இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் ஆரம்பித்துள்ள 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவின் மூன்றாவது நாள் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவில் இலங்கை குறிப்பிடத்தக்க பிரகாசிப்புகளை வழங்க தவறியது.
பின்னோக்கிய 50 மீற்றர் நீச்சல் போட்டியில் அகலங்க பிரீஸ் தேசிய சாதனையை பதிவுசெய்தாலும், அரையிறுதி வாய்ப்பை இழந்திருந்தார். அதேநேரம், இலங்கை பெட்மிண்டன் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்ததுடன், பளுதூக்கல் போட்டிகளிலும் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் கிடைக்கவில்லை.
பளுதூக்கலில் முதல் பதக்கம் ; பெட்மிண்டன் காலிறுதியில் இலங்கை!
மூன்றாவது நாளில் இலங்கை வீரர்கள் பங்கேற்ற போட்டிகளின் முடிவுகள்
பெட்மிண்டன்
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அணிகளுக்கு இடையிலான பெட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் மலேசிய அணியை எதிர்கொண்ட இலங்கை அணி 3-0 என தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் தங்களுடைய அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்த இலங்கை அணி, பதக்க வாய்ப்பை தவறவிட்டது.
Photos – Commonwealth Games 2022 – Day 02
பளு தூக்கல்
ஆண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் 67 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட சதுரங்க ஜயசூரிய ஐந்தாவது இடத்தை பிடித்துக்கொண்டார். இவர், ஸ்னெட்ச் முறையில் 119 கிலோகிராம் எடையையும், கிளீன் எண்ட் ஜெக் முறையில் 140 கிலோகிராம் எடையுடன் மொத்தமாக 259 கிலோகிராம் எடையை தூக்கியிருந்தார்.
இந்தப் போட்டியில் இந்திய வீரர் லால்ரின்னுங்கா ஜெரமி தங்கப்பதக்கத்தை வென்றிருந்ததுடன், சமோவா வீரர் வைப்பவா நெவோ வெள்ளிப்பதக்கத்தையும், நைஜீரியா வீரர் எடிடியோங் ஜோசப் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
இதேவேளை, ஆண்களுக்கான 73 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட இந்திக திசாநாயக்க ஸ்னெட்ச் முறையில் 133 கிலோகிராம் எடையை தூக்கி 4வது இடத்தை பிடித்துக்கொண்டாலும், பின்னர் இடம்பெற்ற கிளீன் எண்ட் ஜெக் முறையில் 160, 161 மற்றும் 167 கிலோகிராம் எடைகளை தூக்க தவறியதன் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார்.
எழுவர் ரக்பி
இலங்கை ஆடவர் ரக்பி அணி 12-16 அணிகளை வரிசைப்படுத்தும் போட்டியில், ஸாம்பியா அணியை எதிர்கொண்டிருந்ததுடன், இந்த போட்டியில் பெற்ற வெற்றியினால் இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்தது. இந்தப்போட்டியில் இலங்கை அணி 27-14 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.
இந்தப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 13வது இடத்துக்கான போட்டியில் ஜமைக்கா அணியை இலங்கை அணி எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில் துரதிஷ்டவசமான முறையில் இலங்கை அணி 24-26 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது. இதன்மூலம் 14வது இடத்தை பிடித்து தொடரை நிறைவுசெய்தது.
Photos – Commonwealth Games 2022 – Day 01
பெண்களுக்கான 7வது இடத்துக்கான இன்றைய போட்டியில், இலங்கை அணி தென்னாபிரிக்காவிடம் புள்ளிகள் எதுவுமின்றி தோல்வியடைந்தது. இந்தப்போட்டியில் தென்னாபிரிக்க அணி 52-0 என வெற்றிபெற்றிருந்தது. எனவே, 8வது இடத்துடன் இம்முறை போட்டித்தொடரை இலங்கை மகளிர் அணி நிறைவுசெய்துக்கொண்டது.
நீச்சல்
ஆண்களுக்கான பின்நோக்கிய நீச்சல் (Backstroke) போட்டியின் முதல் சுற்றில் இலங்கை வீரர் அகலங்க பீரிஸ் தோல்வியடைந்த போதும், தன்னுடைய தேசிய சாதனையை புதுப்பித்துள்ளார்.
அகலங்க பீரிஸ் இதற்கு முன்னாள் தேசிய சாதனையை 26.24 செக்கன்களாக தக்கவைத்திருந்த நிலையில், அதனை முறியடித்து 26.15 செக்கன்களில் போட்டித்தூரத்தை நிறைவுசெய்திருந்தார்.
3X3 கூடைப்பந்தாட்டம்
ஆண்களுக்கான 3X3 கூடைப்பந்தாட்ட தொடரின் குழு Aயில் தங்களுடைய மூன்றாவது போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது. கனடா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 8-21 புள்ளிகள் என்ற கணக்கில் இலங்கை அணி தோல்வியடைந்தது.
இதேவேளை இலங்கை மகளிர் அணியானது, தங்களுடைய இறுதி லீக் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 2-21 என்ற புள்ளிகள் கணக்கில் மொசமான தோல்வியை தழுவியிருந்தது. எனவே, இந்த இரண்டு அணிகளும் தங்களுடைய அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளன.
கடற்கரை கரப்பந்தாட்டம்
ஆண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் இலங்கையின் அஷேன் ரஷ்மிக மற்றும் சஷிமல் மிலந்த ஆகியோர் தங்களுடைய முதல் போட்டியில், கனடா வீரர்களான சேம் ஸ்காச்டர் மற்றும் டெனியல் டேரிங் ஆகியோரை எதிர்கொண்டனர். இந்தப் போட்டியில் இலங்கை அணியானது 21-13 மற்றும் 21-12 என்ற நேர் செட்கள் கணக்கில் தோல்வியடைந்தது.
இதேவேளை, பெண்களுக்கான போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்ட இலங்கையின் தீபிகா பண்டார மற்றும் சதுரிகா வீரசிங்க ஆகியோர் 2-0 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தனர். இதில், 21-10 மற்றும் 21-12 என்ற புள்ளிகளை பெற்றுக்கொண்டிருந்தனர்.
Photos – Commonwealth Games 2022 – Opening Ceremony
ஸ்குவாஷ்
நேற்றைய தினம் நடைபெற்ற மகளிர் 16 வீராங்கனைகளுக்கான பிளேட் சுற்றில், இலங்கை சார்பில் போட்டியிட்ட சந்திமா சினாலி, பொட்ஸ்வானாவின் நயோமி நியோ பத்சிமாவுக்கு எதிராக வெற்றியினை பதிவுசெய்துள்ளார்.
சந்திமா சினாலி 11-5, 11-1 மற்றும் 11-5 என வெற்றிபெற்று, 3-0 என்ற நேர் செட் கணக்கில் போட்டியை கைப்பற்றினார். இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற சந்திமா சினாலி, பிளேட் காலிறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சாரா குருவில்லாவை இன்றைய தினம் (01) எதிர்கொள்ளவுள்ளார்.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<




















