கழக அணிகளுக்கு இடையிலான டயலொக் ரக்பி லீக் தொடரின் 13ஆம் வாரத்திற்கான நான்கு போட்டிகளும் நேற்றைய தினம் (3) இடம்பெற்றன. இப்போட்டிகளில் கண்டி விளையாட்டுக் கழகம், ஹெவலொக் விளையாட்டுக் கழகம், CH&FC மற்றும் CR&FC கழக அணிகள் வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டன.

கண்டி விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

சம்பியன்ஷிப் பட்டத்தை ஏற்கனவே தனதாக்கிக் கொண்ட கண்டி விளையாட்டுக் கழகம் இராணுவ விளையாட்டுக் கழகத்தை ரத்மலான மைதானத்தில் எதிர்கொண்டது.

போட்டியின் முதல் ட்ரையினை கண்டி அணியின் ரிச்சர்ட் தர்மபால பெற்றுக் கொண்டார். திலின விஜேசிங்க கொன்வெர்சன் உதையை வெற்றிகரமாக உதைத்தார். எனினும் பதிலடி கொடுத்த இராணுவ விளையாட்டுக் கழகம் மனோஜ் பண்டார மற்றும் சமீர புலத்சிங்கள ஊடாக ட்ரைகளை பெற்றதுடன், இரண்டு கொன்வெர்சன் உதைகளையும் மேலுமொரு பெனால்டி உதையையும் கயான் சாலிந்த வெற்றிகரமாக உதைத்தார்.

டயலொக் ரக்பி லீக் சம்பியன் பட்டத்தை சுவீகரித்த கண்டி கழகம்

எனினும் முதல் பாதி நிறைவடையும் தருவாயில் கண்டி அணி வீரர் லவங்க பெரேரா ட்ரை வைத்ததுடன் திலின விஜேசிங்க கொன்வெர்சன் உதையை உதைக்க, புள்ளி வித்தியாசம் மூன்றாக குறைந்தது.

முதல் பாதி : கண்டி விளையாட்டுக் கழகம் 14 – 17 இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

இரண்டும் பாதியின் ஆரம்பத்தில் தமது வழமையான ஆரம்பத்தை வெளிக்காட்டிய கண்டி வீரர்கள் அடுத்தடுத்து இரண்டு ட்ரைகள் வைத்தனர். கயான் வீரரத்ன மற்றும் ஹேஷான் கல்ஹார ட்ரைகளை பெற்றுத் தந்ததுடன், திலின விஜேசிங்க ஒரு கொன்வெர்சன் உதையை குறிதவறாது உதைத்தார்.

போட்டியின் இறுதி நிமிடங்களில் கண்டி சார்பில் திலின விஜேசிங்க மற்றும் இராணுவ அணி சார்பில் கயான் சாலிந்த ஆகியோர் ஒவ்வொரு பெனால்டி உதைகளை உதைத்ததுடன், அதன்படி கண்டி அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

முழு நேரம் : கண்டி விளையாட்டுக் கழகம் 29 – 20 இராணுவப்படை விளையாட்டுக் கழகம்


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் ஹெவலொக் விளையாட்டுக் கழகம்

புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை சுவீகரிக்கும் நோக்கத்துடன் ஹெவலொக் மற்றும் கடற்படை விளையாட்டுக் கழக அணிகள் ஹெவலொக் மைதானத்தில் மோதிக் கொண்டன.

ஹெவலொக் அணியானது போட்டியின் 10ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பினை கம்பங்களை நோக்கி உதைக்க முடிவு செய்ததுடன், ரீசா முபாரக் வெற்றிகரமாக உதைத்து மூன்று புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார்.

அதனை தொடர்ந்து கடற்படை அணியின் பின்கள வீரர் திலின வீரசிங்க சிறப்பான ட்ரை ஒன்றை வைத்து அசத்தினார். எனினும் அவரது கொன்வெர்சன் உதை குறிதவறியது. மீண்டும் தனது அணியை முன்னிலைக்கு அழைத்துச் சென்ற ஹெவலொக் வீரர் நிஷோன் பெரேரா அபாரமான ட்ரை ஒன்றை பெற்றுக் கொடுத்தார். அவ்வணியின் கொன்வெர்சன் உதையும் இலக்கை நோக்கி அமையவில்லை.

முதல் பாதி : ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 08 – 05 கடற்படை விளையாட்டுக் கழகம்

முதல் பாதியைப் போன்றே, இரண்டாம் பாதியின் முற்பகுதியிலும் ரீசா முபாரக் பெனால்டி உதை ஒன்றின் மூலம் புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் ஹெவலொக் வீரர்கள் இழைத்த தவறுகளின் காரணமாக கடற்படை அணிக்கு இரண்டு பெனால்டி வாய்ப்புகள் கிட்டியதுடன், திலின வீரசிங்க இரண்டு உதைகளையும் வெற்றிகரமாக உதைத்து புள்ளிகளை சமனாக்கினார்.

இதன்படி இறுதி நிமிடங்களில் போட்டி விறுவிறுப்பாக இடம்பெற்றதுடன் இரு அணிகளும் வெற்றியை தமதாக்கிக் கொள்ள போராடின. எனினும் ஹெவலொக் அணியின் முன்வரிசை வீரர் பிரசாத் மதுஷங்க ட்ரை ஒன்றை வைத்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

முழு நேரம் : ஹெவலொக் விளையாட்டுக் கழகம் 16 – 11 கடற்படை விளையாட்டுக் கழகம்


பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் CH & FC

இப்போட்டியானது ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இடம்பெற்றதுடன், பொலிஸ் அணியானது ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து இரண்டு ட்ரைகளை பெற்று போட்டியை ஆரம்பித்தது. உதார சூரியப்பெரும மற்றும் ஜனித் சந்திமால் ஆகிய வீரர்கள் ட்ரைகளை பெற்றுக் கொடுத்திருந்தனர்.

CH&FC அணி தமது முதல் புள்ளிகளை சேமுவல் மதுவந்தவின் பெனால்டி உதையின் மூலம் பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து அவ்வணியின் லீ கீகல் ட்ரை ஒன்றை வைத்தார். சில நிமிடங்களின் பின்னர் லீ கீகல் தனது இரண்டாவது ட்ரையை வைத்ததுடன் அதற்கு பதிலடி கொடுத்த பொலிஸ் வீரர் வாஜித் பவ்மி ட்ரை ஒன்றைப் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஹென்றி டெரன்ஸ் பெற்றுக் கொடுத்த ட்ரையின் மூலமாக CH&FC அணி முன்னிலை பெற்றுக் கொண்ட போதிலும், பொலிஸ் அணியின் தலைவர் ரசித் சில்வா சிறப்பான ட்ரை ஒன்றைப் பெற்று புள்ளிகளை சமனாக்கினார்.

முதல் பாதி : CH & FC 24 – 24 பொலிஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியின் ஆரம்பத்திலும் இரு அணிகளும் அடுத்தடுத்து ட்ரைகளை பெற்றுக் கொண்டன. CH&FC சார்பில் யோஷித்த ராஜபக்ஷ ட்ரை வைத்ததுடன், மறுமுனையில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்திற்கு பெனால்டி ட்ரை ஒன்று வழங்கப்பட்டது.

ஹெவலொக் அணியை மிரள வைத்த பொலிஸ்

முக்கியமான தருணத்தில் வெற்றி வாய்ப்பை தம்பக்கம் திருப்பிய CH&FC அணியின் முன்கள வீரர்கள் அடுத்தடுத்து இரு ட்ரைகளை பெற்று அசத்தினர். ஹென்றி டெரன்ஸ் மற்றும் ஹஷான் மதுரங்க ட்ரைகளை வைக்க, பொலிஸ் அணியின் எதிர்பார்ப்பு சிதைந்தது.

78ஆவது நிமிடத்தில் CH&FC அணிக்கும் பெனால்டி ட்ரை ஒன்று வழங்கப்பட்டதுடன், அவ்வணியின் வெற்றி உறுதியானது. போட்டியின் இறுதி நிமிடத்தில் பொலிஸ் அணியின் விஹங்க பிவிதுரு ஆறுதல் ட்ரை ஒன்றைப் பெற்றுக் கொடுத்தார்.

முழு நேரம் : CH & FC 50 – 38 பொலிஸ் விளையாட்டுக் கழகம்


CR & FC எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

இவ்விரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டி லோங்டன் பிளேஸ் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் முதல் புள்ளிகளை விமானப்படை வீரர் கயந்த இத்தமல்கொட ட்ரொப் கோல் ஒன்றின் மூலம் பெற்றுக்கொடுத்தார்.

அதன் பின்னர் CR&FC அணியின் ஹிரந்த மனமேந்திர மற்றும் ரீசா ரபாய்டீன் அடுத்தடுத்து ட்ரைகள் வைத்தனர். முதற்பாதியின் இறுதி நிமிடங்களில் CR&FC வீரர் கவிந்து பெரேரா மற்றும் விமானப்படை வீரர் சூரிய கிரிஷான் ஆகியோர் ஒவ்வொரு ட்ரைகளை பெற்றுக் கொண்டனர்.

முதல் பாதி : CR & FC 19 – 10 விமானப்படை விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் இரண்டு அணிகளாலும் புள்ளிகளைப் பெற இயலவில்லை. இந்நிலையில் CR&FC அணித்தலைவர் தரிந்த ரத்வத்த அபாரமான ஓட்டத்தின் பின் ட்ரை ஒன்றை வைத்து புள்ளிவித்தியாசத்தை அதிகரித்தார்.

CR&FC வீரர்கள் அடுத்தடுத்து விதிமுறைக்கு மீறிய ஆட்டத்தினை வெளிப்படுத்த, எதிரணிக்கு பெனால்டி ட்ரை ஒன்று வழங்கப்பட்டது. எனினும் அதன் பின்னர் சிறப்பாக தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட CR&FC வீரர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்தினார். இறுதியாக CR&FC வீரர் தரிந்த ரத்வத்த ட்ரொப் கோல் ஒன்றின் மூலம் போட்டியை நிறைவு செய்தார்.

முழு நேரம் : CR & FC 27 – 17 விமானப்படை விளையாட்டுக் கழகம்