தோல்வியால் தொடர்ந்து கவலை அடையத்தேவை இல்லை – கிறிஸ் சில்வர்வூட்

Asia Cup 2023

313

ஒருநாள் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி அடைந்த தோல்வி குறித்து இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளரான கிறிஸ் சில்வர்வூட் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.  

ஆசியக்கிண்ணத் தொடரின் சிறந்த பதினொருவர்!

இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணியுடனான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் 50 ஓட்டங்களை மாத்திரம் முதலில் துடுப்பாடி பெற்றிருந்ததோடு, 10 விக்கெட்டுக்களால் மிக மோசமான தோல்வி ஒன்றினையும் சந்தித்திருந்தது. அது இலங்கை அணி ஆசியக் கிண்ணத் தொடரின் நடப்புச் சம்பியன் பட்டத்தினை இழப்பதற்கும் வழிவகுத்திருந்தது. 

இந்த தோல்வி குறித்து கருத்து வெளியிட்டிருந்த கிறிஸ் சில்வர்வூட் இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வியானது ஏமாற்றம் தருவதாக முதலில் குறிப்பிட்டிருந்தார் 

அது எங்களுக்கு மோசமான ஒரு நாள். மிகவும் சிறப்பான பந்துவீச்சு அங்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. நாங்களும் அதற்கு சமானமாக சிறந்த பந்துவீச்சுடனேயே வந்திருந்த போதும் எங்களால் (மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாக விடயங்களை) சரி செய்து கொள்ள முடியவில்லை. நாங்கள் போட்டியினை நிறைவு செய்த விதம் மிகவும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியிருந்தது. எனினும் இந்த விடயங்கள் தொடர்பில் தொடர்ந்து கவலை கொள்ள முடியாது. எங்களுக்கு அடுத்ததாக உலகக் கிண்ணம் என்கிற மிகப் பெரும் தொடர் வரவிருக்கின்றது. எனவே இது தொடர்பில் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டி இருப்பதோடு, வீரர்களின் உடைமாற்றும் அறையில் (Dressing Room) சில கேள்விகளும் கேட்கப்பட வேண்டி இருக்கின்றது. எனவே இதிலிருந்து விடயங்களை முன்னெடுத்துச் செல்வோம்.”  

இதேநேரம் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வரையில் இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத் தொடரில் ஆடியிருந்த கிரிக்கெட்டினைப் பாராட்டியிருந்த கிறிஸ் சில்வர்வூட் வீரர்களுக்கு சிறு ஓய்வு ஒன்றினை வழங்கிய பின்னர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்காக தயாராக்க திட்டங்களை முன்னெடுத்திருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார் 

முதலாவதாக இறுதிப் போட்டிக்கு வரும் வரை நாம் நல்ல கிரிக்கெட்டினை ஆடியிருந்தோம். நாம் (இறுதிப் போட்டிக்கு) முன்னேற கடுமையாக போராட வேண்டி இருந்தது. நான் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதனையே தனி அடைவாகப் பார்க்கின்றேன். இறுதிப் போட்டியில் தோற்ற விதம் மிகவும் ஏமாற்றத்தினை தருவதோடு அது வீரர்கள் மற்றும் பயிற்சிக் குழாம் என அனைத்தினையும் பாதிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. நாங்கள் மீண்டும் வீரர்களிடையே நம்பிக்கையினை வளர்ப்பதற்கு முயற்சி செய்கின்றோம். எங்களுக்கு இப்போது சிறு இடைவேளை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த இடைவேளைக்குள் எங்களை தயார்படுத்தி நாங்கள் விட்ட இடத்தில் இருந்து எங்களை மீண்டும் கட்டியெழுப்புவோம்.”  

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குறித்தும் பேசியிருந்த கிறிஸ் சில்வர்வூட் அவர் அண்மைக்காலமாக மோசமாக ஆட்டத்தினை வெளிப்படுத்திய போதிலும் அவரின் திறமை மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாக கூறியிருந்தார் 

சாதனை வெற்றியுடன் ஆசியக் கிண்ண சம்பியன்களான இந்தியா

நாம் அவருக்கு (தசுன் ஷானக்கவிற்கு) அவரது நம்பிக்கையினை வளர்ப்பதினை உறுதி செய்ய வேண்டும். அவரின் நம்பிக்கை அதிகரிப்பதனை நாம் விரும்புகின்றோம். அவர் தொடர்பிலான விடயங்கள் மாறும் என நம்புகின்றோம். நாம் அவருக்கான நம்பிக்கையினை வளர்ப்பதற்கு அதிக முயற்சி செய்து வருகின்றோம். அவர் ஓட்டங்களை பெறும் சந்தர்ப்பத்தில் விடயங்கள் மாற்றம் பெறும். அவரின் ஆற்றல் குறித்து எங்களுக்குத் தெரியும். அதனை நாம் கடந்த காலங்களிலும் பார்த்திருக்கின்றோம். அவர் மிக அதிரடியாக ஓட்டங்களை குவிக்க கூடிய ஒரு துடுப்பாட்டவீரர். அவரினை நாம் இந்த (ஆசியக் கிண்ணத்) தொடரில் ஒரு பயனுள்ள பந்துவீச்சாளராகவும் பார்த்திருந்தோம். எனவே அவர் மீண்டும் ஓட்டங்களைப் பெற ஆரம்பிக்கும் போது விடயங்கள் வெற்றிகரமாக மாறும். நாம் இதற்காக கடின வேலைகளையும் செய்ய வேண்டும்.”  

அதோடு கிறிஸ் சில்வர்வூட் இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் இளம் வீரர்களான மதீஷ பதிரன, துனித் வெல்லாலகே போன்ற வீரர்கள் வெளிப்படுத்திய ஆட்டமும் சிறப்பாக அமைந்திருந்ததாக சுட்டிக்காட்டியிருந்தார் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<