இரண்டு நாடுகளுக்கு கிரிக்கெட் ஆடிய முன்னணி வீரர்கள்

119

கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட வீரர்களுக்கு, அவர்களின் தாய் நாட்டிற்கு கிரிக்கெட் விளையாடுவதே பிரதான இலட்சியமாக இருக்கும். ஆனால், அது இலகுவான விடயம் அல்ல. அதற்காக குறித்த கிரிக்கெட் வீரர்கள் கடுமையான உழைப்பினை போட வேண்டிய நிலைமை ஒன்று வரும். 

ஆனால், வரலாற்றினை நோக்கும் போது சில கிரிக்கெட் வீரர்கள் தமது தாயகத்திற்கு மேலாக இன்னுமொரு நாட்டினையும் பிரதிநிதித்துவம் செய்த சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன. 

இவ்வாறு இரண்டு நாடுகளினை கிரிக்கெட் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்த ஐந்து முக்கிய கிரிக்கெட் வீரர்கள் குறித்து நோக்குவோம்.  

பில்லி மிட்வின்டர்

எமது பட்டியலில் முதலில் வருகின்ற பில்லி மிட்வின்டர், அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளுக்கும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கின்றார். 

உண்மையில், பில்லி மிட்வின்டரே வரலாற்றில் முதல்தடவையாக இரண்டு நாடுகளினை கிரிக்கெட் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்த வீரராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

1800 இன் இறுதிப்பகுதியில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய பில்லி மிட்விட்னர், தனது ஓய்வுக்கு முன்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகளிலும், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 4 போட்டிகளிலும் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

அதோடு, இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் மோதல்களின் போது இரு அணிகளையும் பிரதிநிதித்துவம் செய்த வீரராகவும் பில்லி மிட்வின்டன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 

அப்துல் ஹபீஸ் கார்தர் 

PA Photos

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முதல் தலைவரான அப்துல் ஹபீஸ் கார்தரும் இரண்டு நாடுகளினை கிரிக்கெட் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்த முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக காணப்படுகின்றார். 

இந்தியா – பாகிஸ்தான் பிளவு ஏற்படுவதற்கு முன்னர் பிரித்தானிய ஆளுகையில் இருந்த இந்திய கிரிக்கெட் அணியினை 03 டெஸ்ட் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்த கார்தர், இந்திய – பாகிஸ்தான் பிளவிற்குப் பின்னர் 1958 வரை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சகலதுறைவீரரான அப்துல் கார்தர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 927 ஓட்டங்களையும் 21 விக்கெட்டுக்களையும் சாய்த்திருப்பதோடு, கார்தர் கிரிக்கெட் ஓய்விற்குப் பின்னர் ஒரு அரசியல் பிரதானியாக தனது மரணம் வரையிலும் செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இயன் மோர்கன்

Getty Images

நமது பட்டியலில் அடுத்து வரும் வீரராக அதிரடி துடுப்பாட்டவீரரான இயன் மோர்கன் காணப்படுகின்றார்.

அயர்லாந்து நாட்டினைச் சேர்ந்த மோர்கன் தான் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாட முன்னர், தனது தாயக அணியினை 23 ஒருநாள் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்திருந்ததோடு 2007ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்திலும் அயர்லாந்து அணிக்காக ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மூவகைப் போட்டிகளுக்குமான நிரந்தர வீரராக மாறிய மோர்கன், அவ்வணியினை தற்போது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் தலைவராக வழிநடாத்தி வருகின்றார்.

அதேவேளை, கடந்த 2019ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினையும் தனது தலைமையில் இங்கிலாந்து அணிக்காக பெற்றுக் கொடுத்த இயன் மோர்கன், கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு நாடுகளை உலகக் கிண்ணப் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்த நான்காவது வீரராகவும் காணப்படுகின்றார். 

லுாக் ரொன்ச்சி

Getty Images

விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான லூக் ரொன்ச்சி கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினையும், நியூசிலாந்தினையும் பிரதிநிதித்துவம் செய்த ஒரேயொரு வீரராக காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 

அதிரடியாக துடுப்பாடும் ஆற்றல் கொண்ட லூக் ரொன்ச்சி நியூசிலாந்தினை பிறப்பிடமாகக் கொண்ட போதும் தனது சர்வதேச அறிமுகத்தினை அவுஸ்திரேலிய அணிக்காகவே முதலில் பெற்றிருந்தார். அதன்படி, 2008ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் பெற்ற லூக் ரொன்ச்சி அவ்வணியினை 4 ஒருநாள் போட்டிகளிலும், 3 T20 போட்டிகளிலும் பிரதிநிதித்துவம் செய்திருந்தார். 

பின்னர், 2013ஆம் ஆண்டில் இருந்து தனது தாயக அணியான நியூசிலாந்தினை கிரிக்கெட் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்யத்தொடங்கிய ரொன்ச்சி தான் 2017ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முன்னர் நியூசிலாந்து அணியினை  மூவகைப் போட்டிகளிலும் பிரதிநிதித்துவம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

ஓய்வினைத் தொடர்ந்து கிரிக்கெட் பயிற்றுவிப்பிலும் கவனம் செலுத்திய ரொன்ச்சி 2019ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணம் வரையில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட்காப்பு பயிற்சியாளராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டிர்க் நன்னஸ்

Getty Images

நமது பட்டியலில் வித்தியாசமான பந்துவீச்சுப்பாணி கொண்ட வேகப்பந்துவீச்சாளரான டிர்க் நன்னஸ் பற்றி நோக்குவோம்.  

முதலில் ஐ.சி.சி. இன் அங்கத்துவ நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தினை 2008ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்த நன்னஸ் அதனை தொடர்ந்து 2 மாதங்களிலேயே அவுஸ்திரேலிய அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.

தொடர்ந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி T20 பந்துவீச்சாளராக மாறிய இவர், உள்ளூர் T20 போட்டிகளிலும் நீண்ட காலம் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நன்னஸ் கிரிக்கெட் விளையாட்டிற்கு மேலதிமாக, பனிச்சறுக்கு விளையாட்டிலும் அபாரமாக செயற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.