அரையிறுதிக்கான வாய்ப்பை தவறவிட்ட சச்சின், புவனேக!

Commonwealth Games 2022

191

இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் நடைபெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டு  விழாவின் ஒன்பதாவது நாள் நிறைவில் இலங்கையின் பெட்மிண்டன் மற்றும் மல்யுத்த வீரர்கள் அதிகமான போட்டிகளில் பங்கேற்றிருந்தனர்.

இதில் முக்கியமான ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதிப்போட்டியில் மலேசிய அணியை எதிர்த்தாடிய இலங்கை அணி 2-0 என்ற செட்கள் கணக்கில் தோல்வியை சந்தித்ததுடன், மல்யுத்தம் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பிரகாசிக்க தவறியிருந்தனர்.

மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற நெத்மி ; இறுதிப் போட்டியில் சாரங்கி!

ஒன்பதாவது நாளில் இலங்கை வீரர்கள் பங்கேற்ற போட்டிகளின் முடிவுகள்

மல்யுத்தம்

இலங்கை மல்யுத்த அணியை பொருத்தவரை 9வது நாளான நேற்று (06) சிறந்த நாளாக அமையவில்லை. இலங்கை அணி வீரர்கள் பங்கேற்ற அனைத்து வீர, வீராங்கனைகளும் தோல்வியை தழுவியிருந்தனர்.

பெண்களுக்கான 53 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட கேஷானி சமோத்யா நைஜீரிய வீராங்கனை மேர்சி பொலோபனோலுவாவிடம் 10-0 என தோல்வியடைந்ததுடன், தன்னுடைய அடுத்த இரண்டு போட்டிகளிலும் கனடா மற்றும் இந்திய வீராங்கனைகளிடம் முறையே 12-2 மற்றும் 4-0 என தோல்வியடைந்தார்.

இதேவேளை பெண்களுக்கான 50 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட நிரோஷனி ஸ்ரீயாந்திகா, கனடாவின் மெடிஸன் பார்க்கிடம் 12-0 என தோல்வியடைந்ததுடன், தன்னுடைய அடுத்தப்போட்டியில் நைஜீரிய வீராங்கனையிடம் 12-1 என தோல்வியடைந்தார்.

பெட்மிண்டன்

ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதிப்போட்டியில் 0-2 என மலேசிய அணியிடம் தோல்வியடைந்த இலங்கை அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது. சச்சின் டயஸ் மற்றும் புவனேக குணதிலக ஆகியோர் மலேசிய அணியிடம் 16-21 மற்றும் 12-21 என தோல்வியை சந்தித்தனர். இதன் மூலம் இலங்கை அணியின் பதக்க கனவு தகர்க்கப்பட்டது.

இன்று நடைபெற்ற மற்றுமொரு முக்கியமான காலிறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இலங்கை கலப்பு இரட்டையர் பிரிவின் பெட்மிண்டன் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது.

இங்கிலாந்தின் மார்கஸ் எரிஸ் மற்றும் லோரன் ஸ்மித்தை எதிர்கொண்ட சச்சின் டயஸ் மற்றும் திலினி ஹெந்தேவ ஆகியோர் 0-2 என்ற நேர் செட்கள் கணக்கில் தோல்வியடைந்தனர். இவர்கள் முதல் செட்டை 12-21 என இலகுவாக இழந்திருந்தாலும், இரண்டாவது செட்டில் சிறந்த போட்டியை கொடுத்து துரதிஷ்டவசமாக 19-21 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தனர்.

Photos – Commonwealth Games 2022 – Day 08

ஸ்குவாஷ்

ஸ்குவாஷில் தகட்டுக்கான (Plate) அரையிறுதிப்போட்டியில் விளையாடிய இலங்கை கலப்பு இரட்டையர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கயானாவின் பங் ஏ பெட் மெரி மற்றும் வில்ட்ஷையர் சொமரி ஆகியோரை எதிர்த்தாடிய சினாலி சந்திமா மற்றும் வகீல் ஷமீல் ஆகியோர் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றனர். முதல் செட்டை 11-7 என கைப்பற்றிய இவர்கள், இரண்டாவது செட்டை 11-6 என கைப்பற்றினர். இவர்கள் தகட்டு இறுதிப்போட்டியில் கயானாவின் அஷ்லி கஹ்லீல் மற்றும் ஜேசன் கஹ்லீல் ஆகியோரை எதிர்கொள்ளவுள்ளனர்.

இதேவேளை பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவு தகட்டுக்கான (Plate) காலிறுதிப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது. சினாலி சந்திமா மற்றும் யெஹானி குருப்பு ஆகியோர் முதல் செட்டை 11-10 என கைப்பற்றிய நிலையில், அடுத்த இரண்டு செட்களையும் 05-11 மற்றும் 09-11 என இழந்து 1-2 என்ற செட்கள் கணக்கில் தோல்வியடைந்தனர்.

Photos – Commonwealth Games 2022 – Day 07

பதக்கப்பட்டியல் விபரம் (ஒன்பதாவது நாள்)

இதேவேளை பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஒன்பதாவது நாள் போட்டிகள் நிறைவில், 59 தங்கப்பதக்கங்கள் உட்பட 155 பதக்கங்களை வென்றுள்ள அவுஸ்திரேலியா பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தப்பட்டியலின் இரண்டாவது இடத்தை 50 தங்கப்பதக்கங்கள் உட்பட  148 பதக்கங்களை வென்றுள்ள இங்கிலாந்தும், 22  தங்கப்பதக்கங்கள்  உட்பட 84 பதக்கங்களை வென்றுள்ள கனடா மூன்றாவது இடத்தையும் பிடித்துக்கொண்டுள்ளன. இதேவேளை இலங்கை அணியானது ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கங்களுடன் இந்தப்பட்டியலில் 27வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
அவுஸ்திரேலியா 59 46 50 155
இங்கிலாந்து 50 52 46 148
கனடா 22 29 33 84

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <