பொக்ஸிங் டே டெஸ்டிலிருந்து வெளியேறும் டேவிட் வோர்னர்!

146
Photo Courtesy cricket.com.au

இந்திய அணிக்கு எதிரான பொக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் சீன் எபோட் ஆகியோர் விளையாடமாட்டார்கள் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

பொக்ஸிங் டே டெஸ்ட் போட்டியிலிருந்து இவர்கள் இருவரும் நீக்கப்பட்டாலும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இணைத்துக்கொள்ளப்படுவர் என சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

>>புதிய வகை கொவிட் வைரஸ் தொற்றினால் இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சந்தேகம்

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது, டேவிட் வோர்னரின் இடுப்பு பகுதியில் உபாதை ஏற்பட்டிருந்தது. இந்த உபாதை முழுமையாக குணமடையவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில், சீன் எபோட்டின் கெண்டைக்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டிருந்தது.

டேவிட் வோர்னர் மற்றும் சீன் எபோட் ஆகியோர் தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“வோர்னர் மற்றும் எபோட் ஆகியோர் ஆஸி. அணியின் உயிரியல் பாதுகாப்பு வளையத்துக்கு வெளியில் இருந்து, உபாதைகளுக்கு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அதுமாத்திரமின்றி உயிரியல் பாதுகாப்பு வளையத்தின் விதிமுறையின்படி, அவர்களால், பொக்ஸிங் டே போட்டிக்கான குழாத்துடன் இணைய முடியாது.

குறித்த இருவரும் தற்போது சிட்னியிலிருந்து, மெல்போர்ன் நோக்கி புறப்படவுள்ளதுடன், அங்கு சென்று தொடர்ந்தும் உபாதை தொடர்பில் கண்கானிக்கப்படுவர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

டேவிட் வோர்னர் மற்றும் சீன் எபோட் ஆகியோர், சிட்னியின் தற்போதைய கொவிட்-19 தொற்று தீவிரம் காரணமாக ஏற்கனவே அட்டவணைப்படுத்தப்பட்டிருந்ததற்கு முதல் மெல்போர்ன் நோக்கி புறப்படவுள்ளனர்.

இதேவேளை, சிட்னியில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக, அங்கு நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டியை நடத்துவதா? என்பது தொடர்பிலும், அல்லது அடுத்தடுத்து 2 டெஸ்ட் போட்டிகளை மெல்போர்னில் நடத்துவதா? என்பது தொடர்பிலான கலந்துரையாடல்களை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மேற்கொண்டு வருகின்றது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ம் திகதி மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான மேலதிக வீரர்கள் எவரும் குழாத்தில் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<