இறுதி தருணத்தில் பதவி விலகிய சமிந்த வாஸ்!

1268

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து, சமிந்த வாஸ் விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தகவல்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் வேகப் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளரான டேவிட் செகர், கடந்த 18ம் திகதி தன்னுடைய பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில், அவருக்கு பதிலாக கடந்த 19ஆம் திகதி சமிந்த வாஸ் புதிய வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

மே.தீவுகள் செல்லவிருந்த இலங்கை வீரருக்கு கொவிட்-19!

சமிந்த வாஸ், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில், இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணி இன்றிரவு (22) மேற்கிந்திய தீவுகள் நோக்கி புறப்படவுள்ள நிலையில், சமிந்த வாஸ் தன்னுடைய பயிற்றுவிப்பாளர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இலங்கை ஏ அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக தொடர்ந்து சமிந்த வாஸ் செயற்பட்டுவந்தார். இந்தநிலையில், இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட கொடுப்பனவு தொடர்பிலான சிக்கல்கள் காரணமாக இவர், தன்னுடைய அனைத்து பதவிகளிலிருந்தும் விலகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமிந்த வாஸ் இறுதி தருணத்தில் தன்னுடைய இராஜினாமாவை அறிவித்துள்ள நிலையில், இலங்கை அணி வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் இல்லாமல் மேற்கிந்திய தீவுகள் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை அணியை பொருத்தவரை, வேகப் பந்துவீச்சாளர் லஹிரு குமார கொவிட்-19 வைரஸ் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், தற்போது வேக ப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளரும் இழக்கப்பட்டுள்ளமை அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் தொடருக்காக இன்றிரவு பயணிக்கும் இலங்கை அணி, 3 T20i, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…