2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் திகதி அறிவிப்பு

Los Angeles Olympics 2028

24
Los Angeles Olympics 2028

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக இடம்பெற்றுள்ள கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் திகதி என்பவற்றை சர்வதேச ஒலிம்பிக் பேரவை அறிவித்துள்ளது.

128 ஆண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள 34ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவில், T20 வடிவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், 2028 ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள கிரிக்கெட்டுக்கான போட்டி அட்டவணை மற்றும் மைதானம் குறித்த அறிவிப்புகளை சர்வதேச ஒலிம்பிக் பேரவை நேற்று (15) வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கான கிரிக்கெட் போட்டிகள் 2028 ஜூலை 12 முதல் 29 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. T20 வடிவத்தில் நடைபெறவுள்ள அனைத்துப் போட்டிகளும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து சுமார் 48 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பொமோனாவின் ஃபேர்லேக்கில் (Pomona Fairplex) நிர்மானிக்கப்ப்படும் தற்காலிக கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களுக்காக ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் மொத்தம் 6 நாடுகள் 2028 ஒலிம்பிக்கில் போட்டியிடும். நொக் அவுட் (பதக்கம்) போட்டிகள் ஜூலை 20 (மகளிர்) மற்றும் 29 (ஆடவர்) ஆகிய திகதிகளில் நடைபெறும். ஒவ்வொரு நாளும் இரண்டு போட்டிகள் வீதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி T20 தரவரிசையில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் நாடுகள் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறவுள்ள நிலையில், ஒரு அணியில் 15 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

எதுஎவ்வாறாயினும், 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழா கிரிக்கெட்டுக்கு தகுதி பெறுவதற்கான நடைமுறை எப்படி என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் இம்மாதம் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த மாநாட்டில் இது குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெற்றதுடன், கிரேட் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டு அணிகள் மட்டுமே இரண்டு நாள் போட்டியில் மோதின. இதில் கிரேட் பிரிட்டன் தங்கப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட்டு பிரபலமடைந்து வருகிறது. அங்கு மேஜர் லீக் T20 லீக் தொடர் வெற்றிகரமாக நடத்தப்படுகிறது. அதேபோல, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதி ஆட்டங்கள் அமெரிக்காவில் நடைபெற்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இடம்பெற்றுள்ள கிரிக்கெட் மட்டுமின்றி ஏனைய ஒருசில போட்டிகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வில்வித்தை ஜூலை 20ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையும், பெட்மிண்டன் ஜூலை 15ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையும், துப்பாக்கி சுடுதல் 15ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<