன தனது நேர்த்தியான துடுப்பாட்டத்தினால் பெற்றுக்கொண்ட 25வது சதத்தின் உதவியுடன், மேற்கிந்திய தீவுகள் A அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை A அணி வலுவான நிலையில் உள்ளது.

இலங்கை A அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் A அணிக்கும் இடையிலான நான்கு நாள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் இன்றாகும். முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் A அணி பெற்றுக்கொண்ட 276 ஓட்டங்களுக்கு பதிலடியாக இலங்கை A அணி மலைக்க வைக்கும் வகையில் மிகவும் விரைவாக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இன்றைய ஆட்ட முடிவின்போது, இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில், மொத்தமாக 6 இன்னிங்ஸ்களில் விளையாடிய திமுத் கருணாரத்ன வெறும் 41 ஓட்டங்களை மாத்திரமே பெற்றமையினால், இலங்கை தேசிய அணியில் இருந்து வெளியேறும் இக்கட்டான நிலையிலேயே இருந்தார். எனினும், இன்றைய ஆட்டத்தின்போது அவர் 242 பந்துகளுக்கு முகம் கொடுத்து 15 பௌண்டரிகள் உட்பட 131 குவித்து தேசிய அணிக்கான தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டார்

ஆரம்ப துடுப்பாட்டத்துக்காக திமுத் கருணாரத்னவுடன் களம் இறங்கிய குஷால் ஜனித் பெரேரா இருவரும் இணைந்து மேற்கிந்திய தீவுகள் A அணியின் மந்தமான பந்து வீச்சை அதிரடியாக அடித்தாடி, ஆரம்ப விக்கெட்டுக்காக 219 பந்துகளில் 167 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்

அதிரடியாக விளையாடிய குஷால் ஜனித் பெரேரா, 7 பௌண்டரிகள் 6 சிக்ஸர்கள் அடங்களாக 87 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை துரதிர்ஷ்டமாக சுழற்பந்து வீச்சாளர் கார்ன்வெல்லின் பந்து நேரடியாக விக்கெட்டில் பட்டு ஆட்டமிழந்தார். தொடர்ந்து துடுப்பாட வந்த லஹிரு திரிமான 2 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை லீவர்த் தீவு கழகத்தின் 23 வயதான சுழற்பந்து வீச்சாளரான கார்ன்வெல்லின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இளஞ்சிவப்பு பந்தினால் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய குணரத்ன

இளஞ்சிவப்பு பந்தினால் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய குணரத்ன; 96 ஓட்டங்களை விளாசிய விஷாலுல் சிங்

புனித ஜோசப் கல்லூரியின் முன்னாள் வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் தொடர்ந்து களம் இறங்கிய ரோஷன் சில்வா ஆகியோர், மூன்றாம் விக்கெட்டுக்காக 30 ஓட்டங்களை இணைப்பாட்டமாக எடுத்திருந்த வேளை கார்ன்வெல்லின் மூன்றாவது விக்கெட்டாக ரோஷன் சில்வா ஆட்டமிழந்து சென்றார்.

ரோஷன் சில்வா 34 பந்துகளுக்கு 17 ஓட்டங்களையும், 5ஆவது துடுப்பாட்ட வீரராக களம் இறங்கிய சரித் அசலங்க 18 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை கெமர் ரோச்சின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் கள தடுப்பு செய்துகொண்டிருந்த சமர் பரூக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான நிரோஷன் டிக்வெல்லவுடன் இணைந்து 5வது விக்கெட்டுக்காக 75 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்த வேளை பகுதி நேர பந்து வீச்சாளரான குடாகேஷ் மோட்டியின் பந்து வீச்சில் 81ஆவது ஓவரில் திமுத் கருணாரத்ன ஆட்டமிழந்து சென்றார்.

டிக்வெல்ல, 10 பௌண்டரிகளுடன் 70 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றிருந்த போது கார்ன்வெல் வீசிய பந்தில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து வந்த அனுக் பெர்னாண்டோ ஓட்டமெதுவும் பெறாமல் கார்ன்வெல்லின் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் லக்க்ஷன் சண்டகன் LBW முறையில் ஆட்டமிழக்க, கார்ன்வெல் 87 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்கைளைக் கைப்பற்றிக்கொண்டார்.

 போட்டி மூன்றாவது நாளாக நாளை தொடரும்..

மேற்கிந்திய தீவுகள் A அணி 276 (86.4) – விஷாலுல் சிங் 96, சமர் ப்ரூக்ஸ் 65, கெமர் ரோச் 45, கிரான் பவல் 36, அசோலா குணரத்ன 3/27, அசித்த பெர்னாண்டோ 2/35, சரித அசலாங்க 2/53.  

இலங்கை A அணி 348/8 (93) – திமுத் கருணாரத்ன 131, குஷால் ஜனித் பெரேரா 87, நிரோஷான் டிக்வெல 59 ரகீம் கார்ன்வெல் 6/87