இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இலங்கையிலிருந்து இரு வீரர்கள் தெரிவு

126

தாய்லாந்தின் பெங்கொங் நகரில் இன்று (04) ஆரம்பமாகிய இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெற்றி கொள்ள,  ஆண்களுக்கான 400 மீற்றரில் கலந்துகொண்ட டிலான் போகொட சிறந்த நேரப் பெறுமதியுடன் இலங்கைக்கான இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.   

உலக கனிஷ்ட மெய்வல்லுனருக்கான இலங்கை அணி அறிவிப்பு

பின்லாந்தின் தம்பரே நகரில் எதிர்வரும் ஜுலை மாதம்….

இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸில் நடைபெறவுள்ள இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதற்கான வாய்ப்பையும் இவ்விரண்டு வீரர்களும் பெற்றுக்கொண்டனர்.  

இலங்கை, இந்தியா உள்ளிட்ட 35 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 400இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்குபற்றும் இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டித் தொடர் இன்று காலை தாய்லாந்தின் பெங்கொங் நகரில் ஆரம்பாகியது. இலங்கை சார்பாக 3 வீரர்களும், 4 வீராங்கனைகளும் இத் தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர்.  

இதில், இன்று பிற்பகல் நடைபெற்ற பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியைச் சேர்ந்த பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, போட்டித் தூரத்தை 6 நிமிடங்களும் 35.20 செக்கன்களில் ஓடிமுடித்து தங்கப் பதக்கம் வென்றார். இது அவரது அதிசிறந்த தனிப்பட்ட நேரப் பெறுதியாகவும் பதிவாகியது.

இதேநேரம், இளையோர் ஒலிம்பிக் விழாவுக்கான அதிசிறந்த காலத்தைப் பதிவு செய்த முதல் வீராங்கனையாகவும் அவர் இடம்பிடித்தார். முன்னதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிளயர் பலு என்ற வீராங்கனை குறித்த போட்டியை 6 நிமிடங்களும் 35.80 செக்கன்களில் ஓடிமுடித்ததே சிறந்த காலப் பிரதியாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாரமியின் கடந்த கால வெற்றிகள் குறித்து அறிந்துகொள்ள

எனவே, கடந்த மூன்று மாதங்களாக பெண்களுக்கான தடைதாண்டலில் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பல்வேறு வெற்றிகளை பெற்று வருகின்ற பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆர்ஜென்டீனாவில் நடைபெறவுள்ள இளையோர் ஒலிம்பிக் விழாவிலும் இலங்கைக்கான முதலாவது இளையோர் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்று கொடுக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

இதேநேரம், பாரமியுடன் குறித்த போட்டியில் பங்குகொண்ட சீனாவின் திங்வான் தாங் (06நிமி. 01.09 செக்.) வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்ததுடன், இலங்கை சார்பாக போட்டியிட்ட மற்றுமொரு வீராங்கனையான அஸ்மிகா ஹேரத் (07நிமி. 09.95 செக்.) வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

  • டிலான் போகொட

இந்நிலையில், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை அணியின் மத்திய தூர ஓட்ட வீரரான டிலான் போகொட குமாரசிங்க, எந்தவொரு போட்டியுமின்றி மிக இலகுவாக தங்கப் பதக்கம் வென்றார். அதற்காக அவர் 48.58 செக்கன்களை எடுத்துக் கொண்டார். இது அவரது அதிசிறந்த தனிப்பட்ட நேரப் பெறுமதியாகும்.

இதன்படி, ஆசியாவின் மிகவும் வேகமான மத்திய தூர ஓட்ட வீரராக, இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பை டிலான் போகொட பெற்றுக்கொண்டார்.

எனினும், இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் தகுதிகாண் போட்டியை 48.66 செக்கன்களில் நிறைவு செய்து இறுதிப் போட்டிக்கு அவர் தெரிவாகியிருந்தார்.

25 வருட கால இலங்கை சாதனையை முறியடித்த இந்துனில் ஹேரத்

இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய….

குருநாகல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல கல்லூரி மாணவனான டிலான் போகொட, இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை, 48.55 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டி சாதனையை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டிலானுடன் இந்த ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த கஸகஸ்தான் வீரர் யெபிம் தரஸ்ஸோவ் (48.99 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், தாய்லாந்தின் பொச்சாரா பெச்கேவ் (49.30 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதேவேளை, பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட வலள ரத்னாயக்க கல்லூரி மாணவி சாமினி ஹேரத்துக்கு எதிர்பார்த்தளவு திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது. குறித்த போட்டியை 4 நிமிடங்களும் 41.92 செக்கன்களில் நிறைவுசெய்த அவருக்கு ஐந்தாவது இடத்தை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க