டயலொக்கின் ஆதரவோடு நடைபெறும் தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர்

122

தேசிய வலைப்பந்து சம்மேளனம் (NFSL) இலங்கையின் முதல்தர தொலைத்தொடர்பு வழங்குனரான டயலொக் ஆசியாட்டா நிறுவனத்துடன் இணைந்து உள்ளரங்குகளில் (Indoor) முதல்தடவையாக ஏற்பாடு செய்த தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் நேற்று (28) ஆரம்பமாகியது.

சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நடைபெறவுள்ள இந்த தொடர் ஒரு மணித்தியாலய வலைப்பந்து போட்டிகளினை கொண்டிருக்கின்றமை சிறப்பம்சமாகும்.

உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத்தில் இலங்கை ஏ குழுவில்

இங்கிலாந்தின் லிவர்பூலில் …

நேற்று ஆரம்பமாகிய இந்த வலைப்பந்து தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் யாவும் கம்பஹா ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலயத்தின் உள்ளக அரங்கில் நாளை (30) வரை இடம்பெறும். தொடர்ந்து, இரண்டாம் சுற்றுப் போட்டிகள் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை பண்டாரகம உள்ளக அரங்கில் இடம்பெறும்.

இத்தொடரின் இரண்டாம் சுற்று பிளே ஒப் போட்டிகளாக நடைபெற இருப்பதோடு முதற் சுற்றின் வெற்றியாளர் அணிகள் இரண்டாம் சுற்றில் தமக்கிடையே மோதிக் கொள்ளவுள்ளன. இதன் பின்னர், டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வென்னப்புவயில் அமைந்துள்ள சேர் அல்பர்ட் பீரிஸ் உள்ளரங்கு மைதானத்தில் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த இந்த தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் 40 நிமிடங்கள் கொண்ட வலைப்பந்து போட்டிகளே இடம்பெற்றிருந்தன. எனினும், இலங்கையில் இருக்கும் வலைப்பந்து வீராங்கனைகளை பலப்படுத்துவதற்காக சர்வதேச நியமங்களை பின்பற்றி இம்முறைக்கான தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் ஒரு மணித்தியாலயப் போட்டிகளாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

வரலாற்றில் முதல்முறையாக, வலைப்பந்து சம்மேளனம் தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரினை உள்ளரங்குகளில் நடாத்துவதோடு,  தொடரை ஒரு மணித்தியாலயம் கொண்ட வலைப்பந்து போட்டிகளாகவும் நடாத்துகின்றது. இதற்கான முதன்மை காரணம் வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது சவால் தரும் விதத்தில் செயற்பட வேண்டியே ஆகும்என தேசிய வலைப்பந்து சம்மேளனத்தின் தலைவி த்ரிக்ஷி நாணயக்கார கருத்து வெளியிட்டிருந்தார்.

இறுதி வரை போராடியும் அரையிறுதி வாய்ப்பை இழந்த யாழ் ஏஞ்சல்

மேலும் கருத்து தெரிவித்த வலைப்பந்து சம்மேளனத்தின் தலைவி, நாங்கள் டயலொக் ஆசியாட்டா நிறுவனத்திற்கு தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் முதன்மை அனுசரணையாளராக முன்வந்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம், இத்தொடர் (வலைப்பந்து) வீராங்கனைகளின் திறமைகளை வளர்க்க உறுதுணையாக இருப்பதோடு தேசிய வலைப்பந்து அணிக்கான வீராங்கனைகளை சரியான முறையில் விருத்தி செய்து அவர்களை உலகின் முதல் 10 இடங்களுக்குள் உள்ள வலைப்பந்து அணிகளுடன் போட்டியிட தயார்படுத்த உதவியாகவும் இருக்கும்என்றார்.

தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் 24 அணிகள் பங்குபெறுவதோடு அவை ஒரு குழுவில் 6 அணிகள் அடங்குமாறு, நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு முதற்சுற்று மோதல்கள் நடைபெறுகின்றன.

குழு A – மன்னார் அணி, மேல் மாகாண அணி, யாழ்ப்பாணம் A அணி, செலான் வங்கி, களனி பல்கலைக்கழகம், இலங்கை பாடசாலைகள் அணி

குழு B – சுதந்திர வர்த்தக வலைய அணி, கண்டி அணி, கெம்பல் அணி, ஹட்டன் நஷனல் வங்கி, காலி அணி, களுத்துறை அணி

குழு C – கிளிநொச்சி அணி, பதுளை அணி, துறைமுக அதிகாரசபை அணி, இராணுவப்படை விளையாட்டுக் கழகம், யாழ்ப்பாணம் B அணி, மாத்தளை அணி

குழு D – விமானப்படை விளையாட்டுக் கழகம், கம்பஹா அணி, புத்தளம் அணி, கொழும்பு அணி, கொழும்பு பல்கலைக்கழகம், குருநாகல் அணி

இதேநேரம், இத்தொடர் பற்றி கருத்து தெரிவித்த டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் பிரதானி ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை வலைப்பந்து சம்மேளனத்துடன் பங்காளராக இணைந்து இலங்கையில் மகளிருக்கான விளையாட்டு ஒன்றினை வலுப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.  தேசிய வலைப்பந்து அணியானது உறுதியானதும், கடினமானதுமான முயற்சிகளினால் ஆசியப் பிராந்தியத்தில் இலங்கைக்கு பெருமை  தேடித்தந்திருந்தது. நாங்கள் தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கு பங்களிப்புச் செய்வதால் இலங்கைக்கு திறமைமிக்க ஒரு வலைப்பந்து குழாத்தினை உருவாக்கி உலக அரங்கில் சவால்களை வழங்கி போட்டியிட முடியுமாக இருக்கும். இத்தொடர் வெற்றி பெற வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். “

உலக வலைப்பந்து அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை வலைப்பந்து அணி 26ஆம் இடத்தில் இருக்கின்ற போதிலும் இலங்கை வலைப்பந்து அணி 1989, 1997, 2001, 2009 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் ஆசிய வலைப்பந்து சம்பியனாக நாமம் சூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க