10 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் கால்பந்து தொடரில் கொழும்பு அணி

389

இந்தியாவின் கொச்சின் நகரில் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெறும் “சர்வதேச மாஸ்டர்ஸ் சொக்கர்” (International Masters Soccer) கால்பந்து தொடரில் விளையாடவுள்ள கொழும்பு வெடெரென்ஸ் கால்பந்து கழக அணியை தேசிய அணியின் பின்கள வீரர்களில் ஒருவராக கடந்த காலத்தில் செயற்பட்டிருந்த ஜகத் ரோஹன் தலைமை தாங்குகின்றார்.

நான்கு தடவைகள் இந்த சர்வதேச மாஸ்டர்ஸ் கால்பந்து தொடரின் சம்பியனாகியிருக்கும் கொழும்பு வெடெரென்ஸ் அணி, இம்முறை பல அனுபவமிக்க முன்னாள் தேசிய வீரர்களையும், உள்ளூர் கழக வீரர்களையும் கொண்டிருப்பதால் ஐந்தாவது தடவையாகவும் இத்தொடரில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இம்முறைக்கான தொடரில் கால்பந்தில் பிரபல்யமிக்க  இங்கிலாந்தும் முதற்தடவையாக பங்கேற்பதால் இலங்கையில் இருந்து செல்லும் தரப்புக்கு ஆட்டம் சவாலாகவே அமையும். அதோடு இந்தோனோஷியா, இத்தாலி, மலேசியா, மொரிஷியஸ், முன்னாள் சம்பியன்களான சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா ஆகிய நாடுகளும் அனுபவமிக்க வீரர்கள் அடங்கிய தம்முடைய அணிகளை இத்தொடருக்காக அனுப்புகின்றன.

மொத்தமாக பத்து நாடுகள் பங்கேற்கின்ற இத்தொடரில் அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு முதலில் லீக் அடிப்படையில் போட்டிகள் நடாத்தப்படும். குறிப்பிட்ட லீக் போட்டிகளினை அடுத்து தத்தமது குழுக்களில் முதல் இரண்டு இடங்களுக்குள் வரும் அணிகள் தொடரின் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி அரையிறுதிகளில் பங்கேற்று இறுதிப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொள்ளும்.

இந்த கால்பந்து தொடர் ஆரம்பமாகிய ஆண்டிலிருந்து அதில் பங்கேற்று வரும் கொழும்பு வெடெரென்ஸ் அணி, முதற்தடவையாக 2006 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்ற தொடரில் சம்பியனாக மாறியிருந்தது. அதனை அடுத்து சிங்கப்பூர் அணியுடன் 2008 ஆம் ஆண்டில் சம்பியன் பட்டத்தினை கொழும்பு அணி பகிர்ந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 2011ஆம் ஆண்டிலும் சர்வதேச மாஸ்டர்ஸ் கால்பந்து தொடரின் சம்பியனாகிய கொழும்பு வெடெரென்ஸ் அணி இறுதியாக கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற தொடரிலும் மீண்டும் ஒரு முறை சம்பியன் பட்டத்தினை சுவீகரித்திருந்தது. இது தவிர 2007, 2012, 2013 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் கொழும்பு வெடெரென்ஸ் அணியினர் இத்தொடரில் இரண்டாம் இடத்தினையும் பெற்றிருந்தனர்.

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு வெடெரென்ஸ் அணியினர் இத்தொடருக்காக போதிய பயிற்சிகளை பெற்றுக்கொள்வதில் சிறிது சிரமத்தை எதிர்கொண்டு வந்த போதிலும், முன்னணி மூத்த வீரர்களை அடக்கியிருக்கும் கொழும்பு வெடெரென்ஸ் அணியின் வீரராகவும் பயிற்றுவிப்பாளராகவும் செயற்படும் இலங்கையின் முன்னாள் இளையோர் அணி வீரர் மொஹமட் பாயிஸ் மற்றும் அணி முகாமையாளர் பெரோஸ் இன்ஹாம் ஆகியோர் தமது அணி தொடரில் நல்ல முடிவுகளைக் காட்டி சம்பியன் பட்டத்தினைப் பெற்றுக் கொள்ளும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு வெடெரென்ஸ் கழகத்தினை உருவாக்கியவரும், அதனது நிர்வாக தலைவருமான ராமநாதன் புவனேந்திரன் இம்முறைக்கான அணிக்கு முழு அனுசரணையினையும் வழங்குவதோடு, அணியின் ஒரு அங்கத்தவராகவும் செயற்பட்டு அனைத்து வீரர்களினதும் விமான சீட்டு செலவுகள், தொடர் நடைபெறும் இந்தியாவில் வீரர்களின் தங்குமிடத்துக்கான செலவுகள் ஆகிய அனைத்தினையும் பொறுப்பேற்கவுள்ளார்.

புகழ்என்னும் பெயரோடு அனைவராலும் அழைக்கப்படும் புவனேந்திரன் அவர்கள் கால்பந்து விளையாட்டுக்கு ஊக்கம் தருபவர்களில் முதன்மையான ஒருவராக காணப்படுவதோடு, ஓய்வினை அறிவித்த கால்பந்து வீரர்கள் அப்படியே முடங்கிவிடக்கூடாது என்கிற நல்ல நோக்கத்திலேயே கொழும்பு வெடெரென்ஸ் கால்பந்து கழகத்தினையும் உருவாக்கியிருந்தார்.

கொழும்பு வெடெரென்ஸ் கால்பந்து கழகம்

ஜகத் ரோஹன் (அணித் தலைவர்),  ஜோசப் சாந்தகுமார் (ராசா), ஜயசாந்த லியனகே, ப்ரியந்த லியனகே (சுட்டா), அன்டன் சில்வா, கருப்பன் ராமர், M.H. ரூமி, மொஹமட் பாயிஸ் (பயிற்றுவிப்பாளர் மற்றும் அணி வீரர்), மெக்ஷி லெட்டர்ன், தம்மிக்க அத்துகோரல்ல, குணத்திலக்க பண்டார, விஜய பாஸ்கர், மொஹம்மட் இம்திஷான் (உதயா), மொஹமட் றிஷான், சிசிர குமார, மொஹமட் ஹிசாமுடீன், பிரசன்ன ஹெட்டியராச்சி, துஆன் ஹலால்தீன், சமந்த பெரேரா, பெரோஸ் இன்ஹாம் (முகாமையாளர்)