ஓலிம்பிக் வாய்ப்பை உறுதிசெய்தார் ஜூடோ வீரர் சாமர நுவன்

Tokyo Olympics - 2020

188

இலங்கையின் ஜூடோ நட்சத்திரமான சாமர நுவன் தர்மவர்தன 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பை உறுதிசெய்துள்ளார்.

இதன்படி, இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட ஐந்தாவது இலங்கை வீரராக இவர் இடம்பிடித்தார்.

தேசிய ஜூடோ சம்பிபயனான சாமர நுவன், 2016 றியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.  

இதன்மூலம் இலங்கை சார்பாக ஒலிம்பிக்கில் பங்குபற்றிய முதல் ஜூடோ வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொண்டார். இதனிடையே, குறித்த போட்டியில் சாமர நுவன் இறுதி 16 பேர் சுற்றுக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கையிலிருந்து எட்டு வீரர்கள் பங்கேற்பு?

இலங்கை விமானப்படை அணிக்காக விளையாடி வருகின்ற இவர், இறுதியாக 2019இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.  

அதேபோல, 2018இல் நடைபெற்ற ஐரோப்பிய ஜூடோ சம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க சாமர நுவன் உள்ளடங்கலாக ஐந்து வீரர்கள் இலங்கையில் இருந்து தகுதிபெற்றுள்ளனர்

குதிரைச் சவாரி வீராங்கனை மெதில்டா கார்ல்சன், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கிஹானி, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை, டெஹானி எகொடவெல மற்றும் பெட்மிண்டன் வீரர் நிலூக கருணாரத்ன ஆகியோரே இவ்வாறு தகுதிபெற்றுக்கொண்டனர்

இதனிடையே, நீச்சல் வீரர்கள் இருவருக்கும், மெய்வல்லுனர் வீரர்கள் இருவருக்கும் இம்முறை ஒலிம்பிக் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க…