மே.தீவுகள் செல்லவிருந்த இலங்கை வீரருக்கு கொவிட்-19!

Sri Lanka tour of West Indies 2021

259

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை குழாத்தின் வீரர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை சற்றுமுன்னர் அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில், இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமாரவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர், இலங்கை ஒருநாள் மற்றும் T20I  குழாம்களில் இடம்பிடித்துள்ளதுடன், டெஸ்ட் குழாத்திலும் இடம்பிடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் ஒரே மைதானத்தில்

லஹிரு குமாரவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், குழாத்தின் வீரர்கள் அனைவருக்கும் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், லஹிரு குமாரவுடன் நெருங்கிய தொடர்புக்கொண்ட வீரர்களை கண்டறிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்கிந்திய தீவுகள் தொடருக்காக இலங்கை அணி, இன்று இரவு மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படவுள்ளது. அந்தவகையில், ஏனைய வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனையில், அவர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்படாத நிலையில், இலங்கை அணி எந்தவித தடையுமின்றி தொடருக்கு செல்லும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இலங்கை வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் தொடரை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் போது, வீரர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபையின் வைத்தியக்குழு குறிப்பிட்டுள்ளது.

லஹிரு குமாரவுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சுரங்க லக்மால் அணியில் இணைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், இந்தவிடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை இதுவரை உறுதிசெய்யவில்லை.

இலங்கை கிரிக்கெட் அணியானது, மேற்கிந்திய தீவுகள் தொடருக்காக இம்மாத மத்தியப்பகுதியில் புறப்படவிருந்த போதும், லஹிரு திரிமான்னே மற்றும் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டதால், இந்த தொடர் ஒரு வாரம் அளவிற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<