சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒழுக்க விதிகளை மீறியதற்காக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்துவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையே கொழும்பில் நடைபெற்ற முக்கோண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றின் கீழ் கடந்த வெள்ளிக்கிழமை (09) தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சமரிக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸின் 31ஆவது ஓவரில் சமரியின் பந்தை அன்னேரி டெர்க்சன் பௌண்டறிக்கு அடித்ததைத் தொடர்ந்து, ஆக்ரோஷமடைந்த அவர் தனது கண்ணாடியை மைதானத்திலேயே தூக்கி எறிந்து அதனை சுக்குநூறாக உடைத்தார்.
இதன்மூலம் சமரி அத்தபத்து, வீரர்கள் மற்றும் அவர்களது உதவி குழுக்களுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒழுங்கு விதிகளின் 2.2 பிரிவை மீறியுள்ளதாக தெரிய வந்துள்ளது. ‘சர்வதேசப் போட்டியின் போது ஆடைகள், விளையாட்டு உபகரணங்கள் அல்லது மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள பொருட்களை முறையற்ற முறையில் பயன்படுத்துதல் அல்லது சேதப்படுத்துதல்‘ என்பது இந்த பிரிவில் அடங்கும்.
- முக்கோண ஒருநாள் தொடரில் சம்பியனான இந்திய மகளிர்
- ஆறுதல் வெற்றியுடன் முக்கோண ஒருநாள் தொடரை நிறைவு செய்த தென்னாபிரிக்க மகளிர்
- 7 வருடங்களின் பின் இந்தியாவை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்திய இலங்கை மகளிர்
எனவே, குறித்த போட்டியில் மைதான நடுவர்களாக பணியாற்றிய அன்னா ஹாரிஸ், தேதுனு த சில்வா, மூன்றாவது நடுவர் லிண்டன் ஹெனிபல் மற்றும் நான்காவது நடுவர் நிமாலி பெரேரா ஆகியோர் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து அந்த போட்டியின் நடுவராக இருந்த மிஷேல் பெரேரா அவர்களிடம் புகார் அளித்துள்ளனர்.
எனவே, சமரி அத்தபத்து செய்தது ஐசிசி நடத்தை விதிப்படி தவறு என்பதால், அவருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 10 சதவீதமும், ஒரு தகுநீக்கப் புள்ளிளையும் ஐசிசி அபராதமாக விதித்துள்ளது.
அதேபோல, சமரி அத்தபத்து தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாலும், போட்டி நடுவர் மிஷேல் பெரேரா விதித்த தண்டனையை ஏற்றுக்கொண்டதாலும், இது தொடர்பாக மேலதிக விசாரணை அல்லது விசாரிப்பு நடத்தப்படாது என்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<