கோப்பா அமெரிக்க கிண்ண அரையிறுதியில் பலப்பரீட்சை நடாத்தவுள்ள ஆர்ஜன்டீனா, பிரேசில்

399

கோப்பா அமெரிக்க கிண்ண காலிறுதிப் போட்டிகளில் ஆர்ஜன்டீன மற்றும் நடப்புச் சம்பியன் சிலி அணிகள் வெற்றியீட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. வெனிசுவேலாவுடனான காலிறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனா 2-0 என்ற கோல்கள் கணக்கில் நெருக்கடி இன்றி வெற்றி பெற்றதோடு சிலி பெனால்டி ஷூட் அவுட் முறையில் கொலம்பியாவை 5-4 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியது.

ஆர்ஜன்டீனா எதிர் வெனிசூவேலா

போட்டியின் ஆரம்பத்திலும் கடைசி நேரத்திலும் கோல்கள் பெற்று வெனிசுவேலாவை வீழ்த்தியதன் மூலம் ஆர்ஜன்டீன அணி தனது வலுவான போட்டி அணியான பிரேசிலுடன் அரையிறுதிப் போட்டியில் விளையாட முன்னேற்றம் கண்டுள்ளது.

ஆரம்ப விசில் ஊதப்பட்டது தொடக்கம் வெனிசுவேலா அணியின் கோல் கம்பத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்த லியோனல் மெஸ்ஸியின் ஆர்ஜன்டீன அணி 10 ஆவது நிமிடத்தில் வைத்து மன்செஸ்டர் சிட்டி வீரர் செர்கியோ அகுவேரா தாழ்வாக செலுத்திய பந்தை லோடாரோ மார்டினஸ் கோலாக மாற்றி முதல் கோலை பெற்றது. 

>>நெருக்கடிக்கு மத்தியில் காலிறுதிக்கு முன்னேறிய ஆர்ஜன்டீனா

தொடர்ந்து 74 ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக வந்த கியோவாலி லோ செல்சோ ஆர்ஜன்டீனாவுக்கு தேவையாக இருந்த இரண்டாவது கோலை பெற்று அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.    

கடந்த 26 ஆண்டுகளில் பிரதான கிண்ணம் ஒன்றை வென்றிராத ஆர்ஜன்டீன அணி அடுத்து வரும் புதன்கிழமை (ஜூலை 03) அரையிறுதியில் பிரேசில் அணியை எதிர்கொள்ளவுள்ளது. தனது சொந்த நாட்டில் நடைபெறும் இந்தத் தொடரில் பிரேசில் காலிறுதிப் போட்டியில் பரகுவே அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி இருந்தது. 

கோல் பெற்றவர்கள்

ஆர்ஜன்டீனா – லோடாரோ மார்டினஸ் 10′, கியோவாலி லோ செல்சோ 74′ 

கொலம்பியா எதிர் சிலி

தொலைகாட்சி நடுவர் (VAR) முறை மூலம் இரண்டு கோல்கள் பறிக்கப்பட்ட நிலையில் நிதானமாக விளையாடிய சிலி, பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றிபெற்று தனது நடப்பு சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சாவோ போலோவில் இன்று (29) நடைபெற்ற காலிறுதியில் கொலம்பியாவை சந்தித்த சிலி போட்டியின் இரண்டு பாதிகளிலும் புகுத்திய கோல்களே மறுக்கப்பட்டன. இதனால் முழுநேரம் முடிவடையும்போது இரு அணிகளும் கோல் பெறாத நிலையில பெனால்டி மூலம் வெற்றியாளரை தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதில் அலெக்சிஸ் சான்செஸ் வெற்றியை தீர்மானிக்கும் பெனால்டியை உதைத்து தொடர்ச்சியாக இரு முறை சம்பியனாக இருக்கும் சிலியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்.

சிலி தனது அரையிறுதியில் உருகுவே அல்லது பேரு அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான காலிறுதிப் போட்டி இலங்கை நேரப்படி நாளை (30) நடைபெறுள்ளது.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<