கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டு சென்னை அணியுடன் இணைந்த தீபக் சஹார்

163
Chennai Super Kings Twitter

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் விளையாடவுள்ள, இந்திய வேகப் பந்துவீச்சாளர் தீபக் சஹார், கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமாகி, மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் உட்பட 13 பேர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில், அணி கடுமையான பின்னடைவை சந்தித்திருந்தது. இந்தநிலையில், தற்போது ஒரு வீரரை தவிர்த்து, ஏனைய அனைவரும் கொவிட்-19 வைரஸிலிருந்து குணமடைந்துள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மற்றொரு இக்கட்டான சூழ்நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ்

இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகாத துடுப்பாட்ட வீரர் ருட்ராஜ் கைக்வட் மாத்திரம் தற்போதைய நிலையில், கொவிட் வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் சபையின் C பிரிவு ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டிருக்கும் தீபக் சஹார், கொவிட்-19 தொற்றிலிருந்து குணமாகியிருந்தாலும் அவர் இதுவரையில் பயிற்சிக்கு திரும்பவில்லை. 

ஐ.பி.எல். தொடரின் கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறையின் அடிப்படையில், ஒருவர் கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்தால், அவர் 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார். அத்துடன், மேலதிகமாக 2 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், குறித்த 2 பரிசோதனைகளிலும் கொவிட்-19 தொற்றியிருக்காவிட்டால் மாத்திரமே அவர் அணியுடன் இணைய முடியும். 

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் கொவிட்-19 வைரஸ் பாதிப்பு குறித்து கருத்து வெளியிட்ட அந்த அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி காசி விஸ்வநாதன், “இந்திய அணியை பிரதிநித்துவப்படுத்தாத வீரர் ஒருவருக்கு மாத்திரமே தற்போது கொவிட்-19 வைரஸ் உள்ளது. ஏனைய அனைவரும் குணமடைந்துள்ளனர். தீபக் சஹாரும் குணமடைந்துள்ளார்.   

எவ்வாறாயினும், கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்துள்ள குறித்த ஒரு வீரருக்கு பாதிப்படையக்கூடிய எந்தவொரு அறிகுறிகளும் இல்லை. அவருடைய தனிமைப்படுத்தல் காலம் எதிர்வரும் 12ம் திகதியுடன் நிறைவடைகிறது” என்றார்.

Video – தனியாளாக சாதித்துக் காட்டிய Dinesh Chandimal | Cricket Galatta Epi 33

அதேநேரம், தீபக் சஹார் கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள போதும், அவருக்கான உடற்தகுதி பரிசோதனைகளுக்கு முகங்கொடுக்க வேண்டும் என காசி விஸ்வநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். 

வீரர்கள் கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வருவது சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு மகிழ்ச்சியான விடயமாக மாறியுள்ளது. காரணம், எதிர்வரும் 19ம் திகதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தங்களுடைய முதல் போட்டியில் சென்னை அணி விளையாடவுள்ளது.

எவ்வாறாயினும், அணியிலிருந்து வெளியேறியுள்ள சுரேஸ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருக்கான மாற்று வீரர்களை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<