9ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் 7ஆவது போட்டி நேற்று இந்தியாவின் தலைநகர்  டெல்லியில் அமைந்துள்ள பெரோஸ் ஷா கொட்லா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில்  டேவிட் மிலர் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சஹீர் கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர் கொண்டது. இந்தப் போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைவர்  சஹீர் கான் முதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார்.

இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி   நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 111 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இவ்வணி சார்பாக அதிகபட்சமாக மனன் வோஹ்ரா 24 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடங்கலாக 32 ஓட்டங்களையும், பிரதீப் சஹு ஆட்டம் இழக்காமல் 12 பந்துகளில் 18 ஓட்டங்களையும், மொஹித் ஷர்மா 8 பந்துகளில் 15 ஓட்டங்களையும் பெற்றனர். டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சார்பாக பந்துவீச்சில் மிகச் சிறப்பாக பந்து வீசிய அமித் மிஷ்ரா 3 ஓவர்கள் பந்து வீசி 11 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கட்டுகளை சரிக்க சஹீர் கான், க்றிஸ் மொரிஸ் மற்றும் யதவ்  ஆகியோர் தலா 1 விக்கட் வீதம் வீழ்த்தினர்.

பதிலுக்கு 112 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி  துடுப்பெடுத்தாடிய  டெல்லி டேர்டெவில்ஸ் அணி 13.3 ஓவர்களில் 2 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 39 பந்துகள் மீதமிருக்க 8 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.  டெல்லி டேர்டெவில்ஸ் அணி சார்பாக குயின்டன் டி கொக் ஆட்டம் இழக்காமல் 42 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 59 ஓட்டங்களையும், சஞ்சு சம்சுன் 32 பந்துகளில் 33 ஓட்டங்களையும் பெற்றனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சார்பில் பந்துவீச்சில் சந்தீப் ஷர்மா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் கைப்பற்றினர்.  இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் அமித் மிஷ்ரா தெரிவு செய்யப்பட்டார்.